2 நாள் பயணமாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று தமிழகம் வருகை! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
சென்னை: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இன்று (செப்டம்பர் 2) முதல் இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகை தருகிறார். அவரின் வருகையை முன்னிட்டு சென்னை, திருச்சி, திருவாரூர், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், அவர் நிகழ்சிகளில் கலந்து கொள்ளும் மாவட்டங்களில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய குடியரசுத் தலைவர் ஆன திரௌபதி முர்மு இன்று இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகை தருகிறார். சென்னை, திருச்சி, திருவாரூர், ஸ்ரீரங்கம் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இதற்காக கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து இந்திய விமானப்படைக்குச் சொந்தமான தனி விமானத்தில் புறப்படும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இன்று காலை 11.40 மணியளவில் சென்னை பழைய விமான நிலையம் வந்தடைகிறார்.

குடியரசுத் தலைவர்
அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன்பின்னர், மதியம் 12.10 மணிக்கு நந்தம்பாக்கம் வர்த்தக மையத்துக்கு சென்று, சிட்டி யூனியன் வங்கியின் 120-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகிறார். மாலை 1.35 மணிக்கு, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று ஓய்வு எடுக்கிறார். அங்கு ஆளுநர் ஆர்.என். ரவி அவரை உபசரிக்க இருக்கிறார்.
பட்டமளிப்பு விழா
நாளை (செப்டம்பர் 3) காலை 9.20 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்படும் குடியரசுத் தலைவர், 9.35 மணிக்கு பழைய விமான நிலையம் வந்து, விமானப்படை தனி விமானத்தில் புறப்பட்டு, 10.30 மணிக்கு திருச்சி வந்து சேருகிறார். அங்கு இருந்து ஹெலிகாப்டரில் திருவாரூர் செல்கிறார். அங்கு அமைந்துள்ள நீலக்குடி மத்திய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றுகிறார்.
ஸ்ரீரங்கம் தரிசனம்
திருவாரூரில் இருந்து புறப்படும் குடியரசுத் தலைவர், ஸ்ரீரங்கம் சென்று புகழ்பெற்ற ரங்கநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். பின்னர், திருச்சி விமான நிலையம் வந்து, அங்கிருந்து விமானப்படை தனி விமானத்தில் டெல்லி புறப்படுகிறார். குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு, சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்கள், ஆளுநர் மாளிகை, நந்தம்பாக்கம் வர்த்தக மையம், திருவாரூர் பல்கலைக்கழகம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு தீவிரம்
இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பற்றி ஆலோசிக்க, சென்னை விமான நிலையத்தில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், மத்திய உளவுத்துறை அதிகாரிகள், விஐபி பாதுகாப்பு பிரிவு, சென்னை காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் இந்த இருநாள் பயணம், தமிழகத்தில் அரசியல், கல்வி மற்றும் ஆன்மீக நிகழ்வுகளை ஒருசேர இணைக்கும் வகையில் சிறப்பம்சமாக அமையும் என குடியரசு தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications