“ரஜினிகாந்த் விஜய்யை விட துணிச்சலானவர்.. விஜய்க்கு அந்த தைரியம் இருக்கா?” கேட்கும் ராஜகம்பீரன்!
சென்னை: "ரஜினிகாந்த், மிகப்பெரிய அரசியல் முக்கியத்துவம் பெற்ற காலகட்டங்களில் குரல் கொடுப்பவராக இருந்திருக்கிறார். விஜய் கட்சி மாநாட்டு மேடையிலும் நடிக்கிறார்" என மூத்த அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் நமது ஒன் இந்தியாவுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற தவெகவின் இரண்டாவது மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், "நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பு அவரே வரவில்லை.. இவர் எங்கு வரப்போகிறார் என ஜோசியம் சொன்னார்கள். நான் ஒன்றும் மார்க்கெட் போன பிறகு, ஓய்வு பெற்ற பிறகு, அடைக்கலம் தேடி நான் அரசியலுக்கு வரவில்லை. ஒவ்வொரு வீட்டிலும், மனதிலும் இடம்பிடித்த பிறகே நான் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளேன்" எனத் தெரிவித்தார்.

ராஜகம்பீரன் பேட்டி
அரசியலுக்கு வருவேன் எனக் கூறிவிட்டு வராமல் இருந்த நடிகர் ரஜினிகாந்த்தையும், வயதான பிறகு கட்சி தொடங்கி அரசியலுக்கு வந்த நடிகர் கமல்ஹாசனையும் குறிப்பிட்டு தவெக தலைவர் விஜய் இவ்வாறு பேசினாரா என நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.
இந்நிலையில், நமது ஒன் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில் மூத்த அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் பேசுகையில், "அரசியலில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராக ஆன பிறகு விஜய், நானே எல்லா தொகுதிகளிலும் வேட்பாளர் என்று சொல்லலாம். கட்சி தொடங்கி ஒன்றரை ஆண்டுகளே ஆன நிலையில் எப்படி இப்படி பேசலாம்? பேரிடர் காலங்களில் உதவும் அமைப்புகள் ஆளுங்கட்சிகளாக ஆக முடியுமா?
ரஜினிகாந்த் துணிச்சல்
ரஜினிகாந்த், மிகப்பெரிய அரசியல் முக்கியத்துவம் பெற்ற காலகட்டங்களில் குரல் கொடுப்பவராக இருந்திருக்கிறார். 1990களில் ஜெயலலிதா மிகப்பெரிய ஆளுமையாகத் திகழ்ந்த காலகட்டத்தில், ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என துணிச்சலாகச் சொன்னார். அப்போது அவருக்குப் பின்னால் எந்த அமைப்பும் இல்லை. தனி நபராகவே பேசினார். வெடிகுண்டு கலாச்சாரம் இருக்கிறது என ஆர்.எம்.வீரப்பனை மேடையில் வைத்துக்கொண்டே பேசினார் ரஜினி.
அந்த துணிச்சல், அந்த ஆவேசம் ஏற்படுத்திய தாக்கத்தை விஜய்யால் ஏற்படுத்தவே முடியவில்லை. பணமதிப்பிழப்பு நேரத்தில் அதனை ஆதரிக்கவும் ஒரு தைரியம் வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தின் போது ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் மனநிலைக்கும் எதிராக ஒரு கருத்தைச் சொன்னார் ரஜினி. பிரச்சனைக்குரிய களத்தில் துணிச்சலான கருத்தைச் சொல்லி வந்தவர் ரஜினி. அந்த இடத்துக்கு விஜய் போனதே இல்லை.
விஜய்க்கு தைரியம் இருக்கா?
இப்போது மாநாட்டில், 'மிஸ்டர் மோடிஜி அவர்களே' எனச் சொல்கிறீர்களே.. தேர்தல் ஆணையத்தின் வழியாக தேர்தல் திருட்டைச் செய்த வாக்குத் திருடர்களே எனக் கூவுவதற்கு தைரியம் இருக்கிறதா? ஆட்சியின் கொள்கைகளை, திட்டங்களை விமர்சிப்பது வேறு. தனி நபர் தாக்குதல் ரொம்ப எளிதானது. போகிறபோக்கில் யார் வேண்டுமானாலும், தெருவில் போகிறவர்கள் கூடச் செய்யலாம். அதைச் செய்ய ஏன் ஒரு தலைவர்?
விஜய் பேசியது மேடைப்பேச்சு என்ற வகைமைக்குள்ளேயே இல்லை. சினிமா டயலாக் போலத்தான் பேசினார். விஜயகாந்த் பேசும்போது குறுக்கே பேசியவரை அடித்ததைக் கூட யதார்த்தமாக பேசுகிறார் என்றுதான் மக்கள் பார்த்தார்கள். விஜய் மனப்பாடம் செய்து பஞ்ச் டயலாக்காக திட்டமிட்டு ஒரு நாடகத்தைத்தான் மாநாட்டில் அரங்கேற்றினார். நடிகனாக இருந்து தலைவனாக மாறவேண்டும். மேடையில் ஒரு தலைவனாக நடிக்கிறார் விஜய்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications