விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்
சென்னை: ஒரு வார்த்தை நான் சொல்லியிருந்தால் விஜய்யே வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்திருந்தார்.
தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம் சென்னை கோயம்பேடு தலைமை கழகத்தில் நடந்தது. தமிழக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்ததும் முதல் கூட்டம் இது. தேர்தலில் 10 இடத்தில் போட்டியிட்ட தேமுதிக, ஒரு இடத்தில் மட்டும் வென்றது.

கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா முதல்முறையாக சட்டசபைக்கு சென்றார். இந்த கூட்டத்தில் பிரேமலதா பேசுகையில், நான் நினைத்திருந்தால் விஜய்யை சந்தித்திருப்பேன். ஆனால் கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்கிறேன்.
அமைச்சர் பதவிக்காக எல்லாரும் தவெக பக்கம் தாவுகிறார்கள். சோஃபா செட்டுக்கும் பெட்டிக்கும் ஆசைப்படும் கட்சி தேமுதிக இல்லை. நமக்கென ஒரு கொள்கை இருக்கிறது, கூட்டணி தர்மம் இருக்கிறது. இதே 2024 ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் இருந்த போது எல்லாரும் அதிமுகவை விட்டுவிட்டு என்டிஏ கூட்டணிக்கு சென்றார்கள்.
ஆனால் நாம் மட்டும்தான் அதிமுகவுடன் பயணித்தோம். நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் என் வீடு தேடி வந்திருந்து எனக்கு விஜய் துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார். இதுதான் உண்மை.
2014 ஆம் ஆண்டு முதல் முதலில் என்டிஏவுடன் கூட்டணி வைத்தது தேமுதிகதான். தாமரை சின்னத்தை பட்டித்தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தவர் விஜயகாந்த் என பிரேமலதா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விஜய் ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே பல்வேறு சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டன என்றும் அவர் தெரிவித்திருந்தார். தமிழக சட்டசபைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடந்தது.
இந்தத் தேர்தலில் திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்து 10 இடங்களில் போட்டியிட்டது. விருத்தாசலம்,விருதுநகர், தருமபுரி,குடியாத்தம் (தனி), சேலம் மேற்கு, போளூர், பல்லாவரம், திருத்தணி, ஓமலூர், மயிலம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது.
இதில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட பிரேமலதா மட்டும் வென்றார். மற்ற தொகுதிகளில் போட்டியிட்டவர்கள் தோல்வி அடைந்தனர். அது போல் விருதுநகரில் போட்டியிட்ட விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிட்டு வெல்வார் என எண்ணியிருந்த நிலையில் அவர் தோல்வி அடைந்தார். கடந்த எம்பி தேர்தலில் விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரனுக்கு நூலிழையில் வெற்றி கிடைக்காமல் போனது. தற்போது விருதுநகரில் தோல்வி அடைந்துவிட்டார்.
விருத்தாசலத்தில் மட்டும் தேமுதிக வென்றது எப்படி, மற்ற இடங்களில் அக்கட்சி தோல்வி அடைந்தது ஏன் என்ற கேள்வி எழுந்தது. விருத்தாசலத்தில் அதிமுக போட்டியிடாமல் பாமகவுக்கு ஒதுக்கியது தேமுதிகவுக்கு பிளஸ் பாயிண்ட்டாக அமைந்துவிட்டது என்கிறார்கள்.
இந்த தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்ய இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டது. அப்போது பேசிய பிரேமலதா, அதிமுகவுக்கு தவெக தண்டனை கொடுத்துவிட்டது என்றும் கூறியிருந்தார். அதிமுகவினரை தன் பக்கம் இழுத்து தவெகவில் சேர்த்துக் கொள்வதைத்தான் அவர் அவ்வாறு கூறியிருந்தார்.
சட்டசபையில் தேமுதிக சார்பில் பேசிய பிரேமலதா, குதிரை பேரம் குறித்தும் பேசியிருந்தார். அது போல் தவெகவின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் கலந்து கொள்ளாமல் திமுகவுடன் வெளிநடப்பு செய்தார். மேலும் ஜோதிடர் ராதன் பண்டிட்டுக்கு அரசு பதவி கொடுத்தது குறித்தும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்து ராதனுக்கு கொடுத்த பதவி திரும்ப பெறப்பட்டது.












Click it and Unblock the Notifications