அரக்கோணத்தில் கைதான மின்வாரிய அதிகாரி புனிதா வீட்டில் தங்கம், பணம், சொத்து ஆவணங்கள் பறிமுதல்
வேலூர்: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் லஞ்சம் வாங்கியதாக கைதான மின்வாரிய உதவி செயற்பொறியாளர் புனிதா வீட்டில், லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் கணக்கில் வராத பணம், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கணக்கில் வராத பணம் ரூ.1 லட்சத்து 85 ஆயிரம், ரூ.30 லட்சத்திற்கான வங்கி நிரந்தர வைப்பு தொகை பத்திரங்கள், 10 பவுன் நகை, சொத்து பத்திரங்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த அம்மனூர் துரைசாமி நகர் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் தனது வீட்டின் அருகில் கடை ஒன்றை அமைத்துள்ளார். அதற்கான மின் இணைப்பை வணிக இணைப்பாக மாற்றுவதற்கு விண்ணப்பித்துள்ளாராம். அந்த இணைப்பை வணிக இணைப்பாக மாற்றித்தர கோரி உதவி செயற்பொறியாளர் புனிதா, வணிக ஆய்வாளர் மோனிகா, போர்மென் பல்கிஸ்பேகம் ஆகியோரை சந்தித்தார். அவர்கள் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளது.

அதன்படி முதற்கட்டமாக ரூ.50 ஆயிரத்தை சரவணன் கொடுத்து இணைப்பை மாற்றும்படி கேட்டாராம். அப்போது மீதம் உள்ள ரூ.50 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே இணைப்பை மாற்ற முடியும் என அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் மீதமுள்ள பணத்தை நேற்று முன்தினமே தர வேண்டும் என நிர்பந்தம் செய்தார்களாம்.
இந்நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத சரவணன், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனம் தடவிய ரூ.25 ஆயிரத்தை சரவணனிடம் கொடுத்து, மின்வாரிய அதிகாரிகளிடம் கொடுக்குமாறு அனுப்பி வைத்தார்கள். பின்னர் அரக்கோணம் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கணேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் விஜயலட்சுமி, தமிழரசி தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர்.
அதன்படி அலுவலகத்தில் இருந்த உதவி செயற்பொறியாளர் புனிதா, போர்மென் புல்கிஸ் பேகம், வணிக ஆய்வாளர் மோனிகா ஆகிய 3 பெண் அதிகாரிகளிடம் சரவணன் பணத்தை கொடுத்த போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் 3 பேரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி தலைமையிலான போலீசார் அரக்கோணம் அவுசிங் போர்டு பகுதியில் உள்ள உதவி செயற்பொறியாளர் புனிதா வீட்டிற்கு சென்று விடிய விடிய நேற்று காலை வரை சோதனை நடத்தினர். அதில் கணக்கில் வராத பணம் ரூ.1 லட்சத்து 85 ஆயிரம், ரூ.30 லட்சத்திற்கான வங்கி நிரந்தர வைப்பு தொகை பத்திரங்கள், 10 பவுன் நகை, சொத்து பத்திரங்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னதாக கைது செய்யப்பட்ட உதவி செயற்பொறியாளர் புனிதா, வணிக ஆய்வாளர் மோனிகா, போர்மென் பல்கிஸ் பேகம் ஆகிய 3 பேரையும் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் ராணிப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் பெண்கள் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அரக்கோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications