K Rajan: "பண பிரச்சனை எதுவும் இல்லை!"தயாரிப்பாளர் கே. ராஜன் தற்கொலை.. உருக்கமாக பேசிய ஏ.எல். அழகப்பன்!
சென்னை: தமிழ் சினிமாவில் மூத்த தயாரிப்பாளரான கே. ராஜன் எதிர்பாராத விதமாகத் தற்கொலை செய்து கொண்டார். அடையாறு ஆற்றில் குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே அவரது மரணம் தொடர்பாகத் தயாரிப்பாளர் அழகப்பன் சில முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். தொடர்ந்து சினிமா நிகழ்ச்சிகளில் பேசி வந்த ராஜன், திடீரென இந்த முடிவை எடுத்தது ஏன் என்பதே இப்போது பலரது கேள்வியாக இருக்கிறது.
தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர்களில் ஒருவர் கே.ராஜன். 85 வயதான இவர், சினிமா மேடைகளில் அதிரடி கருத்துகளைச் சொல்வதை வாடிக்கையாகக் கொண்டு இருந்தார். ஹீரோக்கள் அதிகச் சம்பளம் வாங்குவதால் தயாரிப்பாளர்கள் படும் கஷ்டங்கள் குறித்தும் கூட ராஜன் வெளிப்படையாகப் பேசி வந்துள்ளார்.

ராஜன் தற்கொலை
இதற்கிடையே ராஜன் இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். அவரது உடலை மீட்ட தீயணைப்புத் துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், தயாரிப்பாளர் கே.ராஜன் மரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது மரணத்திற்கு என்ன காரணம் எனத் தெளிவாகத் தெரியாத சூழலில், இது குறித்து தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பன் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
புதிய தலைமுறை சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "தயாரிப்பாளர் சங்கத்தில் எல்லாம் என்னுடன் இணைந்து வேலை செய்துள்ளார். எனது நெருங்கிய நண்பர் அவர்! விநியோகிஸ்தர்கள் சங்க தலைவராக வர பெரும் துணையாக இருந்தவர். சினிமா தயாரிப்பாளர்களுக்கும் விநியோகிஸ்தர்களும் பிரச்சினை வராமல் இருக்க நான் தான் முதலில் விநியோகிஸ்தர்கள் சங்கத்தை ஆரம்பித்தேன். அதற்குப் பக்கபலமாக இருந்தார்.
ரொம்பவே கோவக்காரர். ஆனால் ரொம்பவே நல்லவர்.. நிறைய பேருக்குப் பல உதவிகளைச் செய்துள்ளார். ஒரு படம் வெளியாவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் அதைத் தீர்க்கத் துணிவோடு பல உதவிகளைச் செய்து, உறுதுணையாக இருந்தவர். அவர் பல தயாரிப்பாளர்களுக்கு உதவிகளைச் செய்திருக்கிறார்.
நிதிச் சிக்கல் இல்லை
அவர் பள்ளிக்கூடம் ஒன்றையும் நடத்தி வருகிறார். மேலும், அரசியலிலும் பல கட்சிகளில் இருந்துள்ளார். அவருக்கு வருமானத்திற்கு எந்தவொரு குறையும் இருந்ததே இல்லை. குடும்பப் பிரச்சினை ஏற்பட்டு ஓராண்டு ஹோட்டலில் தங்கி இருந்தார். பெண் வீட்டில் இருந்து அவருக்கு உணவு மட்டும் வரும். பணப்பிரச்சினையால் அவர் இந்த முடிவை எடுத்திருக்க வாய்ப்பில்லை. பள்ளியில் இருந்து கணிசமான தொகை வருமானம் வருவதால் அதில் பிரச்சினை இருந்தது இல்லை.
ஏற்க முடியவில்லை
அவர் யாரிடமும் கடன் வாங்கியதாகவும் எனக்குத் தெரியாது. படம் எடுத்தபோதும் கூட பணம் இல்லாமல் தடுமாறியது கிடையாது. நடிகராக வேண்டும் என்ற குறிக்கோளோடு சினிமாவுக்கு வந்த சினிமா வெறியர் அவர். ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பது குழப்பமாகவே இருக்கிறது. அவரது குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ள முயற்சிகளை எடுத்து வருகிறோம். மரணம் என்பது தவிர்க்க முடியாதது. ஆனால், இதுபோன்ற தற்கொலை சம்பவங்களை ஏற்கவே முடிவதில்லை" என்றார்.
ராஜன்
கடந்த 40 ஆண்டுகளாகவே தமிழ் சினிமாவில் ஆக்டிவாக இருந்து வந்தவர் கே ராஜன். இவர் 1993ல் வெளியான 'பிரம்மச்சாரிகள்' படத்தின் மூலம் தயாரிப்பாளரானார். நடிகராக வேண்டும் என்பதே இவரது கனவாக இருந்தாலும் கூட பல வெற்றிப் படங்களை அவர் தயாரித்திருக்கிறார். மேலும், நம்ம ஊர் மாரியமம்மா, உணர்ச்சிகள் ஆகிய இரு படங்களை இயக்கியும் இருக்கிறார்.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாகச் சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.












Click it and Unblock the Notifications