இந்தியை திணித்தவர் ராஜாஜி.. திணிக்க கூடாது என கங்கணம் கட்டியவரும் அவர்தான்- துரைமுருகன்
சென்னை: இந்தியை திணித்தவர் ராஜாஜி தான், மீண்டும் இந்தியை திணிக்க கூடாது என்று கங்கணம் கட்டியவரும் ராஜாஜி தான் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். ராஜாஜியின் 50ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திடீர் காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் உடல்நிலையை பரிசோதனை செய்தனர்.
துரைமுருகன் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது உடல் நலனில் முன்னேற்றம் ஏற்படவே, அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இதனைத் தொடர்ந்து உடனடியாக அலுவல் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

ராஜாஜி புகைப்பட கண்காட்சி
சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலக வளாகத்தில் ராஜாஜி வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புகைப்படக் கண்காட்சி தொடங்கியுள்ளது. ராஜாஜியின், 50ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அமைக்கப்பட்ட இந்த கண்காட்சியை, அமைச்சர்கள் அன்பரசன், மா சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். இந்த கண்காட்சியில் பல்வேறு அரசியல் தலைவர்களுடன் ராஜாஜி இருக்கும் புகைப்படங்கள், அவர் பல்வேறு பதவிகளில் இருந்தபோது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் படங்கள் இடம் பெற்றுள்ளன.

துரைமுருகன் பேட்டி
இந்த கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து துரைமுருகன் கூறுகையில், வடமாநிலங்களில் நேரு, படேல், காந்தி, ராஜேந்திர பிரசாத் என்று ஏராளமான தலைவர்கள் இருந்தார்கள். அதுபோல் தென் மாநிலங்களில் குறிப்பிடத்தக்க தலைவர் தான் ராஜாஜி. வடநாட்டு தலைவர்களின் அறிவுக்கு ஈடாக, தனது அறிவை பயன்படுத்தியவர் ராஜாஜி. அவரது வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டவர்.

ராஜாஜி சொன்னது நடந்தது
எதனை கண்டும் கவலைப்படாதவர். காஷ்மீரை பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று சொன்னவரும் அவர் தான், பாகிஸ்தானை பிரியுங்கள் என்று சொன்னரும் அவர் தான். அவர் சொன்னது பின் நாட்கள் நடந்தது. அதேபொல் தனக்கு எதிரான கருத்து சொன்னாலும், சரியென்றால் ஏற்றுக்கொள்பவர்.

முக்கிய தலைவர்
இந்தியை திணித்தவர், மீண்டும் இந்தியை திணிக்க கூடாது என்று கங்கணம் கட்டியவரும் ராஜாஜி தான். ராஜாஜி பல்டி அடித்தார் என்று சொல்ல மாட்டேன். காலப்போக்கில் கருத்தை உணர்ந்து, மாற்றிக் கொண்டு செயல்பட்டவர். எப்படி இருந்தாலும், தமிழ்நாட்டு அரசியலில் விரல்விட்டு எண்ணக்கூடிய அறிஞர்களில் ஒருவர் ராஜாஜி என்று தெரிவித்தார்.

கரும்பு விவகாரம்
தொடர்ந்து பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இல்லை என்று விவசாயிகள் போராடுவது குறித்த கேள்விக்கு, கரும்பு மார்க்கெட்டில் இருக்கிறது, கரும்பு வயலில் இருக்கிறது, கரும்பு எங்கும் இருக்கிறது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications