சரித்திரம் மாறுதா? தமிழக தேர்தல் 2026? சீட் ஆப் பவர் யாருக்கு? அங்கே தான் ஒரு ட்விஸ்ட்
சென்னை: தமிழக அரசியல் களம் எப்போதும் ஒரு உணர்ச்சி போராட்டமாகவே இருந்து வந்திருக்கிறது. மக்கள் மனநிலையை நேரடியாக பிரதிபலிக்கும் தன்மை கொண்டது. நம்முடைய களம்.. ஒவ்வொரு தேர்தலும் ஒவ்வொரு மாற்றங்களை தந்துள்ளது. எனினும், கடந்த 3 சட்டமன்ற தேர்தல்களை பார்த்தால், வாக்காளர்களின் சிந்தனையில் நடந்த மாற்றங்களையும் தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது.. அந்தவகையில், கடந்த 15 ஆண்டுகளில் தமிழகம் கண்ட சட்டமன்ற தேர்தல்கள், மாநிலத்தின் அதிகார மையத்தை எப்படி மாற்றியமைத்தன என்பதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்...!!
2011-ம் ஆண்டு நடந்த தேர்தல், ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை தந்தது என்றே சொல்லலாம்.. தமிழக அரசியலில் ஒரு சகாப்தத்தின் முடிவாகவும், புதிய தொடக்கமாகவும் அமைந்தது. 10 ஆண்டுகால தி.மு.க ஆட்சிக்கு எதிராக நிலவிய அதிருப்தி, கரண்ட் கட் பிரச்சனைகள், ஸ்பெக்ட்ரம் போன்ற ஊழல் புகார்கள் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

2011-ம் ஆண்டு நடந்த தேர்தல்
இந்தத் தேர்தலில் அதிமுக, தேமுதிக மற்றும் இடதுசாரிகளுடன் மெகா கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கூட்டணி மொத்தமாக 203 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் AIADMK தனியாக 150 இடங்களை கைப்பற்றி, தனிப்பெரும்பான்மை பலத்தைக் காட்டியது. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் சேர்ந்து இந்த வெற்றியை 200க்கும் மேற்பட்ட இடங்களாக உயர்த்தின.
இதில் திமுக மீதான அதிருப்தியே வெளிப்பட்டது.. வாக்கு சதவீதத்தில் அதிமுக சுமார் 38%க்கும் மேல் பெற்றது.. திமு கூட்டணி சுமார் 23% மட்டுமே பெற்றது.. இந்த தேர்தல் முழுமையாக "எதிர்ப்பு அலை" அடிப்படையில் நடந்ததாக அரசியல் வல்லுநர்கள் அப்போது கருத்து கூறியிருந்தனர்.
திமுக வெறும் 23 இடங்களை மட்டுமே பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. மற்றொருபுறம் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக 29 இடங்களைப் பிடித்து முதன்மை எதிர்க்கட்சியாக உருவெடுத்து ஆச்சரியத்தை கிளப்பியது.. இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி சுமார் 51.9% வாக்குகளைப் பெற்றது. இலவச மிக்ஸி, கிரைண்டர் போன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் அடித்தட்டு மக்களிடையே அதிமுகவை பலமாக ஊன்ற செய்து விட்டது என்று சொல்லலாம்.
2016: வரலாறு படைத்த ஜெயலலிதா
தமிழக அரசியலில் "ஆளுங்கட்சி மீண்டும் ஜெயிக்காது" என்ற 32 ஆண்டுகால வரலாற்றை 2016 தேர்தல் மாற்றி எழுதியது. ஜெயலலிதா தனித்துப் போட்டியிட்டு மீண்டும் ஆட்சியைப் பிடித்தார். முந்தைய தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் பிரிந்து சென்றாலும், மக்கள் மீண்டும் ஜெயலலிதா மீதே நம்பிக்கை வைத்தனர்.
அதிமுக 134 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக பலமான எதிர்க்கட்சியாக 89 இடங்களுடன் சட்டசபைக்குள் நுழைந்தது. அதிமுகவின் வாக்கு சதவீதம் சுமார் 40.8% ஆக இருந்தது, திமுக கூட்டணி 39.4% வாக்குகளைப் பெற்றது. இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம் மிகக் குறைவு என்றாலும், வெற்றி வாய்ப்பு அதிமுக பக்கமே இருந்தது.
இங்கு முக்கியமான இன்னொரு மாற்றம் என்னவென்றால், மக்கள் முழுமையாக மாற்றத்தை நாடாமல், நிலைத்தன்மையை விரும்பினர் என்பதே.. தனிப்பட்ட தலைமை மீது இருந்த நம்பிக்கை இந்த முடிவை தீர்மானித்தது.. ஆனால், இந்த தேர்தலுக்கு பிறகுதான் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகிய 2 பெரும் ஆளுமைகளின் மறைவு நிகழ்ந்தது, இது தமிழக அரசியலில் ஒரு பெரிய இடைவெளியை உருவாக்கியது.
