சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இப்படி ஒரு மாற்றமா.. ஆச்சரியப்படுத்திய தெற்கு ரயில்வே
சென்னை: தீபாவளி பண்டிகை வரும் திங்கள்கிழமை (அக்டோபர் 20ம் தேதி) கொண்டாடப்பட உள்ளது. வடமாநிலங்களில் நான்கு நாட்கள் பண்டிகையாக தீபாவளி கொண்டாடப்படும். முக்கியமாக அக்டோபர் 21ம் தேதி தான் வடமாநிலங்களில் தீபாவளி மிக உற்சாகமாக கொண்டாடப்படும். இந்த பண்டிகையை முன்னிட்டு எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு பெட்டிகளில் அத்துமீறி ஏறுவதை தடுக்க ரயில்வே பாதுகாப்பு படையினர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் பல லட்சம் பேர் வேலை செய்கிறார்கள். குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும், திருப்பூர், கோவை, ஈரோடு, வேலூர் போன்ற மாவட்டங்களிலும் மிக அதிகமாக வேலை செய்கிறார்கள். தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்தாலும், அவர்கள் தமிழ்நாட்டில் இருந்து சொந்த மாநிலம் செல்ல சென்னை தான் வர வேண்டும். சென்னை வந்து தான் செல்கிறார்கள்.

சென்னையில் இருந்து தான் வட மாநிலங்களுக்கு அதிக ரயில்கள் இயக்கப்படுகிறது. இதன் காரணமாக பண்டிகை காலமான தற்போது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அதிக அளவில் குவிந்து வருகிறார்கள். பொதுவாக வடமாநில தொழிலாளர்கள் ண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து ரயில்கள் மூலம் தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் போது. முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணம் செய்வது வழக்கம். இதனால் வடமாநிலங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகளில் நிற்பதற்குகூட இடம் இல்லாமல் இருக்கும் நிலையே இருக்கும். அதேநேரம் பலர் அத்துமீறி முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறுவதும் நடக்கும்.
குறிப்பாக சென்னை சென்டிரலில் இருந்து மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட், உத்தரபிரதேசம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் முன்பதிவு செய்யாத வடமாநிலத்தவர்கள் ஏறி இருக்கையை ஆக்கிரமிப்பது அதிகமாக இருக்கும். ஆனால் இந்த தீபாவளி பண்டிகையின் போது, முன்பதிவு பெட்டியை பயணிகள் ஆக்கிரமிப்பதை தடுக்கும் விதமாக, ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரயில்வே போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை சென்டிரலில் இருந்து வடமாநிலம் செல்லும் ரயில்களில் முன்பதிவில்லாத டிக்கெட் எடுத்த பயணிகள் முன்பதிவு பெட்டியில் ஏறாமல் இருக்க நேற்று ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதேபோல் முன்பதிவில்லாத பெட்டிகளில் முண்டியடித்தவாறு ஏறுவதை தடுக்கவும் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
நேற்று சாலிமார், ஹவுரா, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் போன்ற முக்கியமான ரயில்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. ரயில்கள் ரயில் நிலையங்களில் வந்ததும், முண்டி அடித்து ஏறுவதை தடுத்த ரயில்வே போலீசார், முன்பதிவில்லாத பெட்டி இருக்கும் பகுதியில் நின்று கொண்டனர். பின்னர் அதில் ஏற வரும் பயணிகளை நீண்ட வரிசையில் நிற்க வைத்து, ஒருவர் பின் ஒருவராக அனுமதித்தனர். இதனால் முன்பதிவில்லாத பெட்டிகளில் முண்டியடித்து ஏறுவது தடுக்கப்படுகிறது. மேலும், முன்பதிவு பெட்டிகளில் ஏறி சோதனை செய்து, டிக்கெட் இல்லாதவர்கள் இறக்கிவிடப்பட்டனர். இன்றும் இந்தசோதனை தீவிரமாக நடந்து வருகிறது. தீபாவளி வரை இந்த நடைமுறை தீவிரமாக செயல்படுத்தப்பட இருக்கிறது.












Click it and Unblock the Notifications