ராகுல் மனு டிஸ்மிஸ்.. காங்கிரசார் கொந்தளிப்பு.. போராளியை தடுக்க முடியாது.. கே.எஸ் அழகிரி ஆவேசம்
சென்னை: அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து குஜராத் ஹைகோர்ட்டில் ராகுல்காந்தி தாக்கல் செய்த அப்பீல் மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். ராகுல்காந்தி போராளி என்றும் அவரை முடக்கவோ, தடுக்கவோ முடியாது எனவும் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் பரப்புரையின் போது, கர்நாடகா மாநிலம் கோலார் பகுதியில், பொருளாதார மோசடிகளைச் செய்துவிட்டு வெளிநாடுகளுக்குத் தப்பியோடிப் பதுங்கியிருக்கும் லலித் மோடி, நீரவ் மோடி உள்ளிட்ட குற்றவாளிகளைப் பற்றி பேசிய ராகுல் காந்தி, " ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர் என்று விமர்சித்தார்.

ராகுல் காந்தி மோடி என்ற ஒபிசி சமூகத்தினரை விமர்சித்ததாக குஜராத் மாநிலத்தில் ஒருவர் ராகுல் காந்தி மீது கிரிமினல் அவமதிப்பு வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த சூரத் கீழமை நீதிமன்ற நீதிபதி, ராகுல் காந்திக்கு இரண்டாண்டுகள் தண்டனை வழங்கினார். இதனையடித்து, உடனடியாக ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு எதிராக சூரத் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்திருந்தார். அங்கும் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல் முறையீடு செய்த்திருந்தார்.
இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு வந்த போது இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி இன்று தனது தீர்ப்பை வாசித்தார். அந்த தீர்ப்பில், குற்றம் சுமத்தப்பட்ட ராகுல்காந்தி மீது குறைந்தபட்சம் 10 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குக்குப் பிறகும் மேலும் சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வீர் சாவர்க்கர் பேரன் ஒருவர் வழக்குத் தொடுத்துள்ளார். எப்படியிருந்தாலும், இந்த தண்டனை எந்த அநீதியையும் ஏற்படுத்தாது. தண்டனை உத்தரவு சரியானது. அதில், தலையிட வேண்டிய அவசியம் இல்லை. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று தெரிவித்தார்.
இதனிடையே ராகுல்காந்தியின் அப்பீல் மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். எழும்பூரில் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் ரயில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ். அழகிரி, ராகுல்காந்தியின் வழக்கு குஜராத் மண்ணில் நீதி கிடைக்காது என்று தெரியும். குஜராத்தில் திட்டமிட்டு வழக்கு தொடர்ந்தது ஏன்? நீதிபதி தீர்ப்பளித்த உடன் பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. ராகுல்காந்தி போராளி, அவர் ஒரு புரட்சியாளர். தான் என்ன சொன்னாரோ அந்த கருத்தில் அவர் உறுதியாக நிற்பார். மகாத்மா காந்தியின் மறு உருவமாக இந்திய அரசியலில் வந்திருக்கிறார். நேர்மையும் லட்சியமும் கொண்ட இளைஞர் அவர். 4ஆயிரம் கிலோமீட்டர்கள் இந்தியாவிலே நடந்து ஒரு உலக சாதனையை ஏற்படுத்தியிருக்கிறார். பதவியை விட சிறந்த வாழ்க்கை முறை வேண்டும் சிறந்த சமூகம் வேண்டும் என்று நினைப்பவர் ராகுல்காந்தி.
இந்தியா வல்லரசாக ஆக வேண்டும் என்று கருதுபவர். மக்கள் மத்தியில் அவரை முடக்க முடியாது என்பதற்காக மோடி அரசாங்கம் பின்புற வாசல் வழியாக வந்து அவரை முடக்க பார்க்கின்றனர். தேர்தலில் அவர் நிற்காமல் இருக்கவேண்டிய செயல்களை செய்கின்றனர், மோடி உண்மையிலேயே அரசியல் தலைவராக இருந்தால் தேர்தல் களத்திலும் மக்கள் மன்றத்திலும் ராகுல்காந்தியை சந்திக்க வேண்டும் என்றும் கே. எஸ் அழகிரி தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications