வீட்டுல நிம்மதியும் வெளியில கவுரமும் இல்லைனா? வாழ்க்கையில ஒன்னுமேயில்லை! வேதனையோடு பேசிய ரஜினிகாந்த்
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஆமீர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'கூலி' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், "எவ்வளவோ பணம் புகழ் இருந்தாலும் வீட்டில் நிம்மதியும், வெளியில் கவுரவமும் இல்லை என்றால், வாழ்க்கையில் எதுவுமே இருக்காது" என உருக்கமாக பேசியுள்ளார்.
தமிழ் திரையுலகின் நம்பிக்கைக்குரிய இயக்குநர்களில் ஒருவராக மாறி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தின் மூலம் இயக்குநரான லோகேஷ், அதற்குப் பிறகு கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட படங்களின் மூலம் இந்தியாவின் மோஸ்ட் வான்டட் இயக்குநராக மாறி இருக்கிறார்,.
இந்நிலையில், தமிழ் திரை உலகின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்துடன் அவர் இணைகிறார் என்ற அறிவிப்பு பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து பான் இந்தியா படமாக கூலி அறிவிக்கப்பட்டது. சன் பிக்சர்ஸ் மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார்.

ரஜினிகாந்த் உடன் நடிகர்கள் நாகார்ஜுனா, ஆமீர் கான், உபேந்திரா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் கமலஹாசனின் மகள் சுருதிஹாசன் படத்தில் முதன் முதலாக ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கிறார். படத்தின் டீசர், டைட்டில் கார்டு, மற்றும் பாடல்கள் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றது குறிப்பாக மோனிகா பாடல் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தது.
வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி படம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் சென்னையில் நேற்று மிக பிரம்மாண்டமாக டிரைலர் வெளியீட்டு விழா மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர்கள் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சத்தியராஜ், ஆமீர்கான் உள்ளிட்ட பலர் இந்த வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
வழக்கம்போலவே நடிகர் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் தனது கலகலப்பான பேச்சை வெளிப்படுத்தினார். நிகழ்ச்சியில் பேசிய அவர்," சத்யராஜ் இந்தப் படத்தில் நடிக்கிறார் என்று லோகேஷ் சொன்னார். நான் சத்யராஜ் நடிக்கிறாரா அவரிடம் கேளுங்கள் என்று சொன்னேன். அதற்கு அவர் ரஜினிகாந்திடம் கேளுங்கள் என்று சொன்னார் என்று தெரிவித்தார். சிவாஜி படத்தில் நான் என்ன சம்பளம் வாங்கினேனோ அந்த சம்பளத்தை கொடுக்கிறோம் என சொன்னோம்.
ஆனால் நடிக்க மாட்டேன் என சத்யராஜ் கூறிவிட்டார். எனக்கும் சத்யராஜுக்கும் கருத்தியல் ரீதியா முரண்பாடு இருக்கலாம்.. ஆனால் அவர் மனசுல பட்டதை சொல்லிட்டு போயிடுவாரு.. மனசுல பட்டதை சொல்றவங்கள நம்பிடலாம்.. ஆனா உள்ளேயே வச்சிட்டு இருக்குறவங்கள நம்ப முடியாது. ஐந்தாண்டுகளாக என்னிடம் இன்டர்வியூ எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான் தரவே மாட்டேன். சோபா போட்டு உட்கார்ந்து என் வாழ்வின் ரகசியங்களை எல்லாம் வாங்கி விடுவார்கள்.
ரஜினிகாந்த் அப்டீன்ற மரம் விழும்போதெல்லாம் அதை தூக்கி நிறுத்துனது ரசிகர்களாகிய நீங்கள் தான். அவர்களுடைய பாதங்களைத் தொட்டு வணங்கனும். உழைப்புக்கு மேலே என் வெற்றிக்கு ஒரு ரகசியம் இருக்கிறது. அது தான் இறைவனோட குரல். இறைவனோட குரலையும் உங்கள் குரலையும் பிரித்துப் பார்க்க கற்றுக் கொள்ள வேண்டும். எவ்வளவுதான் பணம் புகழிருந்தாலும் வீட்டில் நிம்மதி வெளியில் கௌரவம் இல்லை என்றால் எதுவுமே கிடையாது.
நான் 1950 மாடல். ஒரு லட்சம் கிலோ மீட்டர் ஓடி இருக்கிறேன். பார்ட் எல்லாம் உடலில் மாற்றி இருக்கிறார்கள். ஆகவே என்னை பார்த்து ஆட வையுங்கள் என டான்ஸ் மாஸ்டரிடம் கூறினேன். முதன் முதலாக லோகேஷ் கனகராஜ் பேசிய போது நான் கமல் ரசிகர் என கூறினார். அதே நேரத்தில் படத்தின் மேக்கிங் பிரம்மாண்டமாக இருந்தது. படத்தை பார்த்ததும் முதலில் லோகேஷ் கனகராஜுக்கு தான் போன் செய்தேன். படம் நன்றாக வந்திருக்கிறது" என பேசினார்.












Click it and Unblock the Notifications