உக்ரைன் போரால் உளுந்தூர்பேட்டை வரை பாதிப்பு.. பாமாயில், சன்ப்ளவர் ஆயில் விலை கிடுகிடு.. எண்ட்கார்ட் ?
சென்னை : உக்ரைன் போர் காரணமாக அந்நாட்டில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பாமாயில் மற்றும் சன்ப்ளவர் ஆயில், நல்லெண்ணெய், விலை தீடிரென்று உயர்ந்துள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போரை தொடங்கி 20 நாட்கள் ஆகியுள்ள நிலையில் நாளுக்கு நாள் போர் தீவிரமடைந்து வருகிறது. பீரங்கிகள், ஏவுகணைகள் மூலம் குண்டு மழை பொழிந்து வரும் நிலையில், மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
குறிப்பாக வல்லரசு நாடான ரஷ்யா சிறிய நாடான உக்ரைன் மீது போர் தொடுத்திருந்தாலும், அதனை அவ்வளவு சுலபமாக கைப்பற்றி விட முடியவில்லை. அந்த அளவுக்கு உக்ரைனும் ரஷ்யா மீது எதிர் தாக்குதல் நடத்தி வருகிறது.

உக்ரைனுக்கு உதவி
ரஷ்யாவின் படைகள் உக்ரைன் நாட்டில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் தலை நகர் கீவ்வை கைப்பற்ற மும்முரம் காட்டுகின்றன. பல நகரங்களை ரஷ்யா கைப்பற்றிய போதும் தலைநகரை கைப்பற்ற முடியவில்லை ராணுவத்தினருடன் மக்களும் சேர்ந்து ஆயுதம் ஏந்தி போராடி வருவது ரஷ்யாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பல உலக நாடுகளும் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கி உதவி வருவதும் கோரி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

நேட்டோ மறுப்பு
உக்ரைன் நகரங்கள் மீது ரஷிய போர் விமானங்கள் குண்டு மழை பொழிவதை தடுக்க உக்ரைன் வான்பரப்பை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டுமென நேட்டோ நாடுகளை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் அப்படி செய்தால் ரஷியாவுக்கும், நேட்டோ நாடுகளுக்கும் இடையே நேரடி போர் ஏற்படும் என கூறி நேட்டோ நாடுகள் அதை மறுத்து வருகின்றன.

போர் தீவிரம்
இந்நிலையில் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ராணுவம் நடத்திவரும் தாக்குதல் காரணமாக இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சன்ஃபிளவர் ஆயில், பாம்ஆயில் உள்ளிட்ட சமையல் எண்ணெய் வைகளில் விலை திடீரென அதிரடியாக உயர்ந்து உள்ளது. இதனால் ஹோட்டல்கள் டீகடைகள், பேக்கரிகளில் தயாரிக்கப்படும் உணவு பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய சூரியகாந்தி எண்ணெய் எனப்படும் ரீஃபைண்ட் சன் ஃப்ளவர் ஆயில் ) 70 சதவிகிதம் உக்ரைனில் இருந்தும் 20 சதவிகிதம் ரஷ்யாவிலிருந்தும் தான் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.

எண்ணெய் விலை உயர்வு
தற்பொழுது உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் 20 நாட்களாக நீடித்து வருவதால் சமையல் எண்ணெய் இறக்குமதியானது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக மக்கள் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்த கூடிய ரீபைண்ட் ஆயில், பாமாயில், கடலெண்ணெய் போன்றவைகளின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, கடந்த வாரம் நல்லெண்ணெய் கிலோ 230 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், நிலையில் தற்போது கிலோவுக்கு 50 உயர்ந்து 280 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த வாரம் கடலை எண்ணெய் கிலோ 150 ரூபாய்க்கு விற்ற நிலையில் தற்போது 20 ரூபாய் உயர்ந்து 170 ரூபாய்க்கு விற்பனையாகிறது.












Click it and Unblock the Notifications