“பல்லக்கு தடை சரியானது.." அதிரடியாக அறிக்கை வெளியிட்ட அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம்!
சென்னை: தருமபுரம் ஆதீன மடத்தில் பட்டினப் பிரவேசம் விழாவில் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு, மனிதனை மனிதன் சுமக்கக்கூடாது என்ற திராவிடர் கழகத்தின் கோரிக்கையின் பேரில், தடை விதிக்கப்பட்டது.
பட்டினப் பிரவேசம் நிகழ்விற்கு தடை விதிக்கப்பட்டதற்கு, மதுரை ஆதீனம் உள்ளிட்டோர், இந்து அமைப்பினர், பா.ஜ.கவினர் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பட்டினப் பிரவேசத்திற்கு தடை விதித்த தமிழக அரசை பாராட்டுவதாகவும், அரசின் செயல் சரியான சமத்துவ இறைப்பணி எனவும் தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை கடந்த 1970ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி சட்டப்பேரவையில் நிறைவேற்றினார். எனினும் பல்வேறு வழக்குகள் காரணமாக இந்த சட்டத்தை அப்போது செயல்படுத்த முடியவில்லை. இதனை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் என்று கருணாநிதி குறிப்பிடுவார்.
51 ஆண்டுகள் கழித்து மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகே அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களை கோயில் பணியாளர்களாக நியமனம் செய்தார் மு.க.ஸ்டாலின். இதனால், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் தி.மு.க அரசுக்கு ஆதரவாகவே இருந்து வருகின்றனர்.

சமத்துவத்திற்கு எதிரான தருமபுர ஆதீனம்
இந்நிலையில் தருமபுரம் ஆதீன பல்லக்கு சர்ச்சை தொடர்பாக தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர் ரங்கநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், குன்றக்குடி ஆதீனம் முதல் தமிழகத்தின் அனைத்து ஆதீனங்களும், காலத்துக்கும், கடவுளுக்கும் ஒவ்வாதது என்று கைவிட்ட பட்டினப் பிரவேசம் என்ற மனிதனை, மனிதன் தூக்கும் பல்லக்கு மரபை மீண்டும் கையிலெடுத்து தமிழகத்தின் சமத்துவ மரபுக்கு எதிராக நிற்கிறார் தருமபுர ஆதீனம்.
சைவம், தமிழ் என்று பேசும் தருமபுர ஆதீனம் சிதம்பரம் நடராசர் கோயிலில் கடந்த 13 ஆண்டுகளாக நடந்துவரும், தமிழில் தேவாரம், திருவாசகம் பாடும் போராட்டத்தை ஒரு நாளும் ஆதரிக்கவில்லை. தேவாரம், திருவாசகம், தமிழுக்காகப் பேசவில்லை என்பது மட்டுமல்ல, குமூடிமலை சிவனடியார் ஆறுமுகசாமியை , சிதம்பரம் தீட்சிதப் பார்ப்பனர்கள் தாக்கிய போதும் மவுனம் காத்தவர்தான் தருமபுர ஆதீனம். எனக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் விளையாட்டு
மேலும், தமிழ் மக்களின் பணத்தில் வாழும் தருமபுர ஆதீனம், தமிழக மக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் ஆளுநர் கே.என்.ரவியை மடத்துக்கு அழைத்து விழா நடத்துகிறார். தொடர்ந்து ஆளுநருக்கு பாதுகாப்பில்லை என பிரச்சாரம் செய்யப்படுகிறது. மதுரை ஆதீனம் ஆளுங்கட்சியினருக்கு எதிராக பா.ஜ.க ஆதரவு இராம ரவிவர்ம குமார், இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து பேசுகிறார்.
ஆளுநர் மீதான மக்களின் எதிர்ப்பை திசைதிருப்பும் விதமாகவே பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும், ஹெச்.ராஜாவும் , பட்டினப் பிரவேச பிரச்சனையை வைத்து தமிழக அரசிற்கு எதிராகப் பேசுகிறார்கள் என ரங்கநாதன் குறிப்பிட்டுள்ளார்.

எந்த மடாதிபதியும் செய்யவில்லை
தி.மு.க அரசு, சைவத்திற்கு எதிரானது போன்ற ஒரு சித்திரத்தை உருவாக்க ஆதீனமும் - பாஜக-வும் இணைந்து முயற்சிக்கிறார்கள். உண்மையில் ஆன்மீகத்தில் சமத்துவத்தை உருவாக்கி, ஆன்மீகத்தை காத்தது திராவிட அரசு. கோயிலில் அனைத்து சாதி தமிழர்களை அழைத்துச் சென்றது முதல் கருவறையில் பூஜை செய்ய வைத்தது வரையிலான வரலாற்று சாதனைகளை நிகழ்த்தியது திராவிட இயக்கம்தானே தவிர எந்த மடாதிபதியும் அல்ல எனவும் தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தினர் சாடியுள்ளனர்.
Recommended Video

கண்ணியம் காப்பாற்றும் கடமை
பட்டனப் பிரவேசத் தடை என்பது, ஆன்மீக நடவடிக்கை அல்ல. அரசியல் சட்ட நடவடிக்கை. இறைவன் விரும்பும், மனித நேய , சமத்துவ நடவடிக்கை. அரசியல் சட்டப்படி, தனிமனிதனின் கண்ணியத்தை காப்பாற்ற வேண்டிய அரசியல் சட்டக் கடமை தமிழக அரசுக்கு உண்டு.
தேவதாசி முறை, உடன்கட்டை ஏறுதல், பால்ய விவாகம், மனிதக் கழிவை மனிதனே அகற்றல், கை ரிக்ஷா ஒழித்தல் போன்ற அரசியல் சட்ட விரோத நடவடிக்கை போன்றதே மனிதனை, மனிதன் சுமக்கும் பல்லக்கு தூக்கும் நிகழ்வு. எனவே பட்டணப் பிரவேசத் தடை சரியான நடவடிக்கையே என அரசுக்கு ஆதரவாக அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications