சொத்து வரி.. கோடிக்கணக்கில் தேங்கி நிற்கும் பணம்.. அக்டோபர் 30-க்குள் வரி கட்டுவோருக்கு நல்ல செய்தி
சென்னை: அக்டோபர் 30ம் தேதிக்குள் சொத்துவரியை செலுத்த வேண்டும் என்று கூறி அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதுகுறித்த சலுகை ஒன்றையும், நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் வெளியிட்டிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சிகளில் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் தொடங்கும் முதல் மற்றும் 2-ம் அரையாண்டில் முதல் 15 நாட்களுக்குள், அனைவரும் சொத்து வரியை செலுத்த வேண்டும்.

அந்தவகையில், இரண்டு அரையாண்டுகளில் சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. முதல் அரையாண்டு ஏப்ரல் 1 முதல் ப்டம்பர் 30 வரை மற்றும் இரண்டாம் அரையாண்டு அக்டோபர் 1 முதல் மார்ச் 31 வரையாகும்.. இதில், அரையாண்டு துவங்கும் முதல் 30 நாளில் சொத்து வரி செலுத்துவோருக்கு, 5 சதவீதம் அதிகபட்சம் 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
அரசு சலுகைகள்: அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் வரும் 2025 - 26ம் நிதியாண்டு முதல், 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட உள்ளது. அதனால், முறைப்படி சொத்து வரி செலுத்துவோருக்கு, அரசு சலுகைகள் வழங்கி வருகிறது.
இந்த 2ம் அரையாண்டுக்கான சொத்து வரியை, வரும் 30க்குள் செலுத்தினால், 5 சதவீதம் அல்லது 5,000 ரூபாய் வரை ஊக்கத்தொகை கிடைக்கும். அப்படி செலுத்தாதவர்களுக்கு, 1 சதவீதம் தனி வட்டி என்ற அடிப்படையில், தண்ட வரி வசூலிக்கப்படும். எனவே, நகர்ப்புற உள்ளாட்சிகளில் வசிப்போர், வரும் 30க்குள் சொத்து வரி செலுத்தி பயனடையலாம்" என்று ஏற்னவே அறிவிப்புகள் வெளியாகியிருந்தன.
மாநகராட்சி: இந்நிலையில், 5.13 லட்சம் சொத்து வரி செலுத்துபவர்களுக்கு இந்த மாதம் 30-ந்தேதிக்குள் வரியை செலுத்தி சலுகையை பெறும்படி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.. மேலும், 8 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கடந்த வருடங்களில் நிலுவைத் தொகையை செலுத்தாததால் 5 சதவீத ஊக்கத்தொகை சலுகை பெறும் தகுதியை இழந்துள்ளார்கள்.
கடந்த ஆண்டு, 10 வருடங்களுக்கும் மேலாக வரி பாக்கி வைத்திருந்த 25 பேரின் பெயர் லிஸ்ட்டை வெளியிட்டு வரி பாக்கியை வசூலிப்பதற்கான நடவடிக்கையை மாநகராட்சி மேற்கொண்டது. இதையடுத்து ஏராளமானோர் திரண்டு சென்று வரியை முறையாக கட்டிவிட்டார்கள்.. ஆனாலும், சொத்து வரி கட்டாததற்காக இதுவரை சொத்துக்கள் எதையும் மாநகராட்சி பறிமுதல் செய்யவில்லை.
வரிவசூல்: கடந்த 1-ந்தேதியிலிருந்து இருந்து 19-ந்தேதி வரை 2.28 லட்சம் பேர் வரி செலுத்தி இருக்கிறார்கள். இதன் மூலம் ரூ.175 கோடிக்கு மேல் வரி வசூலாகி இருக்கிறது... எனவே, முன் கூட்டியே வரி செலுத்தியவர்களும் தங்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். அடுத்த மார்ச் 31-ந்தேதிக்குள் ரூ.1,800 கோடி சொத்து வரி வசூலிக்க மாநகராட்சி திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையை பொறுத்தவரை, 13 லட்சத்து 31 ஆயிரம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து அரையாண்டுக்கு சுமார் ரூபாய் 850 கோடி என மொத்தமாக ஒரு ஆண்டிற்கு ரூபாய் 1700 கோடி வருவாய் கிடைக்கிறது. இந்த வரிப்பணத்தின் மூலம் தான் சென்னை மக்களின் அடிப்படை கட்டமைப்புகள், சாலைகள் பராமரித்தல், நோய் தடுப்பு பணிகள், பொது சுகாதாரம், தெரு விளக்குகள் அமைத்தல், திடக்கழிவுகள் அகற்றுதல் பூங்காக்கள் பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications