இரவு நேரத்தில் "சர்ப்ரைஸ்".. சென்னையில் இடியுடன் வெளுத்துக் கொட்டிய மழை! இன்றும் கச்சேரி இருக்கு!
சென்னை: சென்னையின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. இரவு நேரத்தில் தேனாம்பேட்டை, அடையாறு, மயிலாப்பூர், சேப்பாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி முதல் கடந்த மாதம் வரை கோடை வெயில் வாட்டி வதைத்தது. வெயிலின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீடுகளுக்குள் முடங்கினர். தமிழ்நாடு முழுவதுமே பல இடங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பம் பதிவானது.

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மழை பெய்து வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை நகரம் முழுவதும் கனமழை பெய்ததால் ஓரளவுக்கு குளிர்ச்சியான சூழல் திரும்பியது. அதன் பிறகு மீண்டும் சில நாட்களாக வெயில் அடித்து வந்தது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்புள்ளதாகவும், இதுவரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழையும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையும் நிலவியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி நேற்று (ஜூன் 12 ) இரவு சென்னையின் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்துள்ளது. தேனாம்பேட்டை, அடையாறு, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், சேப்பாக்கம், ராயப்பேட்டை, மெரினா, நந்தனம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய மிதமான மழை பெய்துள்ளது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்துள்ளது.
இரவு நேரத்தில் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. பகலில் மழைக்கான அறிகுறி பெரிதாக தென்படாத நிலையில், பின்னிரவு நேரத்தில் பெய்த திடீர் மழையால் சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் ஓடியது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை முதல் இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 - 37 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 - 27 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications