யார் சொல்வது உண்மை? மர்மத்துக்கு விடை கிடைக்குமா? சிசிடிவி காட்சி இருக்காம்.. டிஜிபி சொன்ன விஷயம்!
சென்னை: ஆளுநர் மாளிகை முன்பாக பெட்ரொல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில், காவல்துறை - ஆளுநர் மாளிகை கூறும் தகவல்களுக்கு இடையே ஏகப்பட்ட முரண்பாடுகள் உள்ள நிலையில், யார் சொல்வது உண்மை என்ற சந்தேகம் சாமானிய மக்களிடையே எழுந்துள்ளது. சிசிடிவி காட்சி பதிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக டிஜிபி கூறியுள்ள நிலையில், அந்த பதிவுகள் வெளியே வந்தால் தான் உண்மை என்ன என்பது தெரியவரக்கூடும்.
சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை வாயிலில் நேற்று பிற்பகல் நேரத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்தது. இதையடுத்து, பெட்ரொல் குண்டு வீசியதாக சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரௌடி கருக்கா வினோத் உடனடியாக கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநர் மாளிகை மீதான இந்த தாக்குதல் முயற்சிக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்த சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, "சர்தார் படேல் சாலையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ராஜ்பவன் நுழைவு வாயில் பகுதியை குறிவைத்து, பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசுவதற்கு முயற்சித்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அந்த நபரை பார்த்துவிட்டதால், அந்த நபர் எதிர் திசையில் உள்ள ஹைவே ரிசர்ச் சென்டர் என்ற பகுதியில் இருந்து அந்த பாட்டிலை வீச முயற்சித்தார். அப்போது பிரதான நுழைவு வாயில் பகுதியிலும், வெளியிலும் இருந்த காவலர்கள் அந்த நபரை சுற்றி வளைத்தனர்.
அந்த நபரை போலீசார் பிடித்தபோதும், அவர் ஒரு பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை வீசினார். அதிலிருந்து எந்தவிதமான தீயும் வரவில்லை. அந்த பகுதியில் பேரிகார்டு அருகே அப்படியே உடைந்து கிடந்தது. அவரை பிடித்தபோது, மேலும் 4 பாட்டில்கள் அவரிடம் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்துவிட்டனர். இந்தச் சம்பவம் சர்தார் படேல் பிரதான சாலையில் நடந்தது. அங்கிருந்து வீசும்போது, ஆளுநர் மாளிகையின் நுழைவு வாயில் முன்பிருந்த பேரிகார்டு முன்பாக விழுந்தது. இதில் யாரும் பாதிக்கப்படவில்லை. எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை." எனத் தெரிவித்தார்.
ஆனால், அடுத்த சில மணி நேரங்களில் ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். எனினும் உஷாராக இருந்த காவலர்கள் தடுத்ததால், இரண்டு பெட்ரோல் குண்டுகளை ராஜ் பவனுக்குள் வீசி விட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பினர்" என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக ஆளுநர் மாளிகை சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும், டிஜிபி அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டது. அதில், சில விஷமிகள், பெட்ரோல் குண்டுகளுடன் ஆளுநர் மாளிகையின் பிரதான நுழைவாயில் 1 வழியாக ராஜ் பவனுக்குள் நுழைய முயன்றனர். பாதுகாப்பு காவலர்கள் அவர்களைத் தடுத்தனர். அப்போது ஒரு பெட்ரோல் குண்டை பிரதான நுழைவாயில் பகுதியில் வீசியுள்ளனர். அந்த குண்டு பெரிய சத்தத்துடன் வெடித்தது. இதையடுத்து காவலர்கள் அந்த நபர்களை பிடிக்க முயன்ற நிலையில், மீண்டும் மற்றொரு பெட்ரோல் வெடிகுண்டு வெடித்தது. இதில் ஆளுநர் மாளிகை பிரதான நுழைவாயில் பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளது." எனத் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறை அளித்த விளக்கத்திற்கும், ஆளுநர் மாளிகையின் பதிவு, புகார் இடையேயும் ஏகப்பட்ட முரண்பாடுகள் உள்ளன. பெட்ரோல் வெடிகுண்டு வெடிக்கவே இல்லை என போலீஸ் கூறியது. ஆனால், ஆளுநர் மாளிகையோ, 2 குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்ததாக கூறியுள்ளது. போலீஸ் தரப்பில் இந்த குண்டு வீச்சு சம்பவத்தில் எந்த வித சேதமும், பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவித்தது. ஆனால், ஆளுநர் மாளிகை தரப்பில், ஆளுநர் மாளிகை பிரதான நுழைவாயில் பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பும் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடான தகவல்களைத் தெரிவித்துள்ளதால், யார் சொல்வது உண்மை என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்பின் மாநில நிர்வாக தலைவரான ஆளுநருக்கும், காவல்துறைக்கும் ஏற்பட்டுள்ள இந்த கருத்து முரண்பாடுகள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள ஒரு தகவல், இந்த பிரச்சனையில் சர்ச்சைக்கு தீர்வு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளுநர் மாளிகை புகாரில் தெரிவிக்கப்பட்டது போல் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது எனவும், அவர்கள் அத்துமீறி ஆளுநர் மாளிகையினுள் நுழைய முற்பட்டு ஆளுநர் மாளிகை வாயிற்காப்பாளர்களால் (Sentry) தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்கள் எனவும், மேலும் அங்கு வீசப்பட்ட பெட்ரோல் குண்டு வெடித்தது என்றும் சொல்வது அனைத்தும் உண்மைக்கு முற்றிலும் புறம்பானது என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
மேலும், "ஏற்கனவே, கண்காணிப்பு கேமரா பதிவுகள் முழுமையாக சேகரிக்கப்பட்டுள்ளன. கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆராய்ந்ததில், கருக்கா வினோத் தேனாம்பேட்டையிலிருந்து, சம்பவ இடம் வரை தனியாகவே வந்துள்ளார் எனத் தெரிய வந்துள்ளது. மேற்படி வழக்கில் முழுமையான நியாயமான விசாரணை மேற்கொள்ளப்படும்." என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
சிசிடிவி கேமரா பதிவுகள் முழுமையாக சேகரிக்கப்பட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளதால், இந்த விவகாரத்தில் முழுமையான தகவல்கள் இதன் மூலம் வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் மூலம் பெட்ரோல் வெடிகுண்டு உண்மையிலேயே வெடித்ததால், அல்லது வெறுமனே விழுந்து உடைந்ததா என்ற கேள்விக்கும் விடை கிடைக்கும்.












Click it and Unblock the Notifications