எனது சாதனைகளை நானே முறியடித்து வருகிறேன்! மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு
சென்னை: தமிழகத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழாவில் வணக்கம் எனக் கூறி தனது உரையை தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடியின் தை பிறந்தால் வழி பிறக்கும் என்கிற பழமொழியை சுட்டிக்காட்டி உரையாற்றினார்.
Recommended Video
கடந்த ஆண்டு நாடு முழுவதும் 75 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதில் தமிழகத்துக்கு 11 மருத்துவ கல்லூரிகள் ஒதுக்கப்பட்டன.
மருத்துவ கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களை தேர்வு செய்து அந்த மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகளை தொடங்க தமிழக அரசு முடிவு செய்து திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் தலா ஒரு மருத்துவ கல்லூரி வீதம் 11 மருத்துவ கல்லூரிகளை தொடங்குவதற்கான பணிகள் நடைப்பெற்று முடிந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி
ஒவ்வொரு கல்லூரியிலும் தலா 150 மாணவர்கள் வீதம் 1,650 மாணவர்களை சேர்ப்பதற்கு அகில இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியதோடு அனைத்து கல்லூரிகளையும் மத்திய குழு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தது. அந்த ஆய்வின்போது சில குறைகள் சுட்டிக்காட்டப்பட்டது. அவற்றையும் தமிழக அரசு சீர் செய்ததை அடுத்து கல்லூரிகளை தொடங்க மருத்துவ கவுன்சில் அனுமதியளித்து உத்தரவிட்டது. பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று அவற்றை காணொலி காட்சி மூலம் டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தை பிறந்தால் வழி பிறக்கும்
வணக்கம் கூறி தனது உரையை தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழியை நினைவுபடுத்தி தை மாதத்தில் தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் திறக்கப்பட்டு உள்ளதாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் மருத்துவ திட்டங்களுக்கும் 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் எனவும், சுகாதாரத் துறையில் அதிக அக்கறை செலுத்துவதற்கு கொரோனா முக்கிய காரணம் என்றும், மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் மூலம் மக்களுக்கு செலவுகள் குறைந்து உள்ளது என்றும் கூறினார்.

தமிழ் மீது பற்று
தமிழ் மீதும் தமிழக மக்கள் மீதும் அளவு கடந்த மரியாதை உள்ளது எனக் கூறிய பிரதமர் மோடி, தாய் மொழிக் கல்வியைத்தான் நமது அரசு ஊக்குவிக்கிறது எனவும் தமிழ் சார்ந்த படிப்புகளில் செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் கூறினார். மேலும் தமிழகத்தில் இருந்து பொறியியல் துறையில் சாதனை படைத்தவர்கள் அதிகம் என பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்புகளுக்கு மத்திய அரசு தனது பங்களிப்பை முழுமையாக செய்யும் என கூறினார்.

தமிழகத்தில் சாதனை
மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடுகளில் இந்திய வருபவர்களுக்கு தேவையான வசதிகள் உள்ளன என பேசிய பிரதமர் மோடி, ஒரு மாநிலத்தில் ஒரே நேரத்தில் பதினொரு மருத்துவக் கல்லூரிகள் திறக்கபட்டது இதுவே முதல் முறை எனவும், உத்தர பிரதேசத்தில் ஒரு நாளில் ஒன்பது மருத்துவக் கல்லூரிகளை திறந்ததே சாதனையாக இருந்தது எனக் கூறிய பிரதமர் மோடி தனது சாதனையை தானே முறியடித்துள்ளதாகக் கூறினார். மேலும் அதிக அளவிலான மருத்துவ கல்லூரிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன எனவும் பிரதமர் கூறினார்.

மருத்துவர்களுக்கு பற்றாக்குறை
நாட்டில் மருத்துவர்களுக்கு பற்றாக்குறை உள்ளது எனக் கூறிய பாரத பிரதமர் நரேந்திர மோடி, 7 ஆண்டுகளில் மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை 54% அதிகரித்துள்ளது எனவும், 2014-ம் ஆண்டு நாட்டில் 7 எய்ம்ஸ் மருத்துவமனைகள்தான் இருந்தன எனவும் நாட்டில் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை 22 ஆக அதிகரிகக்கபட்டுள்ளது எனக் கூறினார்.












Click it and Unblock the Notifications