இரண்டு பக்கமும் இந்தியாவுக்கு விழும் அடி.. மீண்டும் உயரும் பெட்ரோல் டீசல் விலை.. காரணம் டிரம்ப் தான்
டெல்லி: சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்விலிருந்து இந்தியாவைப் பாதுகாத்து வந்த அமெரிக்காவின் 'தற்காலிக ஜன்னல்' இப்போது அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டுவிட்டது. ஒருபுறம் வளைகுடாப் போர், மறுபுறம் அமெரிக்காவின் பொருளாதாரக் கிடுக்கிப்பிடி என இந்தியா இப்போது ஒரு மிகப் பெரிய எரிசக்தி நெருக்கடியின் விளிம்பில் நிற்கிறது. இதனால் மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயரும் சூழல் உருவாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே ஈரான் போர் காரணமாக 'ஹார்முஸ் ஜலசந்தி' முடங்கியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு $72-லிருந்து $105ஆக எகிறிக் கிடக்கிறது. சர்வதேச கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் பெரும்பகுதி இந்த ஹார்முஸ் வழியாகவே நடக்கிறது. ஹார்முஸ் முடக்கப்பட்டதால் கச்சா எண்ணெய் விலை மிக வேகமாக எகிறிவிட்டது. இது கச்சா எண்ணெய் இறக்குமதி நாடுகளைக் கடுமையாகப் பாதிக்கிறது.

ரஷ்யா கச்சா எண்ணெய்
இந்த இக்கட்டான சூழலில் மற்றொரு மோசமான செய்தி வந்துள்ளது. அதாவது வளைகுடா பதற்றம் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை எக்குத்தப்பாக உயர்வதைத் தடுக்க.. இந்த குறிப்பிட்ட காலத்தில் ரஷ்யக் கச்சா எண்ணெய்க்கு விதிக்கப்பட்ட தடையை டிரம்ப் நிர்வாகம் நீக்கியிருந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை உடன் அந்த விலக்கு முடிந்துவிட்டது. இது இந்தியாவைக் கடுமையாகப் பாதிக்கிறது.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்திற்கும் மேல் இறக்குமதி செய்யக்கூடிய ஒரு நாடு. உக்ரைன் போருக்குப் பிறகு மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை ஓரங்கட்டியபோது, இந்தியா புத்திசாலித்தனமாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்கியது. அதுவும் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்யை வாங்கியதால் அந்நியச் செலாவணி மற்றும் பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருந்தது.
இந்தியா ரஷ்யா
'கெப்ளர்' (Kpler) டேட்டாவின்படி, கடந்த மே மாதத்தில் மட்டும் இந்தியா நாளொன்றுக்கு 2.3 மில்லியன் பேரல் ரஷ்ய எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளது. அதாவது இந்தியாவின் மொத்தத் தேவையில் பாதி ரஷ்யாவிடமிருந்தே பூர்த்தியானது. ஆனால், இனிமேல் ரஷ்ய எண்ணெய் வாங்கினால் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைச் சந்திக்க நேரிடும் என்பதால், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் யோசிக்க ஆரம்பித்துள்ளன.
இந்தியாவில் சில நாட்களுக்கு முன்புதான் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்குச் சுமார் ₹3 உயர்த்தப்பட்டது. வளைகுடா நாடுகளிலிருந்து எண்ணெய் வருவது சீராக இல்லாத நிலையில், இப்போது ரஷ்யாவிடமிருந்து கிடைத்த கச்சா எண்ணெய்யும் நின்றால், இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிச் செலவு தாறுமாறாக உயரும்.
விலை உயரலாம்!
இந்தச் சூழலில் அரசுக்கு 3 ஆப்ஷன்கள் தான் உள்ளன. ஒன்று அரசு தான் வசூலிக்கும் வரியைக் குறைத்து இந்தச் சுமையை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏற்றிக்கொள்ள வேண்டும்.. இல்லையெனில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தைச் சுமக்க வேண்டும். இரண்டுமே சாத்தியமில்லை என்றால், மீண்டும் விலையேற்றம் என்று அது சாமானிய மக்களின் தலையில்தான் விடியும். டீசல் விலை ஏறினால் தக்காளி விலை முதல் விமானக் கட்டணம் வரை அனைத்தும் எகிறத் தொடங்கிவிடும்.
ஆய்வாளர்கள் சொல்வது என்ன
இந்த விலை உயர்வு குறித்து பெட்ரோல் ஸ்டோன் எல்எல்பி சர்வதேச வணிக இயக்குநர் ரிஷப் ஜெயின் கூறும்போது, "சமீபத்திய ₹3 எரிபொருள் விலை உயர்வு உள்நாட்டு லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சர்வதேச சரக்குக் கட்டணங்களைக் கடுமையாக உயர்த்தியுள்ளது. தற்போது உற்பத்தியாளர்கள் தங்களின் மூலதனத்தைத் தக்கவைக்க உற்பத்தியைக் குறைத்து, இருக்கும் ஸ்டாக்குகளை வைத்தே ஆர்டர்களை முடித்து வருகின்றனர். சந்தையில் போட்டி போட முடியாத சிறிய நிறுவனங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது" என எச்சரித்துள்ளார்.
ஏற்கனவே நிலைமையைக் கையை மீறிச் செல்லாமல் இருக்க டெல்லி அரசு வாரத்தில் 2 நாள் வொர்க் ஃபிரம் ஹோம், அலுவலக நேர மாற்றம், பொதுப் போக்குவரத்துப் பயன்பாடு போன்ற சிக்கனக் கட்டுப்பாடுகளை எடுத்துள்ளன. இது தேசியளவில் வரவும் கூட வாய்ப்பு இருப்பதாகப் பொருளாதார வல்லுநர்கள் கணிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications