"நான்சென்ஸ்.." கொந்தளிக்கும் ராதிகா.. ஹைதராபாத் டீமிடமும் இப்படித்தான் கேட்பீர்களா.. அதிரடி ட்வீட்
சென்னை: "இந்த முட்டாள் தனம் தேவையில்லை" என்று கடுமையாக சாடியுள்ளார் நடிகை ராதிகா சரத்குமார்.
முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்க கூடாது என்று கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் அதுபற்றி இவ்வாறு காட்டமாக கூறி அதிரடி காட்டி உள்ளார் ராதிகா.
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கையை தழுவி '800' என்ற பெயரில் வாழ்க்கை வரலாறு படம் எடுக்கப்படுகிறது. இதில் விஜய் சேதுபதி நடிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டு மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

முரளிதரன் ஆதரவு
இலங்கையில் தமிழர் இன அழிப்பு நடந்தபோது இலங்கை அரசுக்கு ஆதரவாக நின்றவர் முரளிதரன் என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக உள்ளது. எனவே இலங்கை தேசிய கொடியை நெஞ்சில் தாங்கி விளையாடிய முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்று எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் விஜய்சேதுபதி இந்த திரைப்படத்தில் நடிக்க கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

பாரதிராஜா, வைரமுத்து
இயக்குனர்கள் பாரதிராஜா, சீனு ராமசாமி, கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரைப் பிரபலங்களும், விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்று வலியுறுத்தினர். இவ்வாறு எதிர்ப்புகள் அதிகரித்துக் கொண்டிருந்த நிலையில் பெரிய நட்சத்திரங்கள் யாரும் இந்த விஷயத்தில் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுக்கவில்லை. ஆனால் ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று பகிரங்கமாக ஆதரவு தெரிவித்ததோடு, எதிர்ப்பவர்களை நான்சென்ஸ் என்று விமர்சித்துள்ளார்.

நான்சென்ஸ்
ராதிகா சரத்குமார் கூறியுள்ளதாவது: முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று கூறுபவர்களுக்கு வேறு வேலை கிடையாதா? சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக முத்தையா முரளிதரன் இருக்கிறார். அந்த அணி ஒரு தமிழருக்கு சொந்தமானது. அவர் அரசியல் தொடர்பு கொண்டவர். எனவே அந்த அணியின் பயிற்சியாளராக முரளிதரன் இருக்கக்கூடாது என்று கேள்வி எழுப்புவார்களா? விஜய் சேதுபதி ஒரு நடிகர். நடிகரை முடக்கக் கூடாது. விஜய்சேதுபதி அல்லது கிரிக்கெட் ஆகிய இரண்டுக்குமே இதுபோன்ற 'நான்சென்ஸ்' தேவை கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைகள்
ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ள இந்த கருத்து திரைத்துறையில் மட்டுமல்லாது, தமிழ் தேசியம் சார்ந்த அரசியல் அரங்கிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்வினைகளும் வரும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். 800, திரைப்படத்தில் இருந்து விலகுவதற்கு விஜய் சேதுபதி யோசித்து வருவதாக இன்று காலை தகவல்கள் வெளியாகிய நிலையில், திரையுலகத்தில் இருந்து ராதிகா சரத்குமார் இவ்வாறு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பவர்களை முட்டாள்கள் என்று தெரிவித்துள்ளதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications