இலாகா இல்லாத அமைச்சராக பொன்முடி? அமைச்சரவை பட்டியலில் இன்னும் தொடரும் பெயர்!
சென்னை: இலாகா இல்லாத அமைச்சராக பொன்முடி இன்னும் நீடிக்கிறாரா என்ற விவாதத்தை எழுப்பும் வகையில், அமைச்சரவை விவரங்கள் அடங்கிய இணையதளப் பக்கத்திலிருந்து அவர் பெயர் இன்னும் நீக்கப்படவில்லை.
சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள பொன்முடி வசமிருந்து, உயர்கல்வித்துறை பறிக்கப்பட்டு கூடுதல் பொறுப்பாக அமைச்சர் ராஜகண்ணப்பன் வசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொன்முடி இன்னும் இலாகா இல்லாத அமைச்சராகவே தொடர்கிறாரா என்ற கேள்வி எழும் வகையில் அமைச்சரவை பட்டியல் இடம்பெற்றிருக்கும் அரசு இணையதளப் பக்கத்திலிருந்து பொன்முடி பெயர் நீக்கப்படவில்லை. ஏற்கனவே செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கும் நிலையில் பொன்முடியும் அந்த வரிசையில் வருகிறாரா என்ற விவாதம் எழுந்துள்ளது.
இதனிடையே செந்தில்பாலாஜி விவகாரம் வேறு பொன்முடி வழக்கு விவகாரம் வேறு என்பது இங்கே கவனிக்கத்தக்கது. செந்தில்பாலாஜி விசாரணை கைதியாக தான் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட தண்டனையும் பெற்றிருக்கிறார். மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்பளித்து 30 நாட்கள் பொன்முடி மீதான சிறைத்தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும் குற்றவாளி என தீர்ப்பு வந்ததும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி ஆட்டோமெட்டிக்காக தனது அமைச்சர், எம்.எல்.ஏ. பதவியை இழந்தவராகி விடுகிறார் பொன்முடி.

இதனால் தான் பொன்முடிக்கு வழங்கப்பட்ட பி.எஸ்.ஓ.வை கூட அரசு திரும்பப் பெற்றுக்கொண்டது. அதேபோல் அவருக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பும் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. தனது வீட்டின் முன்பாக பொருத்தப்பட்டிருந்த பெயர் பலகையை கூட பொன்முடி அகற்றச் சொல்லிவிட்டார். இவ்வளவு நிகழ்வுகளுக்கு பிறகும் அமைச்சரவை பட்டியல் இடம்பெற்றிருக்கும் அரசு இணையதளப் பக்கத்தில் பொன்முடி பெயர் நீக்கப்படவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இதனை அப்டேட் செய்யாமல் விட்டிருப்பார்கள் என்று எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் ராஜகண்ணப்பன் பெயருக்கு கீழே கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ள உயர்கல்வித்துறை சேர்க்கப்பட்டுள்ளது. மேல்முறையீட்டுக்கு அவகாசம் இருப்பதால் ஒருவேளை அதுவரை இலாகா இல்லாத அமைச்சராக பொன்முடி தொடரக்கூடுமா, அதற்கு சட்டத்தில் இடமிருக்கிறதா என்ற கோணங்களில் புதிய விவாதங்கள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications