புழல் ஏரியில் நீர் திறப்பு விநாடிக்கு 2500 கன அடியாக அதிகரிப்பு.. மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
சென்னை: புழல் ஏரியில் இருந்து திறக்கப்பட்டு வரும் உபரி நீர் அளவு 2,500 கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் நீர்வரத்து 5,400 கன அடியாக அதிகரித்த நிலையில் முன்னெச்சரிக்கையாக உபரி நீர் 2500 கன அடி திறக்கப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. திருவள்ளூர், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய பரவலாக மழை கொட்டி தீர்த்து வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பொன்னேரியில் 21 செமீ, செங்குன்றம் 18 செமீ, கும்மிடிப்பூண்டி 17 செமீ, சோழவரம் 14 செமீ மழை பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவித்து இருந்தார்.
மூன்றாவது நாளாக இன்றும் பரவலாக விடிய விடிய பரவலாக கனமழை பெய்து வருகிறது. பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு, தச்சூர், சோழவரம், செங்குன்றம், புழல், கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம் சுற்றுப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புழல் ஏரி முழு கொள்ளளவை நெருங்குவதால் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் 1500 கன அடியில் இருந்து 2500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து உபரிநீர் கால்வாய் ஓரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு 500 கன அடியில் இருந்து 750 கன அடியாக உயர்த்தப்பட்டது, அதன் பிறகு 1000 அடியாக அதிகரிக்கப்பட்டு, அதன் பிறகு மாலையில் 1500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புழல் ஏரியில் உபரிநீர் தற்போது விநாடிக்கு 2500 கன அடியாக திறக்கப்படுகிறது. மொத்தம் 21.20 அடி உள்ள புழல் ஏரியில் நீர்மட்டம் 20 அடியை தொட்டுள்ளது. தற்போது ஏரிக்கு நீர்வரத்து 5,400 கன அடியாக உள்ளது.












Click it and Unblock the Notifications