ஒரே பேட்டி.. அடியோடு மாறும் வாழ்க்கை.. ராகுல் காந்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை : "எம்பிபிஎஸ் படிச்சு டாக்டர் ஆகனும்னு ரொம்ப ஆசை, ஆனா நீட் கோச்சிங் போக காசு இல்லை" என்று கூறிய அரியலூர் மாணவர் ராகுல் காந்த்க்கு தமிழக அரசு உதவும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
கால்நடை இளநிலை மருத்துவ தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்று வறுமையிலும் சாதித்த மாணவர் ராகுல் காந்த் நீட் தேர்விற்கு கோச்சிங் செல்ல பயம் இல்லாததால் போக முடியவில்லை என்றும், அதனால் டாக்டர் ஆக முடியவில்லை என்றும் பேட்டி அளித்திருந்தார். இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராகுல் காந்த் யார்? அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் இவரது மனைவி தேவகி என்பவரின் இளைய மகன் தான் ராகுல் காந்த். ராகுல் காந்த் வீடு மழையில் ஒழுகும். மிகவும் பாழடைந்த வீடு. அவரது தந்தை முருகேசன் மிகவும் ஏழ்மையான நிலையில் தன் குழந்தைகளை படிக்க வைத்துள்ளார். முருகேசன் அந்த பகுதியில் சைக்கிள் ரிப்பேர் கடை நடத்தி வருகிறார்.
முருகேசன் தனது மகளை பிஎஸ்சி படிக்க வைத்துள்ளார். தற்போது எம்எஸ்சி படிக்க தயாராகி வருகிறார். இளைய மகன் ராகுல் காந்த், பிளஸ் 3 தேர்வில் 588 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். கீழப்பழுவூரில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன்பள்ளியில் 12ம் வகுப்பு தேர்வு எழுதியவர் கணிதம் இயற்பியல் வேதியல் ஆகிய மூன்று பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார்.
மாநிலத்தில் முதலிடம்: எம்பிபிஸ் படிக்க ஆசைப்பட்ட ராகுல் காந்த், அதற்கு முடியாமல் போன நிலையில், கால்நடை இளநிலை மருத்துவத்திற்கு விண்ணப்பித்திருந்தார். இன்று கால்நடை இளநிலை மருத்துவத்திற்கான தரவரிசை பட்டியலை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டது இதில் பொது பட்டியலில் ராகுல் காந்த் முதலிடம் பெற்று சாதித்திருக்கிறார்.
வறுமை சூழ்நிலையிலும் தமிழ்நாடு அளவில் கால்நடை இளநிலை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்ற ராகுல் காந்த்க்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் . கூரை வீட்டில் பெற்றோருடன் வசிக்கும் ராகுல் காந்த் மழைக்காலங்களில் பல்வேறு இடங்களில் மழைநீர் ஒழுகும். அதனை பாத்திரத்தில் பிடிக்கும் அளவிற்கு வீடு மோசமாக உள்ளது. அந்த அளவிற்கு வறுமையில் உள்ள ராகுல்காந்த் மாநிலத்தில் முதலிடம் பிடித்தது குறித்து சமூக ஊடகங்களில் வீடியோக்களுடன் செய்திகள் வெளியாகின.

ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ராகுல் காந்த், என் பெற்றோர் வறுமை நிலையிலும் என்னை படிக்க வைத்துள்ளார்கள். மாநிலத்தில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சியளிக்கிறது. MBBS படிச்சு டாக்டர் ஆகனும்னு ரொம்ப ஆசை, ஆனா நீட் கோச்சிங் போக காசு இல்லை. அப்பா கடன் வாங்கித்தான் என்னை படிக்க வைத்தார். எனவே கோச்சிங் போய் பெயில் ஆனால் என்ன செய்வது என்று யோசித்த நான், உடனே கால்நடை இளநிலை மருத்துவத்திற்கு விண்ணப்பித்தேன், எனக்கு இடம் கிடைத்துள்ளது.நான் கால்நடை மருத்துவராகுவேன் என்று கூறினார்.
இந்நிலையில் இதுபற்றி ஊடகவியலாளர் குணசேகரன் வெளியிட்டிருந்த பதிவில், "600-க்கு 588 மதிப்பெண் பெற்ற மாணவர் சொல்வதைக் கேட்க மனம் கலங்குகிறது. லட்சங்கள் செலவழித்து ஓராண்டு கோச்சிங் செல்ல வசதி இல்லாததால் வேறு வாய்ப்பை நாடி இருக்கிறார். நீட்டை தமிழ்நாடு ஏன் எதிர்க்கிறது என்பதை புரிந்துகொள்ள இதைவிட வேறு எடுத்துக்காட்டு தேவை இல்லை. நீட் என்பது சமூக அநீதி." என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே ராகுல் காந்த் பேட்டி சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், முதல்வர் ஸ்டாலினின் கவனத்திற்கு அந்த வீடியோ சென்றது. அதை பார்த்த முதல்வர் ஸ்டாலின், வெளியிட்ட ட்வீட் பதிவில், "மாணவர் ராகுல் காந்த் அவர்களின் கல்வி மீதான ஆர்வமும் அவரது உழைப்பும் போற்றத்தக்கது; அவரை நான் பாராட்டுகிறேன்! வாழ்த்துகிறேன்!
கல்வியின் முக்கியத்துவத்தை நான் ஒவ்வொரு முறை வலியுறுத்திப் பேசுவதும், நம்முடைய #NEET எதிர்ப்பு என்பதும் ராகுல் காந்த் போன்ற மாணவர்களின் வெற்றிக்காகத்தான்!
அவருக்கு உதவ நமது அரசு இருக்கிறது. படிப்பு மட்டுமே நம்முடைய சொத்து! நிலையான புகழ்! தடைகளைக் கடந்து படிப்போம்! படிப்பால் பெருமையடைவோம்! ராகுல் காந்த்தின் பெற்றோருக்குப் பாராட்டுகள்!" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications