செல்போன் யுகத்தில்.. இளைஞர்கள் பாரத நாட்டின் கலாச்சாரம் குறித்து அறிவில்லாமல் உள்ளனர்.. ரஜினி வேதனை
சென்னை: சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், இளைஞர்கள் நமது நாட்டின் கலாச்சாரம் அருமை பெருமைகளைத் தெரிந்து கொள்ளாமலேயே இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார். இந்தியர்கள் மேற்கத்திய நாட்டினரின் கலச்சாரத்தைப் பின்பற்றினாலும், மேற்கத்திய நாட்டினர் இந்தியக் கலாச்சாரமே நிம்மதியைத் தருவதை உணர்ந்து இதை கற்றுக் கொள்வதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீ தயா ஃபவுண்டேஷன் இணைந்து நடத்திய 'பாரத சேவா' என்ற நிகழ்வின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. இதில் பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய காணொளி ஒன்று ஒளிபரப்பப்பட்டது.

ரஜினிகாந்த்
அதில் நடிகர் ரஜினிகாந்த் நமது நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கியிருந்தனர். இந்திய இளைஞர்கள் செல்போன் யுகத்தில் பாரத நாட்டின் கலாச்சாரம் அருமை பெருமை தெரிந்து கொள்ளாமலேயே இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார். மேலும், மேற்கத்திய நாட்டினரே இந்தியாவின் பெருமைகளை உணர்ந்து இந்தியக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இளைஞர்களுக்கு அட்வைஸ்
ரஜினிகாந்த் மேலும் கூறுகையில், "இப்போது இந்த செல்போன் யுகத்தில் இளைஞர்கள், அவ்வளவு ஏன் சில பெரியோர்கள் கூட நம் பாரத நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயம் .. நமது நாட்டின் அருமை பெருமை எல்லாம் தெரிந்து கொள்ளாமலேயே இருக்கிறார்கள். அது குறித்து அறிவில்லாமல் மேற்கத்திய கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறார்கள்.
மேற்கத்திய நாட்டினர்
அதேநேரம் மேற்கத்திய நாட்டினர் அவர்களின் சம்பிரதாயம், கலாச்சாரத்தில் சந்தோஷம் ஆகியவற்றில் நிம்மதி கிடைக்கவில்லை என்று இந்தியா திரும்புகின்றனர். இங்கு தான் உண்மையான நிம்மதியான சந்தோஷம் கிடைக்கும் என்று வருகிறார்கள். தியானம், யோகா, இயற்கையான வாழ்க்கையைப் பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.
அப்படிப்பட்ட நிலையில், லதா ரஜினிகாந்த் இந்தப் பாரத நாட்டின் உன்னதக் கலாச்சாரத்தை ஏழை மக்களிடையே எடுத்துச் செல்லவும் இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முயற்சிகளை எடுக்கிறார். அவரது முயற்சிகள் ஆண்டவன் அருளால் வெற்றியடைய வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்" என்று கூறியுள்ளார். ரஜினிகாந்த்தின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த்
74 வயதானாலும் நடிகர் ரஜினிகாந்த் இன்னும் திரைப்படங்களில் படுபிசியாக நடித்து வருகிறார். கடந்தாண்டு அவரது நடிப்பில் வெளியான வேட்டையன் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அடுத்து அவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்தப் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில், ரஜினிகாந்த்தின் போர்ஷன்கள் அனைத்தும் படமாக்கப்பட்டதாகத் தெரிகிறது.
அடுத்த படங்கள்
அடுத்து அவர் 2023ல் வெளியாகி வசூல் சாதனை படைத்த ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கோவையில் நடைபெற்றது. அதில் ரஜினிகாந்த் பங்கேற்ற நிலையில், அவரை காண அப்பகுதியில் தினசரி பெரியளவில் கூட்டம் திரண்டது. மேலும், அவர் அங்குள்ள சிவன் கோயில் ஒன்றில் சாமி தரிசனத்தையும் மேற்கொண்டிருந்தார்.
படப்பிடிப்பை முடித்துக் கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ரஜினி சென்னை திரும்பினார். அப்போது அவர், பஹல்காம் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெத்திருந்தார். மேலும், இனி கனவிலும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடாத வகையில் இதற்குக் காரணமானவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.












Click it and Unblock the Notifications