2021 தேர்தல் - ஸ்டாலின் ஆட்சி
சுமார் 10 வருஷங்களுக்கு பிறகு திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த தேர்தல் இது... ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, "விடியல் பிறக்கும்" என்ற முழக்கத்துடன் தேர்தலைச் சந்தித்தது. இது ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இல்லாத முதல் பொதுத்தேர்தல் என்பதால் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
அதிமுக ஆட்சிக்கு எதிரான சோர்வு, மற்றும் மாற்றம் தேவை என்ற மனநிலை அதிகமாக இருந்தது.. எனவே திமுக கூட்டணி 159 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. அதாவது திமுக 133 இடங்களில் வெற்றி பெற்றது.. மொத்த கூட்டணியாக பார்த்தால் திமுக கூட்டணி 159 இடங்களை வென்றது.. திமுக கூட்டணி சுமார் 45.38% வாக்குகளைப் பெற்றது. கொரோனா கால மேலாண்மை மற்றும் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் போன்ற வாக்குறுதிகள் திமுகவின் வெற்றிக்குத் தூணாக அமைந்தன.
அதிமுக சுமார் 33% வாக்குகளுடன் 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.. இந்த தேர்தலில் கூட்டணிகள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.. குறிப்பாக நகர்ப்புற வாக்காளர்கள் மாற்றத்தை வலுவாக ஆதரித்தனர்..
அதேநேரம், நாம் தமிழர் போன்ற கட்சிகள் குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதத்தை அதாவது சுமார் 6.5% சதவீதம் பெற்று வளர்ந்து வரும் சக்தியாக உருவெடுத்தது.
3 தேர்தல்கள் உணர்த்திய உண்மை
மேற்கண்ட 2011, 2016, 2016 இந்த 3 தேர்தல்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழக வாக்காளர்கள் ஒரே மாதிரி முடிவுகளை எடுக்காமல், சூழ்நிலைக்கேற்ப தீர்மானிக்கிறார்கள் என்பது தெளிவாகிறது..
அதாவது 2011ல் எதிர்ப்பு அலை, 2016ல் நிலைத்தன்மை விருப்பம், 2021ல் மாற்றம் தேவை என்ற மனநிலை ஆகியவை 3 விதமான முடிவுகளை கொடுத்தன.. தலைவர்களின் நம்பிக்கை, கூட்டணிகளின் வலிமை, மற்றும் அந்த நேரத்தின் அரசியல் சூழ்நிலை ஆகியவை முக்கிய காரணங்களாக இருந்தன..
நாளை நடக்கிறது 2026 சட்டமன்ற தேர்தல்
தற்போது தமிழகம் மீண்டும் ஒரு தேர்தல் திருவிழாவின் விளிம்பில் நிற்கிறது. நாளை நடக்கப்போகும் இந்தத் தேர்தல், வெறும் ஆட்சி மாற்றத்திற்கான களமாக மட்டும் பார்க்கப்படவில்லை, மாறாக இது தமிழகத்தின் எதிர்கால அரசியல் பாதையைத் தீர்மானிக்கும் முக்கியமான தருணம் என்றே சொல்லலாம்..
இப்போதுள்ள ஆளுங்கட்சி தனது சாதனைகளை முன்வைத்துத் தேர்தலைச் சந்திக்கிறது, எதிர்க்கட்சிகள் அரசின் மீதான விமர்சனங்களை முன்வைத்து மாற்றத்தைக் கோருகின்றன.
இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது, சமூக வலைதளங்களின் தாக்கம் மற்றும் 3ம் தரப்பு சக்திகளின் வளர்ச்சி போன்றவை இம்முறை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
யாருக்கு வெற்றி? மிகப்பெரிய சர்ப்ரைஸ்
மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சனைகளே வாக்குப்பதிவின் முடிவைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைதியான முறையில் மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி, தமிழகத்தின் அடுத்த 5 ஆண்டுகள் நிர்ணயிக்கக் காத்திருக்கிறார்கள்.
இந்த முறை வாக்காளர்கள் எந்த அம்சத்தை முன்னிறுத்துவார்கள் என்பது தான் முடிவை தீர்மானிக்கும் முக்கிய காரணமாக இருக்கும்.. மாற்றமா, நிலைத்தன்மையா என்று தெரியவில்லை.. ஆனால், ஒரு முதிர்ச்சியான அரசியலை நோக்கி தமிழகம் நகர்கிறதா என்பது நாளை மக்களின் விரல் நுனியில் அடங்கியிருக்கிறது... பொறுத்திருந்து பார்ப்போம்...!!












Click it and Unblock the Notifications