உங்களுக்கு இது நடக்குதா? பிளிங்கிட், இன்ஸ்டாமார்ட் மூலம் நூதன பிரச்சனை.. Uninstall தான் ஒரே வழியா?
சென்னை: நவீன வாழ்க்கையில் சில வசதிகள் மெல்ல மெல்ல நம்மை மாற்றிவிடுகின்றன. ஒரு டேப், ஒரு ஸ்வைப் செய்தால் போதும், அனைத்தும் கிடைத்து விடும். இப்படி இணைய உலகில் சமீபத்தில் நடந்த மீகப்பெரிய மாற்றம் குவிக் காமர்ஸ். ஆன்லைன் ஷாப்பிங், உணவு டெலிவரி, வீட்டு வேலைகளை செய்ய ஆட்களை ஆன்லைனில் புக் செய்வது என அனைத்தும் மக்கள் பார்த்து, பழகி விட்டனர்.
ஆனால் கொரோனா தொற்றுக்கு பின்பு உருவான ஒரு புது வர்த்தக மாடல் தான் குவிக் காமர்ஸ், இதில் காய்கறி, பழங்கள், ஐஸ்கிரீம், சாக்லேட் தொடர்ந்து வீட்டுக்கு தேவையான அனைத்து வீட்டு உபயோக பொருட்களும் ஒரு டேப், ஒரு ஸ்வைப் செய்தால் போதும் சில நிமிடங்களில் வீட்டு வாசலுக்கு பொருட்கள் வந்து சேரும். இந்த குவிக் காமர்ஸ் துறை தான் தற்போது வேகமாக வளரும் துறையாகவும் இருக்கிறது, இது மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில் ஒரு இணையவாசி குவிக் காமர்ஸ் சேவையை பெரிய அளவில் பயன்படுத்தி அதை அதிகம் சார்ந்துள்ளதாக உணர்ந்துள்ளார். இந்த டிஜிட்டல் வலையில் இருந்து வெளியே வர அவர் எடுத்த முயற்சிகளையும், இதன் மூலம் தனக்கு கிடைத்த அனுபவத்தையும், அடைந்த பலன்களை, இறுதியில் நிதர்சனமான உண்மையையும் பகிர்ந்துள்ளார்.
தீர்கமான முடிவு
தியாசா போவால் என்ற பெண் செய்த பதிவில், பல மாதங்களாக நானும் பிளிங்கிட், இன்ஸ்டாமார்ட் போன்ற குவிக் காமர்ஸ் ஆப்ஸை பயன்படுத்தி வந்தேன். தினமும் எனக்கு தேவையான பால் பாக்கெட், மிளகாய், பிரெட், சில சமயம் ஐஸ்க்ரீம் இப்படி சிறிய சிறிய ஆர்டர்களாக செய்து வந்தேன். எல்லாம் ஜாலியாகவும், எளிதாகவும் இருந்தது.
சமீபத்தில் இந்த குவிக் காமர்ஸ் சேவையை அதிகம் சார்ந்திருப்பதை உணர்தேன், இதனால் டெலிவரி ஆப்களை அன்இன்ஸ்டால் செய்தேன்.
ஒரு மாதத்தில் எவ்வளவு செலவு?
நான் ஒவ்வொரு முறையும் ஆர்டர் செய்யும் போதும் குறைந்தபட்ச ஆர்டர் மதிப்பை (minimum order value) எட்டுவதற்காக கூடுதல் பொருட்களை சேர்த்தேன். அந்த நேரத்தில் அது சிறிய தொகையாகத் தோன்றியது.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு ஆர்டருக்கும் என்னுடைய தேவைக்கு வாங்கும் பொருட்களின் மதிப்பு 100 முதல் 50 ரூபாய் அளவில் தான் இருக்கும், குறைந்தபட்ச ஆர்டர் மதிப்பை எட்டுவதற்காக ரூ.100 முதல் ரூ.150 வரை மதிப்பிலான பொருட்களை கூடுதலாக செலவழித்தேன்.
இது ஒரு மாதத்தில் கூடுதலாக சேர்த்த தொகை மட்டுமே ரூ.4,000 முதல் ரூ.5,500 வரை ஆகும். இந்தத் தொகை என்னுடைய இரண்டு பேர் குடும்பத்தின் மாத காய்கறி, பால், அத்தியாவசியப் பொருட்கள் செலவை விட அதிகம்.
இந்த குவிக் காமர்ஸ் ஆப்ஸ்-ல் ஷாப்பிங் செய்யும் போது "இன்னும் கொஞ்சம் சேர்த்தால் டெலிவரி கட்டணம் தவிர்க்கலாம்" என்ற எண்ணம் தானாக வந்ததுவிடுகிறது. இது frictionless spending எனப்படும். பணம் செலவழிப்பது மிக எளிதாகிவிட்டதால், அதைப் பற்றி சிந்திக்காமலேயே செலவு செய்துவிட்டேன்.
ஆப்ஸை நீக்கியபோது கிடைத்த நன்மைகள்
ஒரு மாதம் இந்த ஆப்ஸை முழுமையாக பயன்படுத்துவதை நிறுத்தினேன். இதனால் சில மாற்றங்கள் நடந்ததை நான் கவனித்தேன் என தியாசா போவால் தெரிவித்தார்.
முதலில் தெரிந்த விஷயம்: தேவையானதை மட்டும் வாங்கினேன். வீட்டுக்கு அருகில் இருக்கும் மளிகை கடைக்குச் சென்றால் தேவையான பொருட்கள் மட்டுமே வாங்கினேன். கூடுதல் சாக்லேட், ஸ்நாக்ஸ் எதுவும் சேர்க்கவில்லை. இதனால் தினசரி செலவுகள் என்பது பாதியாக அதாவது ரூ.100 ஆக குறைந்தது.
2வது விஷயம்: உடல் ரீதியாகவும் மாற்றம் தெரிந்தது. பொருட்கள் வீட்டுக்கு வந்து சேரும் வசதி இல்லாததால், சிறிய சிறிய தூரங்களுக்கு நடந்தேன். காய்கறி கடைகள், பால் கடை, மளிகை கடை என்று சிறிது சிறிதாக நடந்தேன். இது ஒரு உடற்பயிற்சி என்று சொல்ல முடியாது, ஆனால் உடல் இயக்கம் அதிகரித்தது.
இரவு நேர ஆர்டர்கள்
முன்பெல்லாம் இரவு 2 மணிக்கு ஐஸ்க்ரீம் அல்லது சாக்லேட் சாப்பிட ஆசை வந்தால், ஆப்ஸில் உடனே ஆர்டர் செய்துவிடுவேன். ஆப்களை அன்-இன்ஸ்டால் செய்ததால் அந்த வசதி இல்லை, சாப்பிடும் ஏக்கத்தை அடக்குவது கடுமையாக இருந்தது. ஆனால் பெரும்பாலும் அடுத்த நாள் காலையில் அந்த ஏக்கம் மறந்துபோனது. இந்தச் சிறிய இடைவெளி (pause) எனக்கு பெரிய பாடத்தை கற்றுக் கொடுத்தது.
சௌகரியத்தின் விலை?
குவிக் காமர்ஸ் ஆப்ஸ் மோசமானவை என்று சொல்லவில்லை. அவை நேரத்தை மிச்சப்படுத்துகின்றன, வசதியை தருகின்றன. ஆனால் அந்த வசதி நம்மிடமிருந்து சில விஷயங்களை மெல்ல மெல்ல பறித்துக்கொள்கிறது கொஞ்சம் பணம், கொஞ்சம் உடற்பயிற்சி, கொஞ்சம் சுயக்கட்டுப்பாடு, அன்றாட சிறு சிறு மக்கள் உடனான தொடர்புகள், இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
என்னுடைய போனில் குவிக் காமர்ஸ் ஆப்ஸை நீக்கியபோது வாழ்க்கை அதிசயமாக மாறியது என்று நான் சொல்லவில்லை. ஆனால் கொஞ்சம் அதிக கவனத்துடன், திட்டமிட்டு செலவு செய்யும் பழக்கம் வந்தது என்று தியாசா போவால் தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஆப்ஸை பயன்படுத்தினேனா?
ஆம், பயன்படுத்தினேன், இன்றைய வாழ்க்கை முறையில் அந்த ஆப்ஸ் இல்லாமல் முழுமையாக இயங்க முடியாது. ஆனால் இப்போது மிகுந்த கவனத்துடன் பயன்படுத்துகிறேன். நேரம் இல்லாத போது, முக்கியமான தேவை இருந்தால் மட்டும் என்ற வகையில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலும், அளவுகளிலும் பயன்படுத்துகிறேன் என தியாசா போவால் தனது பதிவில் தெரிவித்தார்.
சௌகரியம் நல்லது, ஆனால் அதன் விலையை நாமே தீர்மானிக்க வேண்டும்.
இந்த ஒரு மாத அனுபவம் எனக்கு ஒரு விஷயத்தை தெளிவாகக் கற்றுக் கொடுத்தது: சிறிய சிறிய செலவுகள் தான் பெரிய தொகையாக மாறுகின்றன. நமது பணப்பழக்கத்தை நாமே கட்டுப்படுத்தினால், வாழ்க்கை கொஞ்சம் அதிக கட்டுப்பாட்டுடனும், மகிழ்ச்சியுடன் இருக்கும் என தெரிவிதார் தியாசா போவால்.
உங்களுக்கும் இதேபோன்ற அனுபவம் இருந்ததா..? கமெண்ட்-ல் பதிவிடுங்க.












Click it and Unblock the Notifications