ஒன்னு விடமாட்டோம்.. 100% எல்லா வாக்குறுதியும் நிறைவேற்றுவோம்.. ஸ்டைலாக உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை: அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக மூத்த நிர்வாகிகள் 500 பேருக்கு பொற்கிழிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் நாசர், ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுகவின் வேர் கருணாநிதி தான். இன்றைக்கு ஆலமரமாக நிற்க கூடிய திமுகவுக்கு உழைக்கும் மூத்த நிர்வாகிகளுக்கு கவுரவம் செய்யும் விழா தான் இது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், நான் முதலமைச்சராகவும், மற்றவர்கள் அமைச்சர்களாகவும் , உள்ளாட்சி பிரதிநிதிகளாகவும் இருப்பதற்கு முழுமையான காரணம் தொண்டர்கள்தான். இது உழைப்புக்கு நன்றி கூறும் விழா அல்ல. அனைவரையும் ஊக்கப்படுத்தும் விழா என்று தெரிவித்தார்.

அதேபோல் முதல்முறையாக திமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தபோது, முன்னாள் முதலமைச்சர் பக்தவச்சலம் கூறுகையில், திமுககாரன் வெறும் டீ மட்டுமே குடித்து உழைத்து இந்த வெற்றிய கண்டுருக்கான் என்று கூறியதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமையாக நினைவு கூர்ந்தார். அதனைத்தொடர்ந்து, அதுதான் திமுக. அதுபோல் மாபெரும் வெற்றியை தேடி கொடுத்த தொண்டர்களின் உழைப்புக்கும், தியாகத்திற்கும் ஈடு எதுவும் அல்ல.
தமிழகத்தில் 6ஆவது முறையாக திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபோது, கொரோனா சூழல் இருந்தது. அதனால் ஏற்பட்ட பிரச்னைகள், பொருளாதார சிக்கல்கள் அனைத்தையும் சமாளித்து, இதுவரை திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 80 சதவிகிதத்தை நிறைவேற்றியுள்ளோம். மீதமுள்ள 20 சதவிகித வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேற்றுவான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று தெரிவித்தார்.
மேலும், திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் மட்டுமே இந்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இது தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும் என்று தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து திமுக மூத்த பிரதிநிதிகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications