விஜயகாந்த் கையை இறுகப்பிடித்து கலங்கி நின்ற பிரேமலதா.. அந்த இறுதி நிமிடங்கள்! கண்ணீருடன் பிரியாவிடை!
சென்னை: விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் இறுதி நிமிடங்களில், தேமுதிக கட்சிக் கொடி போட்ட மோதிரம் அணிந்தபடி இருந்த கேப்டன் விஜயகாந்த்தின் கைகளைப் பிடித்தபடி கண்ணீர் விட்டுக் கலங்கினார் பிரேமலதா.
தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை உயிரிழந்தார். அதையடுத்து அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரின் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, சிறிது நேரத்தில், அங்கிருந்து ஊர்வலமாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு ஏராளமான பிரபலங்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

கூட்ட நெருக்கடியை கட்டுப்படுத்தும் விதமாக அவரது உடலை தீவுத்திடலுக்கு கொண்டுசெல்ல முடிவெடுக்கப்பட்டது. அதன்படி இன்று காலை அவரின் உடல் தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. தொடர்ந்து, பல பிரபலங்களும், மக்கள் கூட்டமும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் மதியம் 2.30 மணியளவில் ஊர்வலமாக பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் வாகனத்தில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தின் இறுதிச்சடங்கில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கேஎன் நேரு, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் மத்திய அமைச்சர்கள் டிஆர் பாலு, பொன்.ராதாகிருஷ்ணன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், பெஞ்சமின், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட நேரம் நெருங்க நெருங்க, உடைந்து போய் நின்றார் பிரேமலதா விஜயகாந்த். 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், பிரேமலதா, விஜயகாந்த்தின் கால்களைப் பிடித்து கண்ணீர் விட்டபடி, அவரது கால்களைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டார்.
மேலும், மடக்கியபடி, தேமுதிக கட்சிக் கொடி போட்ட மோதிரம் அணிந்தபடி இருந்த கேப்டன் விஜயகாந்த்தின் கைகளைப் பிடித்தபடி கண்ணீர் விட்டுக் கலங்கினார். கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலம் குன்றியிருந்த விஜயகாந்த்தை, கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்ட பிரேமலதா, தன்னை விட்டு நிரந்தரமாகப் பிரியும் விஜயகாந்த்தை நினைத்து கலங்கினார். இந்தக் காட்சி அங்கிருந்தவர்களை வேதனையில் ஆழ்த்தியது.

பிறகு அவரது குடும்ப முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டது. அவரது மகன்கள் இறுதிச் சடங்குகளைச் செய்தனர். விஜயகாந்த் அணிந்திருந்த தங்கச் செயின், கறுப்புக் கண்ணாடி ஆகியவற்றை பிரேமலதா, கழற்றி எடுத்துச் சென்றார். கட்சிக் கொடி மோதிரம் அவரது கையிலேயே இருந்தது. பின்னர், விஜயகாந்த் உடல் சந்தனப் பேழையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்திற்கு தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications