'இன்னாசெய் தாரை ஒறுத்தல்..' பதவியேற்பு விழாவுக்கு மாலத்தீவு அதிபர் அழைப்பு! ட்விஸ்ட் கொடுத்த மோடி
டெல்லி: நாளை நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில், இந்த விழாவில் பங்கேற்க மாலத்தீவு அதிபருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே இரு நாடுகளுக்கு இடையே உரசல்கள் இருந்த நிலையில் இந்த அழைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், என்டிஏ கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. எனவே, ஆதரவு எம்பிக்களின் பட்டியலை கொடுத்து ஆட்சியமைக்க நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் உரிமை கோரினார். குடியரசுத் தலைவரும் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ள நிலையில், நாளை மாலை நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார்.

நேருவுக்கு பின்னர் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகும் தலைவர் என்கிற பெருமையுடன் மோடி பதவியேற்கிறார். எனவே இதனை சிறப்பிக்க நட்பு நாடுகளின் பிரதமர், அதிபர்கள் டெல்லிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் மாலத்தீவு அதிபர் முகமது முய்ஜுவும் ஒருவர். ஏற்கெனவே இந்தியாவுக்கும் அவருக்கும் பல பஞ்சாயத்துக்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
முய்ஜு அடிப்படையில் சீன ஆதரவாளர். கடந்த ஆண்டு நடைபெற்ற அந்நாட்டு நாடாளுமன்ற தேர்தலில், "நாங்கள் வெற்றி பெற்றால் மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களை வெளியேற்றுவோம்" என்று வெளிப்படையாகவே பேசி தேர்தலை எதிர்கொண்டார். அதில் வெற்றியும் பெற்றார். இதனையடுத்து தற்போது அங்கிருந்த நமது 90 ராணுவ வீரர்கள் முழுவதுமாக வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.
அதாவது, மாலத்தீவுக்கு இந்தியா சார்பில், டோர்னியர் 228 கடல் ரோந்து விமானம் மற்றும் இரண்டு எச்ஏஎல் துருவ் ஹெலிகாப்டர்கள் வழங்கப்பட்டிருந்தன. இதனை பராமரிக்கவும், இயக்கவும் மாலத்தீவு ராணுவத்திற்கு உதவ சுமார் 90 இந்திய ராணுவ வீரர்கள் அங்கு இருந்து வந்தனர். ஆனால் இவர்கள் நீண்ட காலமாக மாலத்தீவில் இருப்பது, தங்களது இறையாண்மையை பாதிப்பதாக கூறி வீரர்கள் அனைவரையும் வெளியேற்ற அந்நாட்டு அதிபர் முகமது முய்ஜு உத்தரவிட்டார்.
இது தவிர, இந்தியாவுடன் போடப்பட்ட 'ஹைட்ரோகிராஃபிக் சர்வே' ஒப்பந்தத்தை புதுப்பிக்க போவதில்லை என்றும் மாலத்தீவு அறிவித்திருந்தது. அதாவது மாலத்தீவில் உள்ள நீர்நிலைகள், பாறைகள், கடற்கரையோரங்கள், கடல் நீரோட்டங்கள் மற்றும் அலை அளவுகள் ஆகியவற்றைப் பற்றி விரிவான ஆய்வை நடத்துவதே 'ஹைட்ரோகிராஃபிக் சர்வே' ஒப்பந்தமாகும்.
கடந்த 2018 முதல் இந்த ஒப்பந்தம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால் தற்போது மாலத்தீவு அரசு இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க போவதில்லை என்று கூறிவிட்டது. இதற்கெல்லாம் ஹைலைட்டாக சீன உளவு கப்பல்களுக்கு மாலத்தீவு தொடர்ந்து அனுமதி அளித்து வருகிறது. இலங்கை இந்தி விவகாரத்தில் இந்தியாவின் பேச்சை கேட்கவில்லை. அந்த வரிசையில் தற்போது மாலத்தீவும் இணைந்திருப்பது இந்தியாவுக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இப்படியான உரசல்கள் நிலவி வரும் சூழலில்தான், மோடி பதவியேற்பு விழாவுக்கு மாலத்தீவு அதிபர் முய்ஜுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. என்னதான் முரணாக இருந்தாலும் அது நட்பு முரண் என்கிற ரீதியில் முய்ஜு அழைக்கப்பட்டிருக்கிறார் என பிரதமர் அலுவலகத்திலிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாலத்தீவு தவிர வங்கதேசம், இலங்கை, பூட்டான், நேபாளம், மொரீஷியஸ் மற்றும் சீஷெல்ஸ் உள்ளிட்ட அண்டை நாடுகளின் தலைவர்களுக்கும் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications