கிராமங்களில் சிலிண்டர் முன்பதிவுக்கு 45 நாட்களா? சிக்கலான நிலை.. பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
சென்னை: ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நடக்கும் போரால் வளைகுடா நாடுகளில் இருந்து வர வேண்டிய கச்சா எண்ணெய் இந்தியாவிற்கு வரவில்லை.. ஹார்முஸ் ஜலசந்தியில் விதிக்கப்பட்ட தடையால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய்க்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 41 சதவீதம் அதிகரித்து 103 டாலராக இருக்கிறது. அதன் தாக்கத்தால் இந்தியாவில் சமையல் கியாஸ் சப்ளையில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கிராமங்களில் சிலிண்டர் முன்பதிவுக்கு 45 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு கிராமங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
கச்சா எண்ணெய் மற்றும் கேஸ் தட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் வணிக சிலிண்டருக்கு கடுயைமான தட்டுப்பாடு நிலவுகிறது. வீட்டு சிலிண்டருக்குமே தட்டுப்பாடு இருக்கிறது. என்ன தான் மத்திய அரசு வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்று உறுதி கூறினாலும், சிலிண்டர் பதிவு செய்வதற்கு 25 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று மாற்றியிருக்கிறது. அதேபோல் கிராமப்புறங்களில் உள்ள இணைப்புகளுக்கு 45 நாட்கள் கழித்தும்தான் மறுபதிவு செய்ய முடியும் என்று மத்திய அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இது கடுமையான அழுத்தத்தை மக்களுக்கு தந்துள்ளது.

ஏனெனில் 45 நாட்கள் கழித்து முன்பதிவு செய்தாலும் அடுத்த நாளே வரப்போவது இல்லை.. சிலிண்டர் கிடைப்பதற்கு அடுத்த ஒரு வாரம் வரை ஆகும் . கிராமப்புற மக்களென்றால் கியாஸ் சிலிண்டர் அடுப்பை அதிகம் பயன்படுத்தவில்லை என்று யாரும் மத்திய அரசுக்கு தகவலை கொடுத்தார்களா என்று கிராம மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
தமிழ்நாட்டில் 99 சதவீதம் வீடுகளில் கேஸ் சிலிண்டர் இருக்கிறது.2000கள் வரை விறகு அடுப்பு தான் பயன்படுத்தி கொண்டிருந்தார்கள். ஆனால் அதன்பிறகு நிலைமை மாறத்தொடங்கியது. மத்திய அரசு பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச இணைப்பு வழங்குவதற்கு முன்பே கிராமங்களில் பெரும்பாலான வீடுகளில் சிலிண்டர் வந்துவிட்டது.
பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மத்திய அரசு 300 ரூபாய் மானியம் வழங்கியதால், சிலிண்டரே வாங்க முடியாமல் இருந்த பல ஏழைகள் சிலிண்டருக்கு மாறிவிட்டார்கள். சிலிண்டர் வந்த பின்னர் வீடுகளில் இருந்த விறகு அடுப்பு செட்டப் அப்படியே இடித்து அகற்றப்பட்டது. இப்போது கிராமங்களில்99 சதவீத வீடுகளில் விறகு அடுப்பு செட்டப் இல்லவே இல்லை... இப்படியான சூழலில் 45 நாட்கள் இடைவெளிக்கு பிறகே சிலிண்டர் முன்பதிவு என்பது 50 நாட்கள் வரை சிலிண்ருக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு 40 நாளில் ஒரு சிலிண்டர் தீரும்.. சராசரியான சமையலுக்கே 40 முதல் அதிகபட்சம் 45 நாட்கள் தான் வரும்.. அதுவும் மிககுறைவாக சமைத்தால் மட்டுமே சாத்தியம். 5 பேர் கொண்ட குடும்பத்திற்கு ஒரு மாதம் வருவேதே பெரிதாகிவிடும்.. பெரிய குடும்பங்களின் நிலையை சொல்லித்தெரிய வேண்டியதில்லை..
கேஸ் இல்லாமல் மீண்டும் விறகு அடுப்புக்கு போக முடியாத நிலையில் மக்கள் இருக்கிறார்கள். அப்படியே விறகு வைத்து சமைக்கலாம் என்றால், விறகு விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஏனெனில் வணிக ரீதியான சிலிண்டர் விநியோகம் அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. பல ஓட்டல்கள் செயல்படவில்லை..குறைவான ஓட்டல்களே செயல்படுகின்றன. அந்த ஓட்டல்களும் விறகு அடுப்பு பயன்படுத்துவதால் விறகு விலை உயர்ந்துள்ளது. எல்லா உணவும் தற்போது ஓட்டல்களில் இல்லை.
தற்போதைய நிலையில் ஹார்முஸ் ஜலசந்திக்கு அந்த பக்கம் காத்துக் கொண்டிருக்கும் கப்பல்கள் வந்தால் தான் நிலைமை சரியாகும் என தெரிகிறது. அரசு மாற்று ஏற்பாடுகளை செய்தாவது கிராமங்களில் சிலிண்டர் முன்பதிவு கால அளவினை ஒரு மாதத்திற்கு உள்ளாக குறைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications