அலர்ட்..! கழுத்தளவு தேங்கிய மழை நீர்.. வேளச்சேரி சுரங்கப்பாதையில் போக்குவரத்து ரத்து
சென்னை: வேளச்சேரி ரயில்வே சுரங்கப் பாதையில் கழுத்தளவு தேங்கி நிற்கும் மழை நீரால் அங்கு போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த மழை நீரை வெளியேற்ற மோட்டார் பம்புகளை கொண்டு வரும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முக்கியமான சுரங்கப்பாதையான இது மூடப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தண்ணீரில் தத்தளிக்கும் பகுதிகள்..
வடகிழக்கு பருவமழையும், வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையும் சேர்ந்து கொண்டதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடைவிடாமல் பலத்த மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க, சென்னை மாநகராட்சி மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் காரணமாக இந்த முறை பெரிதாக எங்கும் மழை நீர் தேங்கவில்லை. இருந்தபோதிலும், கனமழை கொட்டி தீர்ப்பதால் தி.நகர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, கந்தன்சாவடி, துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் அந்தப் பகுதிகளை கடக்கும் வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

வேளச்சேரியில்..
வழக்கமாக, பருவமழை காலத்திலோ அல்லது புயல் மழை காலத்திலோ சென்னையில் அதிகம் பாதிக்கப்படும் பகுதி என்றால் அது வேளச்சேரிதான். ஆனால், கடந்த ஓராண்டாக சென்னை மாநகராட்சி ஊழியர்கள் அங்கு வடிநீர் கால்வாய் சுத்திகரிப்பு, ஆக்கிரமிப்புகள் அகற்றம் ஆகிய பணிகளை மேற்கொண்டதால் இந்த முறை கனமழை கொட்டித் தீர்தத போதிலும், வேளச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கவில்லை. குறிப்பாக, குடியிருப்புப் பகுதிகளில் மழை நீர் தேங்கவில்லை.

கழுத்தளவு தேங்கிய மழைநீர்..
குடியிருப்புப் பகுதிகளில் மழை நீர் தேங்காத போதிலும், வேளச்சேரியில் சில முக்கிய சாலைகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. அந்த வகையில், வேளச்சேரி ரயில்வே சுரங்கப் பாதையில் கழுத்தளவு வரை தண்ணீர் தேங்கி இருக்கிறது. இந்த சுரங்கப் பாதையானது, வேளச்சேரி புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், மேடவாக்கம் பகுதிகளுக்கு செல்ல பயன்பட்டு வந்தது. இந்நிலையில், மழை நீர் அளவுக்கதிகமாக தேங்கியுள்ளதால் இன்று அதிகாலை முதல் இந்த சுரங்கப் பாதையை மாநகராட்சி ஊழியர்கள் மூடினர்.

போக்குவரத்து பாதிப்பு
வேளச்சேரி ரயில்வே சுரங்கப்பாதை மூடப்பட்டதால் தாம்பரம், மேடாக்கம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கண்ட பகுதிகளுக்கு சுற்றி செல்ல வேண்டியுள்ளதால் வேளச்சேரியில் பல இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வேளச்சேரி ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியிருக்கும் மழை நீரை வெளியேற்ற மோட்டார் கொண்டு வரும் நடவடிக்கையில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications