சிக்கி திணறுகிறது வடசென்னை.. தூங்காமல் விடிய விடிய மழை நீரை வெளியேற்றிய மக்கள்.. கண்ணீர் வேதனை
வடசென்னை மக்கள் வெள்ள நீரில் தத்தளித்து வருகின்றனர்
சென்னை: மொத்த வடசென்னையும் வெள்ள நீரில் மிதந்து கொண்டிருக்கிறது.. பொது மக்கள் சொல்ல முடியாத அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.. மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து பணிகளை முடுக்கி விடவில்லை என்று வடசென்னை மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சென்னையில் 2 நாட்களாக மழை கொட்டிக் கொண்டிருக்கிறது.. தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதியை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
அதன்படியே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்கிறது.. அந்த வகையில், சென்னை மாநகரம் முழுவதும் 2 நாட்களாகவே மழையின் பிடியில் மக்கள் சிக்கி உள்ளனர்..

தண்ணீர் தேக்கம்
நேற்று காலையில் ஆரம்பித்த மழை, விடிய விடிய கொட்டி கொண்டிருந்தது.. நடுஇரவில் இடி மின்னலுடன் கூடிய மழை அடித்து ஊற்றியது.. இதனால் வடசென்னையே தத்தளிக்க ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக, திருவெற்றியூர், காசிமேடு, ராயபுரம், தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, பெரம்பூர், புளியந்தோப்பு, வியாசர்பாடி, கொடுங்கையூர், திருவிக நகர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழைநீர் சாலைகளில் குளம்போல தேங்கியுள்ளது..

மழைநீர்
அதேபோல, சென்னை கொருக்குபேட்டை சிவாஜி நகர், அஜீஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர் வீடுகளிலும் புகுந்து விட்டது.. இதனால், பொதுமக்கள் அடிப்படை தேவைகளுக்கு கூட வெளியே செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டு உள்ளது. சென்னை தண்டையார்பேட்டை ரெட்டைக்குழி தெருவில் குடியிருப்புக்குள் மழைநீர் வீடுகளிலும் புகுந்துவிட்டது.. அதனால் வீடுகளில் தாழ்வான பகுதியில் இருக்கக்கூடிய நபர்கள் முதல் தளத்திற்கு மாறி வருகின்றனர்... ஆனாலும் சாலைகள் எல்லாம் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி கிடக்கிறது. அவர்களால் வெளியேறவே முடியாத நிலைமை உள்ளது.
Recommended Video

பாதிப்பு
இதுகுறித்து உடனடியாக சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.. எப்படியாவது வீட்டிற்குள் புகுந்த நீரை, மோட்டார் வைத்து வெளியேற்றுங்கள் என்று பலமுறை சொல்லியும் அவர்கள் உடனடியாக வரவில்லை என்று தெரிகிறது.. அதேபோல அதிகாரிகளும் வரவில்லையாம்.. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் நைட் முழுக்க தூங்கவே இல்லை.. குடத்தை எடுத்து தண்ணீரை அப்புறப்படுத்தி வருகின்னர்.

வாடகை
அதுமட்டுமல்ல, தங்களுடைய சொந்த செலவில் மோட்டார் வாடகை எடுத்து மழைநீரை அப்புறப்படுத்தும் அவல நிலைக்கு ஆளாகி உள்ளனர். இதனால் சென்னை மாநகராட்சி கழிவுநீர் அகற்றும் நிலையம் இருந்தும் பயனில்லாமல் இருக்கிறதே என்று நொந்து கொள்கின்றனர். இதை பற்றி அதிகாரிகளிடம் கேட்டதற்கு மோட்டார் ரிப்பேர் ஆகிவிட்டது, ஆட்கள் குறைவாக இருக்கிறார்கள் என்று சொல்கிறார்களாம்.

மும்முரம்
அதேமாதிரி, வியாசர்பாடி கணேசபுரம் மேம்பாலம் பகுதியில் மழைநீர் அதிக அளவில் தேங்கி உள்ளது. வியாசர்பாடி ஜீவா மேம்பாலம் கீழ் பகுதியிலும் தேங்கியுள்ளது.,. இங்கு மட்டும் மாநகராட்சி அதிகாரிகள் மோட்டார் போட்டு தண்ணீரை வெளியே எடுத்து வருகின்றனர்... புளியந்தோப்பு நெடுஞ்சாலை டிக்காஸ்டர் சாலை, ஸ்டாரான்ஸ் ரோடு உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளதால், அங்கும் மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை வெளியே எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications