முழங்கால் வலியால் அவதிப்பட்ட நாராயணசாமி... அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர்கள்
சென்னை: புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் முழங்கால் மாற்று அறுவைச் சிகிச்சை நேற்று நடைபெற்றது.
இரண்டு நாட்கள் மருத்துவமனையில் ஓய்வெடுத்த பின்னர் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே அவரை சந்தித்து உடல்நலம் பற்றி விசாரிக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் இன்று மாலை சிம்ஸ் மருத்துவமனைக்கு செல்லக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மிகுந்த அவதி
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு கடந்த ஓராண்டுக்கும் மேலாக முழங்கால் வலி இருந்து வருகிறது. இதற்காக அவர் வலி நிவாரணிகள் உள்ளிட்ட பல மருந்துகளை உட்கொண்டு பார்த்துவிட்டார். ஆனால், வலி குறைந்தபாடில்லை. இதனால் மிகுந்த அவதிப்பட்டு போன அவர் சென்னை சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அறுவைச் சிகிச்சை
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் விஜயகுமார் சொக்கன், இனி மேலும் வலி நிவாரணிகளை உட்கொள்வது மற்ற பிரச்சனைகளில் கொண்டு போய் விடும் என எச்சரித்ததோடு, உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளும் படி அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து நேற்று மருத்துவமனைக்கு வந்த நாராயணசாமிக்கு முழங்கால் மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.

2 நாட்களில் வீடு
அறுவைச் சிகிச்சைக்கு பின்பு நாராயணசாமி எப்படி இருக்கிறார் என்பது பற்றி மருத்துவமனை வட்டாரத்தில் கேட்ட போது, அவர் நலமுடன் உள்ளதாகவும், அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. மேலும், அவர் தொடர் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவர் விளக்கம்
இதனிடையே மருத்துவமனையில் 2 நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு நாளை மறுதினம் (வியாழக்கிழமை) நாராயணசாமி வீடு திரும்புவார் என்றும், அவருக்கு முழங்காலில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications