Rampwalk இல்லை.. மேடை கூட இல்லை.. கரூர் துயரத்திற்கு பிறகு விஜய் பிரச்சாரத்தில் திடீர் மாற்றம்
புதுச்சேரி: கரூர் துயரத்திற்குப் பிறகு முதல்முறையாக விஜய் இன்று பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதற்காக அங்கு அதிகப்படியாக தவெக தொண்டர்கள் கூடியுள்ளனர். இருப்பினும், விஜய்யின் கடந்த காலப் பொதுக்கூட்டங்களை விட இந்தப் பொதுக்கூட்டம் மொத்தமாக மாறி இருக்கிறது. வழக்கமாக தவெக கூட்டத்தில் பிரம்மாண்ட மேடை போடப்பட்டு இருக்கும் சூழலில், இந்த முறை அவர் மேடை கூட இல்லாமல் வாகனத்தின் மீது இருந்தபடியே பேசினார்.
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு உடன் சேர்ந்து புதுச்சேரியிலும் அடுத்தாண்டு தொடக்கத்தில் தேர்தல் நடக்கும் நிலையில், அங்கும் விஜய் பிரச்சாரத்திற்காகச் செல்கிறார். கரூர் சம்பவத்திற்குப் பிறகு விஜய் பங்கேற்கும் முதல் திறந்தவெளி மாநாடு என்பதால் அங்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள்
சுமார் 31 கட்டுப்பாடுகளுக்கு பிறகே விஜய் கூட்டத்திற்கு போலீசார் அனுமதி கொடுத்தனர். உப்பளம் பகுதியில் நடைபெறும் இந்தப் பொதுக்கூட்டத்திற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.. கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்காகப் பல நூறு போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
க்யூஆர் கோட்
பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கும் கூட க்யூஆர் கோட் முறையிலேயே தொண்டர்கள் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், பொதுக்கூட்டம் தொடங்க ஆரம்பிக்கும் நேரத்தில் க்யூஆர் கோட் இல்லாமலும் தொண்டர்கள் உள்ளே நுழைய முயன்றனர். இதனால் அங்குச் சற்று தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் உடனடியாக விஜய்யை பேசச் சொன்னதாகச் சொல்லப்படுகிறது.
ரேம்ப் வாக் இல்லை
இந்தப் பிரச்சாரக் கூட்டம் என்பது கடந்த காலங்களில் நடந்த விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் இருந்து மொத்தமாக மாறுபட்டதாக இருக்கிறது. கடந்த காலங்களில் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் எப்போதும் Rampwalk கட்டாயம் இருக்கும். கூட்டம் நடைபெறும் இடத்திற்கு நடுவே மிக நீண்ட ரேம்ப் வாக் மேடை போடப்பட்டு இருக்கும். அந்த மேடையில் விஜய் நடந்து சென்று தொண்டர்களைச் சந்திப்பார். விஜய் கூட்டத்தில் இதுதான் எப்போதுமே ஹைலைட்டாக இருக்கும்.
இந்த ரேம்ப்வாக் முடிந்த கையோடு, விஜய் பேசுவதைக் கூட பார்க்காமல் ரசிகர்கள் கூட்டமாகக் கிளம்பும் சம்பவங்களும் கூட கடந்த காலங்களில் நடந்ததுள்ளன. ஆனால், இந்த முறை Rampwalk எதுவும் அமைக்கப்படவில்லை. ரேம்ப்வாக் மேடைக்கு மேலே ரசிகர்கள் ஏறும்போது மோசமான சம்பவங்கள் ஏற்படக்கூடாது என்பதற்காகவே Rampwalk தவிர்க்கப்பட்டதாகத் தெரிகிறது.
மேடை இல்லை
அதேபோல விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் எப்போதும் பிரம்மாண்ட மேடையும் அமைக்கப்படும். அதில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் அமர்ந்து இருப்பார்கள். மற்ற நிர்வாகிகள் பேசிய பிறகு, கடைசியாக விஜய் பேசுவார். ஆனால், இந்த முறை மேடை கூட அமைக்கப்படவில்லை. கேரவன் மேலேயே மைக் வைத்து செட்-அப் செய்திருந்தனர். கூட்டத்திற்கு முன்பு புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா அதில் ஏறிப் பேசிவிட்டுச் சென்றனர். அதைத் தொடர்ந்து விஜய்யும் அதில் ஏறி பேசினார்.
கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் எதிர்பாராத துயரம் நடந்தது. அதில் விஜய்யை பார்க்க ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40+ பேர் உயிரிழந்தனர். மீண்டும் அதுபோல ஒரு சம்பவம் நடக்கக்கூடாது என்பதற்காகவே விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications