வாடகை பஸ்கள்.. காலி பேருந்துக்கு காசு வருமா? கூடுதல் செலவால் அரசுக்கு இழப்புதான்: தொழிற்சங்கங்கள்
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி நெரிசலை தவிர்க்க தனியார் பஸ்களை வாடகைக்கு பெற்று தமிழக அரசு இயக்கி வருவதற்கு தொழிற்சங்க நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அத்துடன், முக்கிய கோரிக்கை ஒன்றையும் தமிழக அரசுக்கு விடுத்துள்ளனர்.
தீபாவளி பண்டிகைக்கு பயணிகளின் வசதிக்காக தனியார் பேருந்துகளை வாடைகைக்கு அமர்த்தியும் இயக்க உள்ளதாகவும், பேருந்துகளை வாடகைக்கு எடுப்பதற்கு வெளிப்படையான டெண்டர் விடப்பட்டு, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.51.25 பைசா என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்திருந்தார்.

அரசு பேருந்து: அரசுப் பேருந்தில் கொடுக்கும் கட்டணத்தையே, தனியார் பேருந்திலும் கொடுப்பதால் பொது மக்களுக்கு எந்த சிரமமும் இருக்காது என்றும், தனியார் பேருந்துகள் அவரவர் ஓட்டுநரை வைத்து இயக்குவார்கள், அரசு ஏற்பாடு என ஒரு ஸ்டிக்கர் மட்டும் ஒட்டப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
அதன்படியே, நெரிசலை தவிர்க்க மாநிலம் முழுவதும் பல ஆயிரம் அரசு பஸ்களை இயக்கும் போக்குவரத்துக் கழகம், 200க்கும் மேற்பட்ட தனியார் பஸ்களையும் வாடகைக்குப் பெற்று இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனியார் பேருந்து: ஆனால் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவது தனியார்மயமே. இதனை போக்குவரத்துத்துறை கைவிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன், சிபிஎம் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்திருந்தனர்.
தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவது, எதிர்காலத்தில் பொதுப்போக்குவரத்தை தனியாருக்கு விடும் நிலையை ஏற்படுத்திவிடும் என்றும், அரசு பேருந்துகளை கூடுதலாக இயக்குவதற்கு திட்டமிடுவதற்கு பதிலாக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவது, அரசுக்கோ, பொதுமக்களின் நலனுக்கோ வலுசேர்க்காது, இது எதிர்காலத்தில் பொதுப்போக்குவரத்தை தனியாருக்கு விடும் நிலையை ஏற்படுத்திவிடும்.
அரசு போக்குவரத்து: எனவே, தமிழக அரசு போக்குவரத்து துறையில், நேரடியாகவோ மறைமுகமாகவோ தனியார் துறையை அனுமதிக்கக் கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், போக்குவரத்துக் கழக தொழிற்சங்க நிர்வாகிகளும் இதற்கான அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். அவர்கள் கூறும்போது, "இந்த பஸ்களுக்கு 1 கி.மீக்கு ரூ.55 வழங்கி ஏற்பாடு செய்துள்ளனர். மதுரையில் தனியாரிடம் 2 பஸ்கள் பெறப்பட்டிருக்கிறது.. சென்னை செல்ல ஒரு பஸ்சுக்கு ரூ.55 ஆயிரம் வழங்க வேண்டும். அரசு பஸ்சில் ஒரு டிக்கெட்டின் விலை கேளம்பாக்கத்திற்கு ரூ.400, கோயம்பேடுக்கு ரூ.410 வசூலிக்கப்படுகிறது. இதே கட்டணத்தை தனியார் பஸ்ஸும் வசூலிக்கும்.
அரசுக்கு இழப்பு: பண்டிகை நேரத்தில் சென்னைக்கு பஸ் காலியாகத்தான் செல்லும். திரும்பி வரும்போது மொத்த பயணிகளுக்கும் ரூ.22, 500 அளவுக்கே வசூலாகும். பஸ்ஸில் பாதியளவு நிரம்பினாலும் ரூ.40 ஆயிரம் வரையே வசூலாக வாய்ப்புள்ளது..
இதேநிலை தீபாவளிக்கு முன்பும் பின்பும் என ஒரு வாரத்திற்கு செலவாகும் என்பதால், தமிழக அரசுக்கு நிதியிழப்பே ஏற்படும்.. இதுக்கு பதிலாக எல்லா மாவட்டங்களிலும் புதிய தாழ்தள பஸ்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.. அந்த பஸ்களை இயக்கினால் அரசுக்கு இழப்பு ஏற்பட வாய்ப்பில்லை" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications