ஒன்னுமே புரியலயே.. திருமாவளவன் "அவரை" கூப்பிட.. அவங்க "இவரை அழைக்க.. ஆஹா, திமுக அமைதியா கவனிக்குது
சென்னை: புதுச்சேரியில் இன்று மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறது. இந்த போராட்டத்தில் விசிகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் என்ன நடக்க போகிறது என்று தெரியவில்லை.
வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று, விசிக சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு நடைபெற போகிறது.. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கள்ளக்குறிச்சியில் மும்முரமாக செய்து கொண்டிருக்கிறார்கள்.

விசிக அழைப்பு: இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கடந்த வாரம் பேசியிருந்த விசிக தலைவர் திருமாவளவன், "மதுவிலக்கு கொண்டு வரும் விஷயத்தில் தமிழகத்தில் தயக்கம் இருக்கவே செய்கிறது. அதிமுகவும், திமுகவும் இதில் தயக்கம் காட்டுகின்றன. தயக்கம் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் மாநாட்டுக்கு வரலாம்... அதிமுக கூட வந்து பங்கேற்கலாம்.
அதிமுக மட்டுமல்லாமல், அனைத்து கட்சிகளும் வரலாம். மது ஒழிப்பில் உடன்பாடு உள்ள அனைவரும் ஒரே மேடையில் நிற்க வேண்டிய தேவை இன்று எழுந்துள்ளது.
நிலைப்பாடு: இந்த கூட்டம் தேர்தலுக்கானது கிடையாது.. தேர்தல், கூட்டணி விஷயத்தில், எங்களுடைய நிலைப்பாடு வேறானது... எனவே, இந்த கூட்டத்தை தேர்தலுடன் சம்பந்தப்படுத்த வேண்டாம்'' என்று திருமாவளவன் கூறியிருந்தார்.
திமுக கூட்டணியில் இருந்து, மது ஒழிப்பதற்கான மாநாட்டை திருமா கூட்டியிருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை தந்துவிட்டது. விசிக எங்களுக்கு எதிரியில்லை என்று மூத்த தலைவர் அதிமுகவின் ஜெயக்குமார் சொல்லியிருந்தது அதற்கு மேல் பலரையும் கவனிக்க செய்தது. அதிமுகவுக்கானது இந்த அழைப்பானது, திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேற போகிறதா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்த துவங்கிவிட்டது.
வானதி: இதுகுறித்து பாஜகவின் வானதி சீனிவாசன் பேசும்போது, "திருமாவளனுக்கு திமுக கூட்டணியில் என்ன பிரச்சனை? என்று தெரியவில்லை. வேங்கைவயல் சம்பவம் மற்றும் பட்டியலினத்தவர்கள் மீது தாக்குதல் குறிப்பாக மாணவர்கள் மீதான தாக்குதல் என்பது அதிகரித்துள்ளது. அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதன் மூலம், தான் ஒரு புதிய அரசியல் சக்தி என்பதை நிரூபிக்கவோ அல்லது திமுகவுக்கு ஏதோ சொல்ல வருகிறார் திருமாவளவன் என நினைக்கிறேன்" என்று கூறியிருந்தார்.
இப்படிப்பட்ட சூழலில், புதுச்சேரியில் மின்கட்டண உயர்வை எதிர்த்து இன்று அதிமுக சார்பில் உண்ணாவிரதம் நடக்கிறது. இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்க வருமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அதிமுக அழைப்பு விடுத்திருக்கிறது.
அதிமுக மாநிலச் செயலர் அன்பழகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகத்துக்கு இன்று நேரில் சென்றார். அங்கு கட்சியின் முதன்மைச் செயலர் தேவபொழிலனை சந்தித்து அழைப்பு விடுத்தார்.
சலசலப்பு: இந்த போராட்டத்தில் விசிக பங்கேற்பது பற்றி கட்சி மேலிடத்தில் கேட்டு புதுச்சேரி விசிக தரப்பு முடிவு எடுக்கவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு வரும் நிலையில், புதுச்சேரியிலும் இண்டியா கூட்டணியிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
