கதர்களால் கடுகடு ராகுல்.. ஸ்டாலினுடன் நோ மீட்டிங்! சீட்டுக்கு நோட்டு சர்ச்சையால் பெருந்தகைக்கு ’டூ’
சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணிகளில் அரங்கேறும் சின்னச்சின்ன பிரச்சினைகள் கூட பெரிய அரசியல் விவாதப் பொருளாக மாறி வருகின்றன. அந்த வகையில். ராகுல் காந்தி மற்றும் மு.க. ஸ்டாலின் ஆகியோர் இதுவரை ஒரே மேடையில் இணைந்து பிரச்சாரம் செய்யாதது, திமுக கூட்டணி தொண்டர்கள் மத்தியில் ஒரு வித கவலையை ஏற்படுத்தியுள்ளது என்ற தகவல்கள் உலாவுகிறது. செல்வப் பெருந்தகை மேல் இருக்கும் கோபத்தில் தான் தமிழகத்தில் ஸ்டாலினுடன் ஒன்றாக பிரச்சாரம் செய்யும் திட்டத்தை ராகுல் காந்தி கைவிட்டதாக தகவல்கள் உலாவுகின்றன.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கிய காலத்திலிருந்தே திமுக மற்றும் காங்கிரஸ் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக காங்கிரஸ் தரப்பு அதிக தொகுதிகளை எதிர்பார்த்த நிலையில், திமுக தரப்பில் வழங்கப்பட்ட தொகுதி எண்ணிக்கை குறைவாக இருந்தது.

இதனால் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், சில சமயங்களில் இழுபறி நிலையும் ஏற்பட்டது. இந்நிலையில் நீண்ட ஆலோசனைகளுக்குப் பிறகு இரு கட்சிகளும் ஒருவழியாக ஒரு உடன்பாட்டிற்கு வந்தது.
காங்கிரஸ்
அந்த உடன்பாட்டின்படி காங்கிரஸ் கட்சிக்கு 20 என்ற எண்ணிக்கையிலான தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா எம்பி இடம் வழங்கப்பட்டது. இந்த உடன்பாட்டை எட்டுவதற்கே காங்கிரஸின் சிதம்பரம், திமுகவின் கனிமொழி உள்ளிட்ட தலைவர்கள் தீவிரமாக தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டியது ஏற்பட்டது. ஆனால் காங்கிரஸ் தரப்பில் இருந்த சிலர் எதிர்பார்த்த அளவுக்கு தொகுதிகள் கிடைக்கவில்லை என்ற மனநிலை தொடர்கிறது.
ராகுல் ஸ்டாலின் பிரச்சாரம்
இந்நிலையில், இந்த பிரச்சனை காரணமாகவே இரு கட்சிகளுக்கும் இடையே உள்ள மனக் கசப்பால் ராகுல் காந்தி மற்றும் மு.க. ஸ்டாலின் இணைந்து பிரச்சாரம் செய்வது தொடர்ந்து தள்ளிப் போய்கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. தேர்தல் காலத்தில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஒரே மேடையில் தோன்றுவது தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் என்பதால், இதை எதிர்பார்த்திருந்த பலருக்கும் இந்த முடிவு ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரே மேடையில் பிரச்சாரம்
முன்னதாக, புதுச்சேரியில் இருவரும் ஒரே நாளில் பிரச்சாரம் மேற்கொண்டபோதும், ஒரே மேடையில் சந்திக்காதது அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அதற்குப் பிறகாவது தமிழகத்தில் பல இடங்களில் பிரச்சாரம் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தபோதிலும், இறுதி நேரம் வரை அது நடைமுறைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கூட்டணியின் ஒற்றுமை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் சூழலும் உருவாகியுள்ளது.
செல்வப் பெருந்தகை
மேலும், காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட சில பிரச்சினைகளும் இந்த நிலையை மேலும் சிக்கலாக்கியதாக கூறப்படுகிறது. வேட்பாளர் தேர்வில் பணம் பெற்றது தொடர்பாக செல்வப் பெருந்தகை மீது எழுந்த குற்றச்சாட்டுகள் மற்றும் சில தலைவர்களுக்கிடையேயான கருத்து வேறுபாடுகள் காரணமாக கட்சிக்குள் மீண்டும் பிரச்சனைகள் அதிகரித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தேர்தல் பிரச்சார அட்டவணையிலும் மாற்றங்கள் ஏற்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
ராகுல் காந்தி
இந்நிலையில், ராகுல் காந்தி தமிழகத்திற்கு வந்து தனியாக சில முக்கிய தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி போட்டியிடும் பகுதிகளில் அவர் நேரடியாக மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், மு.க. ஸ்டாலின் உடன் ஒரே மேடையில் பிரச்சாரம் நடைபெறாதது குறித்து கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் தொடர்ந்து பேசுகின்றனர்.
கடும் அமைதி
இரு தலைவர்களுக்கும் ஏற்கனவே தனித்தனி பயண அட்டவணைகள் தயாரிக்கப்பட்டிருந்ததால், அவற்றை மாற்ற முடியாத சூழல் இருந்ததாக சொல்கின்றனர் திமுகவினர். குறிப்பாக முதல்வரின் பயண திட்டத்தில் பல தொகுதிகள் உள்ளதால், அதை மாற்றினால் பல இடங்களில் பிரச்சாரம் பாதிக்கப்படும் என்ற காரணமும் முன்வைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ராகுல் காந்தியும் கூட்டணி வேட்பாளர்களுக்காகவே பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதால், கூட்டணிக்குள் எந்தவித பிரச்சினையும் இல்லை என்கிறது திமுக. ஆனால், காங்கிரஸோ வழக்கம் போல் கடும் அமைதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications