2021ல் விட்டதை பிடிக்கனும்..அறிவாலயத்தை ரவுண்டு கட்டும் 3 தலைகள்! குறுக்கே லெட்டர் பேடு கட்சிகள் வேற
சென்னை: சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டால் போதும் கலர் கலர் கொடிகளை காரில் கட்டிக் கொண்டு ராயப்பேட்டைக்கும், அறிவாலயத்துக்கும் கிளம்பி விடுவார்கள் லெட்டர் பேட் அரசியல் கட்சியினர். குறிப்பாக திமுகவின் அண்ணா அறிவாலயத்தில் இதுபோன்ற காட்சிகளை அதிகமாகக் காண முடியும். தற்போதும் இதே சூழல் தான் சென்னையில் நிலவுகிறது. பெயருக்கு ஒரு மாநாட்டை நடத்திவிட்டு, திமுகவிடம் சீட்டு கேட்டு நச்சரிக்கத் தொடங்கி விட்டனர் சில அரசியல் கட்சியினர். குறிப்பாக அதிமுக கூட்டணியில் இருந்து தற்போது திமுகவுக்கு தாவி இருக்கும் மூவரணி ஒரு சீட்டுக்காக திமுகவை நெருக்கத் தொடங்கியுள்ளனர்.
2026 சட்டமன்ற தேர்தலுக்காக திமுக - அதிமுக போன்ற பெரிய கட்சிகள் வியூகம் அமைத்து அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில், வாக்கு வங்கி மிகக் குறைவாக இருந்தாலும், ஒரு சீட் கிடைத்தால் போதும் என்ற நோக்கத்தில் செயல்படும் சிறிய கட்சிகளும், தனிப்பட்ட அரசியல் தலைவர்களும் தலைநகரை நோக்கி படையெடுக்கின்றனர்.
மாஸாக ஒரு மாநாடு, இருக்கும் 7 வண்ணங்களை கலந்து கட்டி வண்ண வண்ண கொடிகள், திடீர் ஆதரவாளர்களுடன் ஆலோசனை, கூட்டணி பேரம் என அரசியல் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. அந்த காட்சிகள் தற்போது, 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் இந்நேரத்திலும் மீண்டும் அரங்கேற தொடங்கியுள்ளது.

2026 சட்டமன்ற தேர்தல்
இந்த முறை குறிப்பாக ஆளும் திமுக கூட்டணியின் தலைமையகமான அறிவாலயத்தில் அரசியல் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் ஏற்கெனவே இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு சீட் பங்கீடு இழுபறியில் இருக்கும் நிலையில், பல்வேறு சமுதாய அமைப்பினர் திடீர் திடீரென மாநாடுகளை நடத்திவிட்டு அதற்கு சிறப்பு விருந்தினர்களாக ஆளும் கட்சியினரை அழைத்து நடத்தி வருகின்றனர். மேலும் திமுக கூட்டணியில் இணைவோம் இரண்டு சீட்டு ஐந்து சீட்டு கேட்போம் என பேசி வருகின்றனர். இதில் ராஜ் கவுண்டர் என முன்னர் அழைக்கப்பட்ட ராஜ்குமார், செல்வக்குமார் என பலரை சொல்லலாம்.
திமுக கூட்டணி பேச்சுவார்த்தை
குறிப்பாக இந்த வரிசையில், 2016 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமீமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகிய மூவர் அணியின் நகர்வுகள் கவனம் ஈர்க்கின்றன. அப்போது அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த இவர்கள், கடந்த சில ஆண்டுகளாக அந்த கூடாரத்திலிருந்து விலகி, திமுகவின் பிரசார முகங்களாகவே செயல்பட்டு வந்தனர். பொதுக்கூட்டங்கள், அரசியல் விமர்சனங்கள் என பல மேடைகளில் திமுகக்கு ஆதரவான குரலாகவே மூவரும் பேசினர்.
அறிவாலயம் சீட் அரசியல்
ஆனால் 2021 சட்டமன்றத் தேர்தலில், கடைசி நேரத்தில் மட்டும் கூட்டணிக்குள் வந்ததால், அவர்களுக்கு சீட் வழங்க முடியவில்லை என்ற விளக்கத்தை திமுக தலைமை முன்வைத்தது. அதனால் இந்த முறை அந்த தவறு மீண்டும் நடக்கக் கூடாது என்ற எண்ணத்தில், எங்களை ஆரம்பத்திலேயே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மூவரும் திமுக தலைமையிடம் நேரடியாகவே அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இருப்பினும், அறிவாலயம் இதுவரை எந்த வெளிப்படையான உறுதியையும் தரவில்லை. அமைதியாகவே நிலைமையை கவனித்து வருகிறது.
திமுக கூட்டணி குழப்பம்
இதற்கு முக்கிய காரணமாக, கூட்டணிக்குள் ஏற்கனவே நிலவும் பல சிக்கல்கள் சொல்லப்படுகின்றன. காங்கிரஸ் கட்சிக்கான சீட் பங்கீடு விவகாரம் இன்னும் இறுதி கட்டத்தை எட்டவில்லை. விசிக இந்த முறை கூடுதல் தொகுதிகளை கோரி அழுத்தம் கொடுத்து வருகிறது. மக்கள் நீதி மய்யத்துக்கும் இடம் ஒதுக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்கு மேலாக, தேமுதிக கூட்டணிக்குள் வந்தால், அவர்களுக்கும் தொகுதிகளில் பங்கு வழங்க வேண்டிய கட்டாயம் உருவாகும்.
கருணாஸ் சீட் கோரிக்கை
இத்தனை பிரச்சினைகளுக்கு நடுவே, கருணாஸ் உள்ளிட்டோரது எங்களுக்கும் ஒரு சீட் வேண்டும் என்ற கோரிக்கை திமுக தலைமையை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். அதனால், அதிகபட்சமாக மூவரில் ஒருவருக்கு மட்டும் சீட் வழங்குவது, அதுவும் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஒப்புதல் அளிப்பது தான் தற்போதைய திட்டமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. மற்ற இருவருக்கு அரசியல் ரீதியாக இதயத்தில் இடம் அளிப்பதே போதும் என்ற எண்ணத்தில் தலைமை இருப்பதாக தகவல்கள் சொல்கின்றன.












Click it and Unblock the Notifications