ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை!
சென்னை: தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடந்த வாரம் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்ததோடு, 'வி தி லீடர்ஸ்' (We The Leaders) என்ற புதிய மக்கள் இயக்கத்தைத் தொடங்கி அரசியல் வட்டாரத்தில் பெரும் அலைகளை உருவாக்கியுள்ளார். தற்போது வரை அண்ணாமலையின் இயக்கத்தில் சுமார் 25 லட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர்.
அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் கட்சிக்கு நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவு இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் ரஜினிகாந்த் தொடங்கவிருந்த அரசியல் கட்சியில் அண்ணாமலை இணைவதாக இருந்தது. ஆனால் பிஎல் சந்தோஷின் அழைப்பு காரணமாக, அண்ணாமலை கடைசி நேரத்தில் பாஜகவில் இணைந்தார்.

இதனால் ரஜினிகாந்த் ஆதரவை அண்ணாமலை கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அண்ணாமலையின் இந்த இயக்கத்தில் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவின் கணவரும், தொழிலதிபருமான விசாகன் வணங்காமுடி இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொழிலதிபராகவும், அப்பெக்ஸ் லேபரட்டரிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் விசாகன் இருக்கிறார்.
இவர் அண்ணாமலையால் ஈர்க்கப்பட்டு இந்த புதிய அமைப்பில் இணைய முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. ரஜினிகாந்தின் மருமகன் இந்த இயக்கத்தில் இணைவது, அண்ணாமலையின் புதிய அரசியல் நகர்வுகளுக்குப் பின்னணியில் ரஜினிகாந்தின் தார்மீக ஆதரவு இருக்கிறதா என்ற விவாதத்தை அரசியல் விமர்சகர்கள் மத்தியில் கிளப்பியுள்ளது.
கார்ப்பரேட் மற்றும் தொழில்முனைவோர் பின்னணி கொண்ட இளைஞர்களை இந்த புதிய இயக்கத்தை நோக்கி ஈர்க்க விசாகனின் வருகை உதவும் எனப் பார்க்கப்படுகிறது. இந்த இயக்கத்தை ஒரு முழுமையான அரசியல் கட்சியாக மாற்றி, வரும் தேர்தல்களில் போட்டியிட வைக்க அண்ணாமலை திட்டமிட்டு வருவதால், இப்போதே முக்கியப் புள்ளிகளை இணைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
அண்ணாமலை இயக்கத்தில் விசாகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கவும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக அண்ணாமலையுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாகன் ஆலோசனை செய்துள்ளார். இதனால் கட்சித் தொடங்குஇம் போது விசாகனுக்கு பொதுச்செயலாளர் பொறுப்பு அளிக்கப்படலாம் என்று தெரிய வந்துள்ளது. இதற்கு பின்னணியில் ரஜினிகாந்த் இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications