பிரச்சனையை கிளப்பிய பிரவீன் சக்ரவர்த்தி.. க்ரீன் சிக்னல் கொடுத்தாரா ராகுல்! திமுக-காங்., குழப்பம்!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தல் வரை திமுக காங்கிரஸ் கூட்டணி தொடரும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை உறுதியாக கூறி வருகிறார். ஆனால் சில தலைவர்கள் காங்கிரஸ் தவெக கூட்டணி அமைய வேண்டும் என விரும்புவதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில் ராகுல் காந்தியின் ஆலோசகரான பிரவீன் சக்கரவர்த்தி விஜயை சந்தித்ததாக வெளியாகி உள்ள தகவல் திமுக காங்கிரஸ் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ராகுல் காந்தி சொல்லித்தான் பிரவீன் சக்கரவர்த்தி விஜயை சந்தித்தாரா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், உண்மையில் இந்த சந்திப்பு நடந்ததா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
கடந்த சில தினங்களாகவே திமுக காங்கிரஸ் கூட்டணி குறித்த பேச்சுக்கள் தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பி வருகிறது. திமுக காங்கிரஸ் கூட்டணி வலுவாகத்தான் இருக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை சொல்கிறார்.
ஆனால் மாணிக்கம் தாகூர் ஜோதிமணி உள்ளிட்ட தலைவர்கள் விஜயுடன் கூட்டணி சேரலாம் என்ற ரீதியில் பேசி வருகின்றனர். கை நம்மை விட்டு போகாது என உதயநிதி ஸ்டாலின் உறுதியாக சொல்கிறார் .இந்த நிலையில் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் விஜய்க்கு செல்வாக்கு இருக்கும் நிலையில் அதனை பயன்படுத்திக் கொள்ள ராகுல் விரும்புவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

திமுக காங்கிரஸ்
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, காங்கிரஸின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர் அறிவாலயம் சென்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசியிருந்த சூழல் முக்கியமானது. அதற்கு பிறகு உடனே பிரவீன் சக்கரவர்த்தி விஜயை சந்தித்ததாக வெளியான தகவல், கூட்டணியைச் சுற்றிய குழப்பத்தை மேலும் அதிகரித்துள்ளது. காங்கிரஸ் தரப்பு நிபுணர்கள் மற்றும் தரவு பகுப்பாய்வுக் குழுவில் சசி தரூருக்கு பதிலாக தற்போது பிரவீன் சக்கரவர்த்தி உள்ளார். ராகுல் காந்தி நெருக்கமான வட்டத்துக்குள் இருப்பவர் என்பதால், இவரின் ஒவ்வொரு அரசியல் நகர்வும், ராகுலின் அரசியல் மனநிலையுடன் தொடர்புபடுத்தப்படுவது வழக்கமாக இருக்கிறது.
பிரவீன் சக்ரவர்த்தி
ஆனால், திமுக குறித்து பிரவீனின் எதிர்மறை அணுகுமுறை கடந்த காலத்திலிருந்து வெளிப்படையான ஒன்றாகவே கூறப்படுகிறது. இதற்கு உதாரணமாக, தமிழகத்திலிருந்து பிரவீனை ராஜ்யசபாவிற்கு அனுப்ப காங்கிரஸ் தலைமை முயற்சித்தபோது, திமுக இதற்கு இணங்க மறுத்தது குறிப்பிடத்தக்கதாகும். அதன் பின்னரே ப.சிதம்பரம் ராஜ்யசபா உறுப்பினராக அறிவிக்கப்பட்டார். இப்படிப்பட்ட பின்னணியில், விஜயின் அரசியல் வருகையை பிரவீன் திறம்பட வரவேற்றிருப்பதும் திமுகவுக்கு இடையூறாகவே பார்க்கப்பட்டது.
விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்ட நெரிசலைப் பற்றியும், "தங்கள் கூட்டத்தை குறைப்பதே அவர்களுக்கு சவாலாக இருக்கிறது" என்ற பிரவீனின் கருத்தும், திமுகவின் அதிருப்தியை மேலும் அதிகரித்திருந்தது. இதனால், தற்போது அவரது விஜய் சந்திப்பு தொடர்பான செய்திகள், கூட்டணியினுள் ஏற்பட்டிருந்த நெருக்கடியை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
ராகுல் காந்தி அனுமதி?
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவருடன் ராகுலும், பிரவீன் சக்ரவர்த்தியும் அவ்வப்போது தொடர்பில் இருப்பது உண்மை தான் என்கின்றனர் டெல்லி காங்கிரஸ் வட்டாரத்தினர். "ராகுல் காந்தியிடம் தமிழகத்தில் தவெகவுக்கு அதிக ஆதரவு இருப்பதாக சுற்றியுள்ளோர் நம்பிக்கையை அளித்துவிட்டனர். அதில் முக்கியப் பங்கு பிரவீன் சக்கரவர்த்தியினுடையது. தொகுதிப் பங்கீட்டுக் குழுவின் அறிவாலயம் சந்திப்பு ராகுலுக்கு திருப்தியளிக்காத வகையில் இருந்திருக்கலாம். அதன் பின்னணியில் பிரவீன் இந்த முயற்சியில் இறங்கியிருக்க வாய்ப்பு உள்ளது" என்கின்றனர்
கூட்டணி மாற்றம்
மேலும் "திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது, தங்களுக்கு இன்னொரு கூட்டணி வாய்ப்பும் இருக்கிறது என்பதை திமுகவிடம் காட்டிக் கொள்வதற்காகவும் பிரவீன் விஜயை சந்தித்திருக்கலாம் " என்றும் கூறுகின்றனர். எது எப்படியிருந்தாலும், திமுக-காங்கிரஸ் கூட்டணியின் உறுதித் தன்மை தற்போது தெளிவு இல்லாத நிலையில் உள்ளது. காங்கிரஸின் மனநிலை, தவெகவின் அரசியல் வளர்ச்சி, திமுகவின் கூட்டணித் திட்டம் இவை அனைத்தும் வருங்கால அரசியல் சூழலை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. ஆனால், கூட்டணி தொடருமா? மாறுமா? என்ற கேள்விக்கான பதில் இப்போது யாரிடமும் இல்லை.












Click it and Unblock the Notifications