வெளியே தூக்கிப் போடுங்க.. பெருந்தகை மீது பெருங்கோபத்தில் ராகுல்! தேர்தலுக்கு முன்னரே செய்த சம்பவம்!
சென்னை: 2026 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி தான் வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை அடம்பிடித்த நிலையில் ராகுலின் எதிர்ப்பையும் மீறி கூட்டணி அமைந்தது. இந்த நிலையில் 28 தொகுதிகளில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் நிலையில் தமிழக வெற்றிக் கழகம் ஆளும் கட்சியாகப் போகிறது. இந்த நிலையில் செல்வப் பெருந்தகையின் கையாலேயே விஜய்க்கு ஆதரவு கடிதத்தை வழங்க வைத்திருக்கிறார் ராகுல் காந்தி.
இதற்கிடையே, செல்வ பெருந்தகை தனது பதவியை ராஜினாமா செய்வார் என சொல்லப்படுகிறது. உண்மையில் ராகுல் காந்தி செல்வப் பெருந்தகையிடம் ராஜினாமா கடிதத்தை ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் நிலையில் விரைவில் அது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

2026 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸும் திமுகவும் பொருந்தாக் கூட்டணி என சொல்ல முடியாது என்றாலும், கருத்து வேறுபாடுகளுடன் இருந்த கூட்டணி என சொல்லலாம். இந்தியா முழுவதும் ஆளுங்கட்சி அந்தஸ்தை ஒவ்வொரு மாநிலமாக இழந்து வந்த காங்கிரஸ் தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மூலம் ஒரு கௌரவமான இடத்தை பிடிக்கலாம் என திட்டமிட்டு இருந்தது.
அதற்காக ராகுல் காந்தி தேர்ந்தெடுத்தது விஜய். விஜய்க்கு மக்களிடையே செல்வாக்கு அதிகரித்து வந்ததை அறிந்த அவர், பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்ட தலைவர்கள் மூலம் கூட்டணி அமைக்கலாம் என பேசினார். விஜய்யும் அதற்கு தயாராக இருந்தார். மேலும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விஜய் சொன்னதால் உற்சாகமடைந்த காங்கிரஸ் கட்சியினர் தமிழக வெற்றி கழகத்துடன் இணைந்து தேர்தலை சந்திக்க ஆயத்தமாயினர்.
ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான செல்வப் பெருந்தகை தனது ஆதரவு எம்எல்ஏக்கள் மூலம் காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடி கொடுத்தார். மேலும் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மூலம் ராகுலை சம்மதிக்க வைத்து காங்கிரஸ் திமுக கூட்டணியை உறுதி செய்தார். தொடர்ந்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு ஒரு மாநிலங்களவை உறுப்பினர், 28 சட்டமன்ற தொகுதிகளை கேட்டு பெற்றது காங்கிரஸ். தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில் வெறும் ஐந்து தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது.
அதிர்ச்சி தரும் விதமாக அந்த கட்சியின் தமிழ்நாடு தலைவரான செல்வப் பெருந்தகை ஸ்ரீ பெரும்புதூர் தொகுதியில் படுதோல்வியை சந்தித்தார். தற்போது தமிழக வெற்றி கழகம் காங்கிரஸ் இடையே கூட்டணி உறுதியாகி இருக்கும் நிலையில் காங்கிரஸ் தனது ஆதரவு கடிதத்தை விஜயிடம் வழங்கியிருக்கிறது. தேர்தலுக்கு முன் கூட்டணியே வேண்டாம் என சொன்ன செல்வப் பெருந்தகையே ஆதரவு கடிதத்தை தரும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். இதற்கு ராகுல் காந்தி தான் காரணம் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் இன்னும் சில நாட்களில் செல்வப் பெருந்தகை தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் உலாவுகின்றன. இது தொடர்பாக காங்கிரஸ் வட்டாரங்களில் விசாரித்த போது ஒரு அதிரடி தகவல் கிடைத்தது. உண்மையில் தேர்தலுக்கு முன்பே தனது பதவியை ராஜினாமா செய்வேன் என செல்வப் பெருந்தகை சொல்லியிருந்தார். ஆனால் அப்போதே ராகுல் காந்தி செல்வப் பெருந்தகையை வற்புறுத்தி ராஜினாமா கடிதத்தை வாங்கி வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது.
தற்போது தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு அதிர்ச்சி தரும் வகையில் இருக்கும் நிலையில் கூட்டணி உள்ளிட்ட விவகாரங்களில் தவறான முடிவெடுத்ததோடு, பணம் வாங்கிக் கொண்டு சீட்டு கொடுத்ததாக எழுந்த புகார் காரணமாகவும், செல்வப் பெருந்தகையின் பதவியை பறிக்க ராகுல் திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதன்படி ஏற்கனவே செல்வப் பெருந்தகையிடம் வாங்கி வைத்திருந்த ராஜினாமா கடிதத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு அவரது பதவியில் இருந்து நீக்க காங்கிரஸ் தலைமை திட்டமிட்டு வருகிறது என்கின்றனர்.














Click it and Unblock the Notifications