நல்ல காலம் பொறக்குது.. விஜய் போடப் போகும் அடுத்த கையெழுத்து! ஆசிரியர்களுக்கு அல்வா மாதிரி அறிவிப்பு!
சென்னை: தமிழக பள்ளிக்கல்வித்துறையில் கடந்த 16 ஆண்டுகளாக நீடித்து வரும் சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கைக்கு விரைவில் தீர்வு கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. குறிப்பாக இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பாக விஜய் தலைமையிலான தமிழக அரசு முக்கிய முடிவெடுக்கலாம் எனவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்கின்றன தலைமைச் செயலக வட்டாரங்கள்.
தமிழகத்தில் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய், ஆட்சிப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்தது அரசு பணியாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

எந்தவித பெரிய போராட்டமோ அழுத்தமோ இல்லாத சூழலிலேயே இந்த அறிவிப்பு வெளியானதால், ஆசிரியர் அமைப்புகளும் அதற்கு நன்றி தெரிவித்துள்ளன. இதையடுத்து நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இடைநிலை ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கும் அரசு விரைவில் தீர்வு காணும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.
விஜய் அரசு
குறிப்பாக "ஒரே பணி, ஒரே கல்வித்தகுதி இருந்தும் ஏன் வேறு வேறு சம்பளம்?" என்ற கேள்வியை முன்வைத்து பல ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். இந்த பிரச்சினையின் தொடக்கம் 2009-ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட 6-வது ஊதியக் குழு பரிந்துரைகளில் தான் உருவானது. 2009 ஜூன் 1-ஆம் தேதிக்கு முன்பு பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு உயர்ந்த அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு சேர்ந்த ஆசிரியர்களுக்கு மிகவும் குறைந்த அடிப்படை சம்பளம் வழங்கப்பட்டது.
இடைநிலை ஆசிரியர்கள்
இதனால் ஒரே பள்ளியில், ஒரே பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கே ஆயிரக்கணக்கில் சம்பள வித்தியாசம் ஏற்பட்டது. சில இடங்களில் மூத்த ஆசிரியருக்கும் புதிய ஆசிரியருக்கும் இடையே மாத சம்பளத்தில் பெரிய வித்தியாசம் காணப்பட்டதால் அதிருப்தி அதிகரித்தது. "ஒரே கல்வித்தகுதி, ஒரே பணி என்றால் சமமான ஊதியம் வழங்கப்பட வேண்டும்" என்ற உச்சநீதிமன்றத்தின் கருத்துக்கு எதிராக இந்த நடைமுறை உள்ளது என்று ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
சம வேலைக்கு சம ஊதியம்
இந்த கோரிக்கையை முன்வைத்து பல்வேறு கட்ட போராட்டங்களும் நடத்தப்பட்டன. முன்னாள் ஆட்சிக்காலங்களில் இந்த விவகாரம் அரசியல் அளவிலும் பேசப்பட்டது. எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக தலைவர் ஸ்டாலின் கூட ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு, ஆட்சிக்கு வந்தால் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்திருந்தார். பின்னர் தேர்தல் வாக்குறுதியிலும் இது இடம்பெற்றது. ஆனால் கடந்த ஆட்சியில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு ஆசிரியர்கள் மத்தியில் இருந்தது.
சம்பள முரண்பாடு
இதற்கிடையே சம்பள முரண்பாட்டை ஆய்வு செய்ய மூன்று நபர் குழு அமைக்கப்பட்டிருந்தாலும், அதன் அறிக்கை இதுவரை வெளிவரவில்லை. இதுவும் ஆசிரியர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சினையால் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சம்பள இழப்பால் குடும்ப வாழ்க்கையே சிரமமானதாக மாறியுள்ளதாக பல ஆசிரியர்கள் தெரிவித்து வருகின்றனர். 2009-இல் பணியில் சேர்ந்த சில ஆசிரியர்கள் எந்த தீர்வும் கிடைக்காமல் ஓய்வு பெற்றுவிட்டதாகவும் ஆசிரியர் சங்கங்கள் வேதனை தெரிவிக்கின்றன.
முதலமைச்சர் விஜய்
இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்க நிர்வாகிகள் கூறுகையில், "16 ஆண்டுகளாக தொடர்ந்து போராடியும் தீர்வு கிடைக்கவில்லை. ஆனால் முதலமைச்சர் விஜய் ஆசிரியர்களின் மனநிலையை புரிந்து கொண்டு நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது" என தெரிவித்துள்ளனர். மேலும், பழைய ஓய்வூதிய திட்டத்தையும் மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் ஆசிரியர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை
அகவிலைப்படி உயர்வு அறிவிப்புக்குப் பிறகு தற்போது சம்பள முரண்பாடு விவகாரத்திலும் அரசு சாதகமான முடிவு எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு கல்வித்துறையில் அதிகரித்துள்ளது. இதனால், பல ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என்ற கேள்வி தற்போது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் தான், தமிழக பள்ளிக்கல்வித்துறையில் கடந்த 16 ஆண்டுகளாக நீடித்து வரும் சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கைக்கு விரைவில் தீர்வு கிடைக்கலாம் எனவும், இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பாக விஜய் தலைமையிலான தமிழக அரசு முக்கிய முடிவெடுக்கலாம் என என்கின்றன பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications