ஒடிசா டூ ஹைதராபாத்.. தொடரும் ரயில் விபத்துகள்! தடுமாறுகிறதா இந்திய ரயில்வே? வெளியான ஷாக் தகவல்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பயணிகள் ரயில் ஒன்று தடம்புரண்டு விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலங்களாகவே ரயில்கள் தொடர்ந்து விபத்தில் சிக்குவது, இந்திய ரயில்வே சமீபகாலமாக தடுமாறுகிறதோ? என்கிற சந்தேகத்தை எழுப்புவதாக பலரும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர். அதேபோல இதற்கான காரணத்தையும் தொழிற்சங்கத்தினர் விளக்கியுள்ளனர்.

உலகின் மிகப்பெரிய ரயில் சேவையில் 'இந்தியன் ரயில்வே' முதன்மையானதாகும். ஏறத்தாழ 130 ஆண்டுகள் பழமையான இது 12 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுடன் இயங்கி வருகிறது. ஆண்டுக்கு சுமார் 500 கோடி பயணிகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது. ஆனால் இவ்வளவு பழமை வாய்ந்த ரயில்வே துறையில் சமீப நாட்களாக நடக்கும் விபத்துக்கள் விவாதங்களை கிளப்பியுள்ளன.

Railway unions have explained the reason behind the recent train accidents

ஒடிசா ரயில் விபத்து: மேற்கு வங்கத்தின் ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு, 12841 எனும் எண் கொண்ட கோராமண்டல் எக்ஸ்பிரஸ் வாரத்திற்கு 6 நாட்கள் இயக்கப்படுகிறது. இப்படியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2ம் தேதியன்று வழக்கம் போல இந்த ரயில் பிற்பகல் 3.20 மணியளவில் ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டிருக்கிறது. சான்ட்ராக்சி, காரக்பூர் ஆகிய ரயில் நிலையங்களை கடந்த இந்த ரயில் பத்ராக் ரயில் நிலையத்திற்கு வந்து சேரவில்லை.

மோதிக்கொண்ட ரயில்கள்: அதுபோல பெங்களூர் யஷ்வந்த்பூரிலிருந்து ஹவுரா நோக்கி வந்துக்கொண்டிருந்த மற்றொரு ரயிலும் பல்சோர் ரயில் நிலையத்தை கடக்கவில்லை. ஓரிரு மணி நேரம் ஆகியும் இந்த ரயில்கள் குறிப்பிட்ட ரயில் நிலையத்தை அடையாமல் இருந்ததால் சந்தேகத்தின் பேரில் லோக பைலட்டை சம்பந்தப்பட்ட ரயில் நிலைய அதிகாரிகள் தொடர்பு கொண்டனர். ஆனால் பதில் ஏதும் இல்லை. சந்தேகத்தின் அடிப்படையில் ரோந்து சென்ற பார்த்தபோதுதான், இரண்டு ரயில்களும் விபத்தில் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உயிரிழப்பும், வாக்குறுதியும்: இந்த கோர விபத்தில் 296 பேர் உயிரிழந்தனர். அதேபோல 1,000க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இந்தியன் ரயில்வே வரலாற்றில் இது மிகமோசமான ரயில் விபத்தாக பார்க்கப்பட்டது. இதற்கு பொறுப்பேற்று ரயில்வே துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டன. ஆனால், சம்பவ இடத்தை பார்வையிட்ட மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் இனி இதுபோன்று நடக்காது என்று உறுதியளித்தார்.

அடுத்த 6 மாதங்களில்: இவர் உறுதியளித்து 6 மாதத்திற்குள் மற்றொரு கோர விபத்து ஆந்திராவில் நடந்தது. ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கண்டகாபள்ளி-அலமாண்டா பகுதியில், பலாசா பயணிகள் ரயிலின் மீது ராயகடா எக்ஸ்பிரஸ் மோதியது. இதில் 13 பேர் வரை உயிரிழந்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறியிருந்தது. ஆனால், அரசு தரப்பில் 8 பேர் மட்டுமே உயிரிழந்ததாக கணக்கு காண்பிக்கப்பட்டது.

Railway unions have explained the reason behind the recent train accidents

தமிழ்நாட்டில் விபத்து : இது தவிர ஆங்காங்கே சிறு சிறு விபத்துகள் நடந்தன. தமிழ்நாட்டில், கடந்த டிசம்பர் மாதம் பரனுர் ரயில் நிலையத்திற்கும் செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் திடீரென தண்டவாளத்தில் இருந்து பயங்கர சத்தத்துடன் சரக்கு ரயில் தடம் புரண்டது. இதனால் செங்கல்பட்டு-சென்னைக்கு இடையே ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. தென் மாவட்டங்களிலிருந்து வந்த ரயில்கள் அனைத்தும் செங்கல்பட்டிலேயே நிறுத்தி வைக்கப்பட்டன. இதனை சரி செய்ய 24 மணி நேரத்திற்கும் மேல் ஆனது.

சென்னை சென்ட்ரல்: மற்றபடி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பணிமனைக்கு கொண்டு செல்லப்படும் ரயில்கள் அவ்வப்போது தடம் புரண்டு விபத்தில் சிக்குகின்றன. பணிமனைக்கு செல்லும் ரயில் என்பதால், அதில் பயணிகள் இருக்கவில்லை. எனவே உயிர் சேதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், ரயில் சேவைகள் சில மணி நேரம் வரை பாதிக்கப்பட்டிருக்கின்றன.

சார்மினார் எக்ஸ்பிரஸ்: அதேபோல சென்னையில் இருந்து ஹைதராபாத் சென்ற சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் நம்பள்ளி ரயில் நிலையத்தில் இன்று தடம் புரண்டு விபத்தில் சிக்கியது. இதில் 10 பேர் வரை காயமடைந்துள்ளனர். இந்த சலசலப்பு ஓய்வதற்குள் இன்று பிற்பகல் சென்னை எழும்பூரில் ரயில் என்ஜின் தடம் புரண்டு விபத்தில் சிக்கியுள்ளது.

தொழிற்சங்கத்தினர் சொல்வது இதுதான்: இந்த தொடர் விபத்துக்கள் உலகின் மிகப்பழமையான ரயில் சேவைகளில் ஒன்றான இந்திய ரயில்வே, சமீபகாலமாக தடுமாறுகிறதோ? என்று கேள்விகளை எழுப்பியுள்ளன. இதற்கு ரயில்வே சங்கத்தினர் விளக்கமளித்திருக்கின்றனர். இது குறித்து ரயில்வே ஊழியர்கள் சங்கமான டிஆர்இயு (DREU)-ன் தலைவர் இளங்கோ கூறியதாவது,

ஆட்கள் பற்றாக்குறை: "ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே துறையிலிருந்து 50 ஆயிரம் ஊழியர்கள் வெளியே செல்கின்றனர். ஆனால் இந்த காலிப்பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படுவதில்லை. அல்லது சொற்பமான அளவில்தான் நிரப்பப்படுகிறது. இதுவே சமீபத்திய ரயில் விபத்துகளுக்கு முக்கியமான காரணம்.

ரயில்வே பாதுகாப்பு துறையில் மட்டும் சுமார் 1.72 லட்சம் ஊழியர்களை உடனடியாக நிரப்ப வேண்டிய தேவை இருக்கிறது. தண்டவாள பராமரிப்பு பணிக்கு 87 ஆயிரம் பேரும், ஸ்டேஷன் மாஸ்டர் 64 ஆயிரம் பேர், டிரைவர்கள் 10 ஆயிரம், சிக்னல் பராமரிப்பு பணிக்கு 15 ஆயிரம் பேர் உடனடியாக தேவைப்படுகிறார்கள்.

பராமரிப்பு பணி: மற்றொரு பிரச்னை தொழில்நுட்பங்கள். ஒவ்வொரு ஆண்டுக்கும் 200 சிக்னல்கள் பழுதாகிறது. அதில் 100தான் பராமரிக்கப்படுகிறது. இப்படியே ஆண்டுக்கு 100+100+100... என கூட்டிக்கொண்டே வந்தால் தற்போது சிக்னல் பராமரிப்புக்கு மட்டும் ரூ.7,800 கோடி தேவைப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மறுபுறம் சிக்னலை பராமரிக்க 10 பேர் தேவை எனில் 7 பேரை கொண்டு அந்த வேலையை செய்ய சொல்கிறார்கள்.

Railway unions have explained the reason behind the recent train accidents

சிக்னல்கள்: இருப்பதோ ஏற்கெனவே பழைய சிக்னல். இதில் ஆள் பற்றாக்குறையோடு வேலை நடந்தால் அந்த வேலை முழுமையாக இருக்காது. எனவே சரி செய்யப்பட்ட 100 சிக்னல்களிலும் அடிக்கடி கோளாறு எழும். இது ஒரு 'டைம் லூப்' மாதிரி, இதிலிருந்து வெளியே வர வேண்டும் எனில் உடனடியாக ஆட்களை எடுக்க வேண்டும்.

தண்டவாளம்: மூன்றாவது பிரச்னை தண்டவாளம். சென்னை-மும்பை-ஹவுரா-டெல்லி இதுதான் இந்தியன் ரயில்வேயின் தங்க நாற்கர சாலை. நாட்டின் மொத்த பாதையில் 20% தண்டவாளங்கள் இந்த வழித்தடத்தில் இருக்கிறது. ஆனால் மொத்த ரயில் போக்குவரத்தில் 55% ரயில்கள் இந்த வழியில்தான் பயணிக்கின்றன. எனவே இந்த தண்டவாளங்களை பராமரிக்க வேண்டியது மிக மிக அவசியம்.

பிளாக் டைம்: ஒரு நாளைக்கு இந்த வழியாக 100 ரயில்கள் போக முடியும் எனில் 70 ரயில்களைதான் அனுமதிக்க வேண்டும். மீதம் 30 ரயில்கள் செல்லும் நேரத்தை பயன்படுத்தி தண்டவாளத்தை பராமரிக்க வேண்டும். இதை 'பிளாக் டைம்' என்று சொல்லுவார்கள். ஆனால் இங்கு 150 ரயில்கள் இயக்கப்படுகிறது.இப்படியே தண்டவாள பராமரிப்பை பெண்டிங் வைத்து வைத்து தற்போது 10 ஆயிரம் கி.மீ தண்டவாளத்தை உடனடியாக சரி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.

ஓய்வு: தொழில்நுட்பத்திலும், ஊழியர்கள் பற்றாக்குறையிலும் இந்த மாதிரியான பிரச்னைகள் இருக்கும் நிலையில், இருக்கும் ஊழியர்கள் இதைவிட அதிகமான பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளனர்.

சென்னையிலிருந்து ஒரு ரயில் புறப்பட்டு திருவனந்தபுரம் செல்கிறது எனில், அந்த ரயிலின் டிரைவருக்கு 16 மணி நேர ஓய்வு கொடுக்க வேண்டும் என்பது விதி. ஆனால் 4-5 மணி நேரத்தில் அந்த டிரைவரை மற்றொரு ரயிலை இயக்க கட்டாயப்படுத்துகிறார்கள். டிரைவர்கள் வாரத்தில் 2 முறைதான் நைட் ஷிப்ட் பார்க்க வேண்டும். ஆனால் 4-5 நாட்கள் வரை இரவில் பணி செய்ய வலியுறுத்துகிறார்கள். இப்படி தூக்கமில்லாமல் வண்டியை ஓட்டும்போது விபத்துக்கள் நடப்பது இயல்பாகிவிடுகிறது.

தீர்வு: இந்த விபத்துகள் ஏன் நடக்கிறது? என டாஸ்க் போர்ஸ் ஆராய்ந்தது. அதில், ஓய்வுக்கு (Rest) பின்னர் ரயிலை இயக்கும்போதுதான் அதிக விபத்து நடக்கிறது என்பது கண்டறியப்பட்டது. அதாவது ஓய்வு நேரத்தை முழுமையாக கொடுக்காததால் லோகோ பைலட்கள் ரயில் கவனகுறைவாக இயக்க நேர்கிறது. எனவே விபத்து நடக்கிறது.

இதையெல்லாம் சரி செய்ய உடனடியாக ஆட்களை எடுக்க வேண்டும். அதுவும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு சேர்த்து எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியும்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+