மாதம் 3000 தரும் மத்திய அரசு.. ஆர்வம் காட்டும் தமிழக மக்கள்.. எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா?
சென்னை: பிரதமரின் 'ஷ்ரம் யோகி மான்தன்' என்ற திட்டம் நாடு முழுவதும் தற்போது செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் எப்படி என்றால், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்குவதற்காக மத்திய அரசாங்கத்தால் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தன்னார்வ மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் பலருக்கு பலன் தருகிறது. இந்நிலையில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் தமிழகத்தில் பதிவு செய்தவர்கள் எத்தனை பேர் என்ற தகவல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசால் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான் தன் யோஜனா என்ற திட்டம், ஓய்வு பெற்ற அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்கும் ஒரு ஓய்வூதியத் திட்டமாகும். இந்தத் திட்டம் 60 வயதை அடையும் பயனாளிகளுக்கு நிலையான மாத ஓய்வூதியமாக ரூ. 3,000 வழங்கும் திட்டம் ஆகும் அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்காக 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திட்டம் மூலம் 90% அமைப்பு சாரா தொழிலாளளுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது.

பிரதமரின் 'ஷ்ரம் யோகி மான்தன்' திட்டத்தை பொறுத்தவரை தன்னார்வ மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டமாகும். அமைப்புசாரா தொழிலாளர்கள் ஓடோடி உழைத்துவிட்டு, முதுமையை எட்டும்போது, அவர்களுக்கு நிதி பாதுகாப்பை உறுதி செய்யும். தள்ளாத வயதில் பிறரின் உதவியை எதிர்பார்க்காமல் நிலையான ஓய்வூதியத்துடன் வாழ முடியும்.
பிரதமரின் 'ஷ்ரம் யோகி மான்தன்' திட்டத்தில் சேருவதற்கு மாத வருமானம் ரூ.15 ஆயிரத்துக்கு குறைவாக இருக்கும் 18 முதல் 40 வயதுக்கு உட்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் தகுதி உடையவர்களாக ஆவார்கள். இதில் சேருபவர்களுக்கு 60 வயதுக்கு பிறகு, மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் குறைந்தபட்ச ஓய்வூதியமாக மத்திய அரசால் வழங்கப்படுகிறது.
சந்தாதாரரின் வயதுக்கு ஏற்ப செலுத்தவேண்டிய மாதாந்திர பங்களிப்பை கணினி தானாகவே கணக்கிடும். அந்த தொகை ஒவ்வொரு மாதமும் ரூ.55 முதல் ரூ.200 வரையிலும் செலுத்தும்படி இருக்கும். அதே அளவுக்கான தொகையை மத்திய அரசும் தன் பங்களிப்பாக அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்காக வழங்கும். நாடு முழுவதும் 4 லட்சத்துக்கும் அதிகமாக உள்ள மத்திய அரசின் பொது சேவை மையங்கள் மூலமாக இந்த திட்டத்துக்கு பதிவு செய்ய முடியும். மேலும் www.maandhan.in என்ற இணையதளத்தில் பிரதமரின் 'ஷ்ரம் யோகி மான்தன்' திட்டத்திற்கு நேரடியாகவும் பதிவு செய்து கொள்ள முடியும்.
பிரதமரின் 'ஷ்ரம் யோகி மான்தன்' பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் நாடு முழுவதும் 52 லட்சத்துக்கும் அதிகமான அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான இந்த பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் தமிழகத்தில் பதிவு செய்தவர்கள் எத்தனை பேர் என்ற விவரத்தையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் 69 ஆயிரத்து 98 பேர் பதிவு செய்திருக்கிறார்கள். இவர்களில், சரி பாதிக்கும் அதிகமாக 36 ஆயிரத்து 86 பேர் பெண்கள் ஆவார். இது 52.21 சதவீதம் ஆக உள்ளது. ஆண்கள் 33 ஆயிரத்து 10 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 2 பேரும் பதிவு செய்திருக்கிறார்கள். இவர்களுக்கு வயதான காலத்தில் மாதம் மாதம் 3000 ரூபாய் கிடைக்கும். இதுவரை பதிவு செய்யாதவர்கள் எப்போது வேண்டுமானாலும் பதிவு செய்து கொள்ளலாம். முதிய வயதில் நிம்மதியாக வாழ முடியும்.












Click it and Unblock the Notifications