சினிமாவில் சான்ஸ்.. நம்பி ஏமாறாதீங்க.. ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை
சென்னை: ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக மோசடி நடைபெற்று வருகிறது. நம்பி ஏமாற வேண்டாம் என்றும், இதுபோன்று மோசடியில் ஈடுபடுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி பல காலமாக மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருவது வழக்கம்தான். இருப்பினும், சோஷியல் மீடியாக்களில் எங்கு திரும்பினாலும் திரைப்படங்களில் நடிக்க குழந்தை நட்சத்திரங்கள் தேவை, துணை நட்சத்திரங்கள் தேவை எனும் விளம்பரங்கள் தற்போது அதிக அளவில் கண்ணில் படுகின்றன.

அதேபோல, முக்கியமான பிராண்டுகளின் விளம்பரங்களில் நடிக்க ஆட்கள் தேவை, போட்டோ ஷுட் இலவசம், முன்தொகையாக குறைந்தபட்ச தொகை செலுத்த வேண்டும் என்று கூறி மோசடி சம்பவங்களும் நடைபெற்று வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி தயாரிப்பு நிறுவனங்களின் பெயரில் மோசடிகள் செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகப் புகார்கள் கூறப்படுகின்றன.
இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் உலக நாயகன் கமல்ஹாசன் நீண்டகாலமாகவே படத் தயாரிப்புகளில் ஈடுபடாமல் இருந்து வந்தார். விக்கிரமின் மாபெரும் வெற்றிக்குப் பின்னர் படத் தயாரிப்பில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் கமல்ஹாசன். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மூலம் முன்னணி நட்சத்திர நடிகர்களின் படங்களைத் தயாரிப்பதற்கு முன்வந்துள்ளார். தற்போது, சிவகார்த்திகேயனின் அமரன், லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவின் 48 ஆவது படமான தக் லைஃப் உள்ளிட்ட படங்கள் தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி சிலர் மோசடி செயல்களில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்தவொரு காஸ்டிங் ஏஜென்டுகளையும் நாங்கள் நியமிக்கவில்லை என்பதை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.
நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகள் எவ்வகையில் உங்களை வந்தடைந்தாலும் அதை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறோம். எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை அனுமதி இல்லாமல் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன் மூலம் எச்சரிக்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபலமான நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்படும் திரைப்படங்களில் நடிப்பதற்கு ஆட்கள் தேவை என்று அவ்வப்போது சோஷியல் மீடியாக்களில் விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதில், சில விளம்பரங்கள் போலியான தகவல்களையும் பரப்பி வருவதாகக் கூறப்படுகிறது. இதேபோல, லைக்கா நிறுவனத்தின் பெயரில் சில நாட்களுக்கு முன்பு போலி விளம்பரங்கள் வெளியாகியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், தற்போது கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் பெயரில் சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் உண்மையான தகவலா என்பதை உறுதி செய்து கொண்டு செயல்படுவதன் மூலம் இதுபோன்ற மோசடி சம்பவங்களில் இருந்து தப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications