ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா.. மாநில அரசுகக்கு அதிகாரம் உள்ளதா? தெளிவாக சொன்ன ப.சிதம்பரம்
ஆன்லைன் சூதாட்ட தடை விவகாரத்தை பொறுத்தவரை இது ஒரு குற்றவியல் சட்டம் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை விவகாரத்தை பொறுத்தவரை இது ஒரு குற்றவியல் சட்டம். இதை செய்தால் இது குற்றம் என்று சட்டம் சொல்கிறது. எனவே இதை குற்றவியல் பிரிவு சட்டமகாத்தான் பார்க்க வேண்டும். குற்றவியல் விவகாரத்தில் சட்டம் இயற்றுவது முழுக்க முழுக்க மாநில அரசின் உரிமை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதாவை தமிழக அரசு சட்டப்பேரவையில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்த மசோதாவை 4 மாதங்களுக்கும் மேலாக கிடப்பில் போட்டிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்று முன் தினம் திருப்பி அனுப்பினார்.
மசோதாவை திருப்பி அனுப்பியது தொடர்பாக ஆளுநர் ஆா்.என்.ரவி கூறுகையில், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடைவிதிக்கும் சட்டம் கொண்டுவர தமிழக சட்டசபைக்கு அதிகாரம் இல்லை சட்டத்தை இயற்ற தமிழக அரசுக்கு முகாந்திரம் இல்லை என்றும் ஆளுநர் கூறியுள்ளதாக தெரிகிறது.

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா
சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு 139 நாட்கள் கழித்து அந்த மசோதா திருப்பி அனுப்பப்பட்டது, அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆளுநரின் நடவடிக்கைக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனங்களையும் பதிவு செய்தனர். இதையடுத்து நேற்று கூடிய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைப்பது முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ப சிதம்பரம் பேட்டி
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் சட்டம் கொண்டு வர தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று ஆளுநர் கூறியிருப்பது பேசு பொருளாகியுள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பியுமான ப.சிதம்பரம், மாநில அரசுக்கு அதிகாரம் இருப்பதாக கூறியுள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாநிலங்களவை எம்.பியும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் கூறியதவது:-

திருப்பி அனுப்பியது தவறு
இது ஒரு குற்றவியல் சட்டம். இதை செய்தால் இது குற்றம் என்று சட்டம் சொல்கிறது. குற்றவியல் பிரிவு சட்டமகாத்தான் இதை பார்க்க வேண்டும். குற்றவியல் விவகாரத்தில் சட்டம் இயற்றுவது முழுக்க முழுக்க மாநில அரசின் உரிமை. சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பியதை அவர் திருப்பி அனுப்பியது தவறு. சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும்.

எந்தவித அச்சுறுத்தலும் இல்லை
வடமாநிலத்தவர்கள் தமிழகத்தில் தாக்கப்படுகிறார்கள் என்பது புது புரளி. இதனை அரசியல் ஆதாயத்திற்காக பாஜக, ஆர்எஸ்எஸ் போன்றவை தூண்டி விடுகின்றன. தமிழ்நாட்டில் வாழும் வெளி மாநில மக்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. வதந்திகளை பரப்புவோர் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சி அடைந்து இருப்பதாக கூறுவது தவறான கருத்தாகும்.

வளர்ச்சி வேறு... வீக்கம் வேறு
இது வளர்ச்சி இல்லை. வீக்கம்.. வளர்ச்சி என்பது வேறு... வீக்கம் என்பது வேறு... தவறான பிரச்சாரங்களின் மூலம் தமிழகத்தில் வளர பாஜக முயற்சி செய்கிறது. தமிழகத்தில் இது ஒருபோதும் எடுபடாது. பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் அடக்கி வாசிக்கிறார்கள். ஆனால், பாஜக ஆட்சி நடைபெறாத மாநிலங்களில் ஆளுநர்கள் வைஸ்ராய்க்ள் போல செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications