Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுகவை எதிர்த்து போராட்டம்? கலைஞரை எதிர்த்த பாரதிராஜா? அமீர் உடைத்த உண்மைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக முன்னாள் தலைவர் மு கருணாநிதியை எதிர்த்து போராட்டம் நடத்திய போது அது குறித்து அவர் என்ன சொன்னார்? எப்படி நடந்து கொண்டார் என்பது பற்றி இயக்குநர் அமீர் மனம் திறந்து பேசியுள்ளார்.

"திமுக தலைவர் கருணாநிதியை நான் குறைந்தது 5 முறை நேரில் சந்தித்துப் பேசி இருக்கிறேன். பலர் அவரை இந்தியாவில் மூத்த அரசியல்வாதி என்கிறார்கள். அரசியல் சாணக்கியர் என்று சிலர் சொல்கிறார்கள். வேறு சில ராஜதந்திரி என்றும் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு சிறந்த ஜனநாயகவாதி. தன்னைவிட எளிமையான மனிதனைக் கூட அவர் உரிய அளவில் மரியாதை கொடுத்தார்.

Karunanidhi Director Ameer

எழுத்தாளர் ஜெயகாந்தன் அவரை மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். வெளிப்படையாக மேடைகளில் அவரைப் பற்றிய விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். அப்படி இருந்தும் கலைஞர் அவரை நேசித்தார். அன்பாக நடத்தினார். அதைப்போன்றுதான் எதிர்க்கட்சியில் இருந்தவர்களைக் கூட அவர் மதித்தார். எனக்கும் அவருக்குமான நேரடி பழக்கம் எனது 'பருத்தி வீரன்' படத்தின் மூலம் நடந்தது. படத்தை ரிலீஸ் செய்வதற்கு முன்பாக ஒரு சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்திருந்தோம். அதைப் பார்க்கக் கலைஞர் வந்தார். நான் அந்த முன்னோட்ட காட்சிக்குப் போகவில்லை. ஏனென்றால், தயாரிப்பாளருக்கும் எனக்கும் அப்போது சுமுகமான உறவு இல்லை. ஆகவே என்னை யாரும் அழைக்கவில்லை. ஆனால், கலைஞர் படத்தை முழுமையாகப் பார்த்துவிட்டு இறுதியாக இயக்குநரை அழைக்கச் சொல்லி இருக்கிறார். உடனே என்னை அழைத்தார்கள். நான் அதன்பிறகு போனேன். அவர் முதலில், 'கதாநாயகி ப்ரியா மணி தமிழா?' என்று கேட்டார். அவர் பிறப்பால் மலையாளி. வளர்ந்தது பெங்களூரு என்று சொன்னேன். அடுத்து 'படத்தை எந்த ஊரில் எடுத்தே?' என்று கேட்டார். உடனே சில ஊர் பேர்களைச் சொல்லி விளக்கங்களை அளித்தேன். உடனே 'அந்த ஊரில் இன்னும் மின்சாரம் வரவில்லையா?' என்று கேட்டார். நான் இருக்கிறது என்று சொன்னேன். அப்படி என்றால் படத்தில் மின்கம்பம் ஒன்றையும் காணோமே என்றார். 'அப்படி இல்லை. திட்டமிட்டே மின்கம்பங்களை மறைத்து எடுத்துள்ளோம்' என்றேன்.

அடுத்த முறை நான் அவரை வீட்டில் போய் பார்த்தேன். அப்போது அவரிடம் 'நீங்கள் எழுதும் பேனா ஒன்றை எனக்குப் பரிசாகக் கொடுங்கள்' என்றேன். 'அது என்ன பெரிய பேனா? பத்து ரூபாய் பேனா' என்றார். அவர் பயன்படுத்தும் பேனா விலை உயர்ந்தது என எனக்குத் தெரியும். பாரிஸ் கார்னர் பகுதியில் உள்ள ஒரு கடையில்தான் அவர் பேனா வாங்கும் கடை உள்ளது. அதை அறிந்தேன் கேட்டேன். உடனே உதவியாளரை அழைத்து பேனா எடுத்து வர சொன்னார். எடுத்து வந்தவர் என் கையில் கொடுத்தார். திரும்பவும் என்னிடம் இருந்து வாங்கிய கலைஞர், அது எழுதுகிறதா எனப் பார்த்துவிட்டு மறுபடியும் கொடுத்தார்.

மூன்றாவது முறையாக இயக்குநர் பாரதிராஜாவுடன் போய் அவரை இயக்குநர் சங்கத்திற்குச் சொந்த கட்டடம் இல்லை. அதற்காக அரசு ஒரு நிலம் தர வேண்டும் என்ற கோரிக்கையுடன் போய் பார்த்துப் பேசினோம். கோயம்பேடு பக்கம் உள்ள ஒரு 2 கிரவுண்ட் நிலத்தைக் கேட்டோம். அதைப் பற்றி விசாரித்துவிட்டு, பதில் தருவதாகச் சொன்னார். அதற்குள் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை பெரிய அளவுக்கு வளர்ந்துவிட்டது. 2009இல் பாரதிராஜா தலைமையில் திமுக அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினோம்.

அதில் சீமான், நான் எல்லோரும் கைதானோம். வெளியே வந்த பிறகு அவரை மீண்டும் சந்தித்து இடம் கேட்டு கோரிக்கை வைக்கப் போனோம். அவர் இயல்பாகப் பேசவில்லை. பார்த்துச் செய்கிறேன் என்றார். உடனே நான் எங்கள் மீது நீங்கள் கோபமாக இருக்கிறீர்களா என்றேன். அவர் ஏன் என்றார். உங்கள் ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்தினோம். அதனால் தான் கேட்டேன் என்றேன்.

அவர், 'கலைஞர்கள் என்றால் அப்படித்தான் உணர்ச்சிப்பூர்வமாக இருப்பார்கள் என்பது எனக்குத் தெரியாதா?' என்றார். உடனடியாக 'இடத்தை வழங்க ஏற்பாடு செய்கிறேன். இந்தப் பிரச்சினைக்காக இடம் கொடுக்க மாட்டேன் என நினைத்துவிடாதீர்கள்' என்றார்.

எனக்குத் தெரிந்து இப்படி ஒரு முதல்வர் நடந்து கொள்வாரா? அவர் ஆட்சியை எதிர்த்துத்தான் நாங்கள் போராட்டம் நடத்தி சிறைக்குச் சென்றோம். ஆனால், அதைப் பற்றி ஒரு முறைகூட அவர் வருத்தப்பட்டுப் பேசியதில்லை. அதற்குப் பதிலாக அவர் அன்பைத்தான் காட்டினார். இந்த மாதிரி அவர் நடந்து கொண்டதால்தான் நான் அவரை ஜனநாயகவாதி என்கிறேன்" என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+