மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம்.. குழியில் விழுந்து புதிய தலைமுறை ஊடகவியலாளர் பலி!
சென்னை: சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து புதிய தலைமுறை தொலைக்காட்சி ஊடகவியலாளர் முத்து கிருஷ்ணன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு பருவமழையினால் சென்னையில் மழைநீர் தேங்கக் கூடாது என்பதற்காக மாநகராட்சி சார்பாக மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக நிறைவு செய்யப்படாமல், பாதியோடு பணிகள் நடைபெற்றது வருகிறது.

மழைநீர் வடிகால் பணிகள்
அதன் ஒரு பகுதியாக ஜாபர்கான்பேட்டையில் உள்ள காசி திரையரங்கம் அருகே மழைநீர் வடிகால் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்றிரவு புதிய தலைமுறை தொலைக்காட்சி ஊடகவியலாளர் முத்துகிருஷ்ணன் என்பவர் பணி முடித்து வீட்டிற்கு அந்த வழியாக திரும்பியுள்ளார். அப்போது ஆபத்தான முறையில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில், இளம் பத்திரிகையாளரான முத்து கிருஷ்ணன் விழுந்தார்.

விபத்தில் சிக்கிய ஊடகவியாளர்
இந்த விபத்தில் ஆபத்தான முறையில் நீட்டிக்கொண்டிருக்கும் கம்பிகள் குத்தியதில் இளம் ஊடகவியலாளர் முத்துகிருஷ்ணன் படுகாயங்களுடன் அப்பகுதியாக சென்ற மக்களால் மீட்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்
இதனிடையே மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெறாத இடங்களில், எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த இளைஞருக்கு உயர் சிகிச்சை வழங்க வேண்டும் என்று இன்று காலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஊடகவியலாளர் முத்து கிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை மாநகராட்சியின் அலட்சியத்தால் புதிய தலைமுறை தொலைக்காட்சி ஊடகவியலாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications