கொட்டித் தீர்க்கும் கனமழை... 4 மாவட்டங்களில் களமிறங்கிய பேரிடர் மீட்பு படை.. அவசர எண்கள் அறிவிப்பு!
சென்னை : கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை மற்றும் நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அவசர எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
Recommended Video
தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரையிலான நிலவரப்படி, 24 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. தொடர் மழையால் குறிப்பிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,

வானிலை மையம் எச்சரிக்கை
தேனி, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. சில இடங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுவரை பெய்த கனமழை, இயல்பை விட 94 சதவீதம் அதிகம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கண்காணிப்புப் பணிகள் தீவிரம்
வானிலை ஆய்வு மையம் அதிகனமழை எச்சரிக்கை விடப்பட்டதை தொடர்ந்து, முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில், அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களின் கண்காணிப்பு அலுவலர்கள் அவரவர் தொடர்புடைய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றனர். பேரிடர் மீட்பு குழுக்கள் தயார்நிலை மேலும் கனமழையின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்திட தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

4 மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படை
கனமழை காரணமாக ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக தேடல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து ஈடுபடும் வகையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 4 குழுக்களும், தேசிய பேரிடர் மீட்பு படையின் 2 குழுக்கள் கன்னியாகுமரியிலும், 2 குழுக்கள் நீலகிரியிலும் தயார் நிலையில் உள்ளன.

கனமழை எச்சரிக்கை: உதவி எண்கள்
கட்டுப்பாட்டு மையம் பேரிடர் தொடர்பான தகவல்களை துறை அலுவலர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவிக்கும் வகையில், மாநில அவசர கட்டுப்பாட்டு மையமும், மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையங்களும் 24 மணிநேரமும் கூடுதலான அலுவலர்களுடன் செயல்பட்டு வருகின்றன. இதனை 1077, 1070 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவும், 9445869848 என்ற வாட்ஸ்-அப் மூலமாகவும் தொடர்பு கொண்டு புகார்களை பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications