சென்னையில் கனமழை! ஸ்கூலுக்கு லீவு தராததால் தத்தளித்த மாணவர்கள்.. வானிலை ஆய்வு சொதப்பல் காரணமா?
சென்னை: டிட்வா புயல் வலுவிழந்தது என்றும், இதனால் திருவள்ளூர் மற்றும் சென்னைக்கு கொடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்படுவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது. ஆனால், நேற்றிரவு தொடங்கி இன்று இரவு வரை மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்படாததால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
அப்படியெனில் மழையை முன்கூட்டியே வானிலை மையம் கணிக்க தவறியதா? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வியை எழுப்பியுள்ளனர். இன்று காலை 8:30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை சென்னையில் பல்வேறு இடங்களில் கன மழை பதிவாகி இருக்கிறது.

குறிப்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் 9.4 செ.மீ, மீனம்பாக்கத்தில் 5.3செ.மீ, சென்னை மத்திய பகுதியில் 9.9 செ.மீ, எண்ணூர் துறைமுகத்தில் 9.8 செ.மீ, மீனம்பாக்கம் இஸ்ரோ மையத்தில் 5.5 செ.மீ, திருவான்மியூரில் 2.6 செ.மீ, செங்கல்பட்டில் 2.4 செ.மீ, புழல் பகுதியில் 11.9 செ.மீ, திருவள்ளூரில் 7.4 செ.மீ, பள்ளிக்கரணையில் 6.5 செ.மீ, அண்ணா பல்கலைக்கழக பகுதியில் 5.6 செ.மீ, தாம்பரத்தில் 5.4 செ.மீ, காஞ்சிபுரத்தில் 4.3 செ.மீ, பூந்தமல்லியில் 4 செ.மீ, கோளப்பாக்கத்தில் 3.6 செ.மீ, சத்யபாமா பல்கலைக்கழகம் காஞ்சிபுரம் பகுதியில் 3.1 செ.மீ, மேற்கு தாம்பரம் பகுதியில் 1.7 செ.மீ அளவுக்கு மழை பதிவாகி இருக்கிறது.
டிட்வா புயல் வலுவிழந்து சென்னையை கடந்து செல்லும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. புயல் வலுவிழந்தாலும், மழையின் தாக்கம் இருக்கும் என்றும் ஆனால், சூறைக்காற்றின் தாக்கம் குறைவாக இருக்கும் என்றும் எச்சரித்து இருந்தது. இருப்பினும் திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டது மூலம் மழையின் தாக்கம் குறைவாகவே இருக்கும் என்று மக்களால் புரிந்து கொள்ளப்பட்டது. எனவே பள்ளிகளுக்கு, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை.
ஆனால், நேற்று இரவு தொடங்கி இன்று இரவு வரை மழை நீடித்து வருவதால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி இருக்கிறது. இதனால் பள்ளிக்கு சென்று திரும்பிய மாணவர்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டனர்.
தொடர் மழை காரணமாக, சென்னை வியாசர்பாடி சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பாக வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர், முல்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் அதிக அளவில் தேங்கி இருக்கிறது. அதேபோல அபிராமிபுரம் பகுதியில் சாலை ஓரம் நின்றிருந்த மரம் ஒன்று கார்கள் மீது முறிந்து விழுந்தது. கிண்டி வண்டிக்காரன் பகுதியில் மழைநீர் அதிகளவுத்தையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. மழை பாதிப்புகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் புரசைவாக்கத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
தற்போது சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும் அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த 4 மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
மழை பாதிப்புகள் குறித்து முன்கூட்டியே சரியாக கணிப்பு வெளியிடாததால்தான் இன்று மாணவர்களும், பொதுமக்களும் பாதிப்புகளை எதிர் கொண்டனர் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். முன்கூட்டியே கனமழை குறித்து கணித்திருந்தால் இப்பிரச்சனை வந்திருக்காது என்றும், இனிவரும் காலங்களில் வானிலை அறிக்கைகள் துல்லியமாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications