இதுவரைக்கும் அண்ணி.. இனிமேல் அம்மா! பிரேமலதா எடுக்கப் போகும் அவதாரம்! அதிமுகவுக்கு பறந்த மெசேஜ்!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த் யாருடன் கூட்டணி அமைக்க போகிறார்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்த நிலையில் எங்களுக்கு யார் மரியாதை தருகிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி, தொகுதிகளை கேட்பது எங்கள் உரிமை எனக் கூறியிருக்கிறார் பிரேமலதா. அது மட்டும் அல்லாமல் விஜயகாந்த் இருந்தவரை அண்ணியாக இருந்த நான், இனிமேல் அம்மாவாக இருக்கப் போகிறேன் என கூறியிருக்கிறார்.
2026 சட்டமன்ற தேர்தல் களம் மெல்ல மெல்ல சூடு பிடிக்க ஆரம்பித்து இருக்கிறது. தமிழகத்தை ஆளும் கட்சியான திமுகவும், ஆண்ட கட்சியான அதிமுகவும் இந்த 2026 தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என தீவிரமாக காய் நகர்த்தி வருகின்றன.
திமுகவும் அதிமுகவும் தங்களுக்கு சாதகமாக கூட்டணியை வலுப்படுத்த முயற்சித்து வருகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே உள்ளன. இதில் தொகுதி பங்கீடு மட்டும் பேசப்பட்டு முடிவு செய்யப்பட வேண்டியுள்ளது.

தேமுதிக கூட்டணி
'ஆட்சியில் பங்கு' என்ற கோஷம் எழுந்தாலும், இறுதி முடிவு திமுகவின் கைகளில்தான் உள்ளது. மறுபுறம் அதிமுக கூட்டணியில் பாஜக,பாமக, தமாகா, ஐஜேகே போன்ற கட்சிகள் இடம்பிடித்துள்ளன. அதிமுக-பாமக-பாஜக கூட்டணி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த காலத்தில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக மட்டும் இன்னும் தங்களின் நிலைப்பாட்டை அறிவிக்காமல் இருந்து வருகிறது. கூட்டணி தொடர்பான முடிவை ஜனவரி 9ஆம் தேதி நடைபெறும் மாநில மாநாட்டில் அறிவிப்போம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார். ஆனால் மாநாடு முடிந்தும் பிரேமலதா இன்னும் முடிவை அறிவிக்கவில்லை.
பிரேமலதா விஜயகாந்த்
திமுகவும் அதிமுகவும் தேமுதிகவுக்கு அழைப்பு விடுத்தும், தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சரியாக நடைபெறாததால் தான் முடிவு தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது. இதனால், கடைசி நேரத்தில் அதிக தொகுதிகள் பெறும் நோக்கத்துடன் தேமுதிக மூன்று கட்சிகளான திமுக, அதிமுக, மற்றும் தமிழக வெற்றி கழகத்துடன் ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்ற தகவலும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. எந்தக் கட்சி அதிக சீட்டுகளை வழங்குகிறதோ, அதனுடன் சேர்ந்தே தேமுதிக கூட்டணி செல்லும் என்ற கருத்தும் நிலவுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல்
இந்த நிலையில் தான் கூட்டணி இறுதியாக காரணம் என்ன என்பது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த். தூத்துக்குடியில் 'உள்ளம் தேடி இல்லம் நாடி' பிரச்சாரத்தில் பேசிய அவர்," சில கட்சிகள் பணம், சாப்பாடு, மதுபானங்கள் வாங்கி கொடுத்து வீட்டிலிருந்து கூட்டிச் செல்கிறார்கள். ஆனால் கடலூர் மாநாட்டுக்கு தொண்டர்கள் சொந்த செலவில் வாகனம் எடுத்து வந்தார்கள். இதுதான் தேமுதிக, விஜயகாந்துக்கு கிடைத்த வெற்றி.
திமுக அதிமுக பேச்சுவார்த்தை
திமுகவும் அதிமுகவும் ஆட்சியில் அமருவதற்கு நாங்கள் உதவுகிறோம். அதே மரியாதையோடு யார் எங்களுக்கு உரிய இடங்களை தருகிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி. தொகுதிகளை கேட்பது எங்கள் உரிமை. தர வேண்டியது அவர்களது கடமை என்பதை திமுக அதிமுக உணர வேண்டும். 2016 சட்டமன்ற தேர்தலில் 41 இடங்களில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வென்றோம். அப்போது வெற்றி பெற்றவர்கள் சிலர் சென்றார்கள் அதைப் பற்றி கவலை இல்லை.
விஜயகாந்த்
ஆனால் இன்றுவரை தேமுதிகவும் விஜயகாந்தும் தான் உயிர் என நினைக்கும் தொண்டர்களுக்கு மரியாதை அளிக்கப்படும். 2026 தொண்டர்களுக்கான தேர்தலாக இருக்கும். சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் உள்ளாட்சித் தேர்தலில் தொண்டர்களை அரசு பகுதியில் அமர்த்துவேன். விஜயகாந்த் இருந்தவரை நான் அண்ணியாக இருந்தேன். இனிமேல் அம்மாவாக உங்களுக்கு இருப்பேன். உங்களுக்கு தாயாராக இருந்து அனைவரையும் கரை சேர்க்க வேண்டும் என்பதுதான் விஜயகாந்த் என்னிடம் விட்டுச் சென்ற கடமை" என்றார்.












Click it and Unblock the Notifications