எல்லா தப்பையும் நீங்கதான் பண்ணீங்க..பெருந்தகை மீது பெரும் கோபத்தில் ராகுல்! குஷியில் கதர் கோஷ்டிகள்!
சென்னை: காங்கிரஸில் இருக்கும் செல்வப் பெருந்தகை அதிருப்தி கோஷ்டிகளுக்கு மகிழ்ச்சி தரும் தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான ஒரு சில நாட்களுக்குள் காங்கிரஸ் கட்சியின் தலைவரான செல்வப் பெருந்தகை மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக ஆதரவாளராக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு முதல் காரணம். அதைவிட கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ராகுல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தியின் பேச்சை தவறாக மொழிபெயர்த்து சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்கு உள்ளானதால் ராகுல் காந்தி கடும் கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதை அடுத்து செல்வப் பெருந்தகை அதிருப்தி கோஷ்டிகள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை கைப்பற்றும் வகையில் டெல்லிக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். சில நாட்களாக சைலண்ட் மோடில் இருந்த அழகிரி, திருநாவுக்கரசர் உள்ளிட்டோரோடு, கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், செல்லகுமார், ராஜேஷ்குமார் இந்த கோதாவில் குதித்துள்ளனராம்.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரி கடந்த 2019ஆம் ஆண்டு மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். கட்சி விதிமுறைகளின்படி அவரது பதவிக்காலம் 2022ஆம் ஆண்டிலேயே முடிவடைந்தது. அதன் பின்னர் ஏற்பட்ட பல்வேறு அரசியல் சூழ்நிலைகள் காரணமாக புதிய தலைவரை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
செல்வப்பெருந்தகை
இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைமையின் ஆதரவுடன் 2024ஆம் ஆண்டு செல்வப்பெருந்தகை மாநில தலைவராக பொறுப்பேற்றார். ஆனால், அவர் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே கட்சி நிர்வாகம் குறித்து அதிருப்தி அதிகரித்ததாக கூறப்படுகிறது. கட்சித் தொண்டர்களின் விருப்பத்திற்கு மாறாக சில முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், இதுகுறித்து டெல்லி தலைமையிடம் தொடர்ந்து புகார்கள் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராகுல் காந்தி கோபம்
குறிப்பாக வேட்பாளர் தேர்வு விவகாரம் மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகள் தலைமை மாற்றம் குறித்து சிந்திக்க வைத்ததாக கூறப்படுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையின் போது குறைந்தது 35 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற விருப்பம் இருந்ததாகவும், ஆனால் இறுதியில் 28 தொகுதிகள் மட்டுமே கிடைத்தது கட்சியின் சில முக்கிய தலைவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
காங்கிரஸ் தலைமை
இதற்கிடையில் வேட்பாளர் தேர்வில் பணம் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்ததும், தலைமை மீது அழுத்தம் அதிகரித்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் நடந்த சில நிகழ்வுகளும் சர்ச்சையை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த அனைத்து காரணங்களையும் கணக்கில் எடுத்தே தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தலைமை மாற்றம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய தலைவர் யார்?
இதற்கிடையில் தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளவர்களின் பட்டியலும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதில் கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், செல்லகுமார், ராஜேஷ்குமார் ஆகியோர் தீவிரமாக முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் முன்னாள் தலைவர்களான திருநாவுக்கரசர், தங்கபாலு உள்ளிட்டவர்களும் மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுமுகத்துக்கு வாய்ப்பு
இருப்பினும், ஏற்கனவே மாநிலத் தலைவராக பதவி வகிக்காத புதிய ஒருவரை நியமிக்கவே டெல்லி தலைமை விரும்புவதாக கூறப்படுகிறது. இதனால் இம்முறை முற்றிலும் புதிய முகம் மாநில தலைவராக அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் பேசப்படுகிறது. இதனால், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தமிழக காங்கிரஸ் கட்சியில் முக்கிய மாற்றங்கள் நடைபெற வாய்ப்பு அதிகம் உள்ளது. குறிப்பாக தற்போதைய தலைவர் மாற்றம் செய்து புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்ற முடிவில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை உறுதியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யார் புதிய தலைவராக வரப்போகிறார் என்ற கேள்விக்கான பதில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு விரைவில் தெரியவரும் என்கின்றன சத்யமூர்த்தி பவன் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications