தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு: அமலாக்க துறை உதவி இயக்குநர் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், செப்டம்பர் 17ஆம் தேதி அமலாக்கத்துறை உதவி இயக்குநர் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்தரன் தொடர்பான வழக்கில் அமலாக்கத் துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே அபாரதம் விதித்திருந்தது.
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறி அமலாக்க துறைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த வழக்கில் செப்டம்பர் 17ஆம் தேதி அமலாக்கத்துறை உதவி இயக்குநர் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை டாஸ்மாக் அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் சோதனை நடத்தினார்கள். அப்போது டாஸ்மாக் தொடர்புடைய அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்கள் சம்பந்தப்பட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. முக்கியமாக பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர்கள் விக்ரம், ரவீந்திரன் உள்ளிட்டோர் இடங்களில் சோதனை நடைபெற்றது. இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.
இவர்கள் அனைவரும் திமுகவினருக்கு நெருக்கமானவர்கள் என்றும், அவர்களை குறிவைத்து சோதனை நடத்தப்பட்டதும் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. முக்கியமாக விக்ரம், ரவீந்திரன் வீடு அலுவலகங்களுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம், ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்ட 3 பேரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அவர்களிடமே திருப்பி ஒப்படைக்க வேண்டும். அவர்கள் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க தடை விதித்து உத்தரவிட்டனர். ஆனால் அமலாக்கத்துறையினர் ஆவணங்களை திருப்பி ஒப்படைக்காமல், ஆகாஷ் பாஸ்கரனுக்கு ஆவணங்கள் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை மேல் முறையீட்டு அதிகாரி மூலம் சம்மன் சென்றதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக ஆகாஷ் பாஸ்கரனின் வழக்கறிஞர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. நீதிமன்றத்தின் உத்தரவு அமல்படுத்தவில்லை என்பதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ரமேஷ், லட்சுமி நாராயணன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமலாக்கத்துறை உதவி இயக்குநர் விகாஸ் குமார் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளது.
வருகிற செப்டம்பர் 17 ஆம் தேதி விகாஸ் குமார் நேரில் ஆஜராக வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. ஏற்கனவே அமலாக்கத்துறையினர் உரிய பதில் அளிக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் ரூ.30,000 அபராதம் விதித்து.
தற்போது நீதிமன்றத்தின் உத்தரவுகளை பின்பற்றாத காரணத்தால் நேரடியாக ஆஜராக உத்தரவிட்டுள்ளனர். இதனிடையே நீதிமன்றம் அபராதம் விதித்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications